4 நாள் டெஸ்ட்: ஃபாலோ ஆன் விதிமுறையில் முக்கிய மாற்றம்!

வழக்கமாக ஆறு மணி நேரம் டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டிக்கு ஆறரை மணி நேரம்... 
4 நாள் டெஸ்ட்: ஃபாலோ ஆன் விதிமுறையில் முக்கிய மாற்றம்!

டிசம்பர் 26 அன்று தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நான்கு நாள் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கான புதிய விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

நூறு வருடங்ளுக்கு முன்பு, அதாவது 1800களில் மூன்று நாள், நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. உலக லெவன் அணியுடன் ஆஸ்திரேலிய 2005-ல் விளையாடிய டெஸ்ட் போட்டி, 6 நாள் டெஸ்டாக விளையாடப்பட்டது. அதற்கு அதிகாரபூர்வ அந்தஸ்தும் அளித்தது ஐசிசி (ஆனால் அந்த டெஸ்ட் போட்டி நான்கு நாளில் முடிவுபெற்றது.). பல வீரர்கள் 4 நாள் டெஸ்ட் போட்டியை ஐசிசிக்குப் பரிந்துரை செய்துள்ளார்கள். இதனால் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பது பலருடைய கணிப்பு.

இதை அமல்படுத்த முன்வந்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம். டிசம்பர் இறுதியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் 4 நாள் டெஸ்ட் போட்டியை நடத்தவுள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. இது பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படும். இந்திய அணியால் பாக்ஸிங் டே டெஸ்டில் பங்கேற்கமுடியாததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2004-05-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் ஜிம்பாப்வே அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடாததால் இதற்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

2019 உலகக் கோப்பை போட்டி வரை 4 நாள் டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐசிசி அனுமதி தந்துள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கும் ஐசிசி அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான புதிய விதிமுறைகளை ஐசிசி வகுத்துள்ளது.

அதன்படி நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் ஒருநாளைக்கு 98 ஓவர்கள் வீசவேண்டும். ஐந்து நாள் டெஸ்டில் 90 ஓவர்கள் வீசினால் போதும். 

வழக்கமாக ஆறு மணி நேரம் டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டிக்கு ஆறரை மணி நேரம். 

ஃபாலோ ஆன் உண்டாக்குவதற்கு ஓர் அணி 200 ரன்கள் முன்னிலை பெறவேண்டும் என்பது அவசியமில்லை. இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி 150 ரன்கள் பின்தங்கியிருந்தால் அந்த அணி ஃபாலோ ஆன் பெற்றதாக அர்த்தம். போட்டியில் முடிவு எட்டப்படவேண்டும் என்பதற்காக இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுபோன்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கான புதிய, முக்கியமான விதிமுறைகளை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையிலான நான்கு நாள் டெஸ்ட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com