தோனி, கெய்ல் அளவுக்கு என்னிடம் சக்தி கிடையாது: இரட்டைச் சத நாயகன் ரோஹித் சர்மா பேட்டி

மூன்று இரட்டைச் சதங்களில் எது சிறந்தது எனத் தேர்வு செய்வது கடினம்... 
தோனி, கெய்ல் அளவுக்கு என்னிடம் சக்தி கிடையாது: இரட்டைச் சத நாயகன் ரோஹித் சர்மா பேட்டி

ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருந்தேன் என 2-வது ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமெடுத்த ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதலில் 126 பந்துகளில் 116 ரன்கள் குவித்திருந்த ரோஹித், கடைசி 27 பந்துகளில் 92 ரன்கள் (11 சிக்ஸ், 3 பவுண்டரி) குவித்தார். இது ரோஹித் சர்மாவின் 3-வது இரட்டைச் சதம். ஒருநாள் போட்டியின் சரித்திரத்தில் இதுவரை எந்தவொரு வீரரும் 3 இரட்டைச் சதங்களை எடுத்ததில்லை.

2-வது ஒருநாள் போட்டி முடிவடைந்தபிறகு ரோஹித் சர்மாவை இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி கண்டார். அப்போது ரோஹித் சர்மா கூறியதாவது:

அவர்களாக என்னை ஆட்டமிழக்காமல் நானாக அவுட் ஆகக் கூடாது, தவறு செய்யாமல் விளையாடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இறுதி வரை விளையாடவேண்டும் என எண்ணினேன். ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருந்தேன். 

மூன்று இரட்டைச் சதங்களில் எது சிறந்தது எனத் தேர்வு செய்வது கடினம். மூன்றும் முக்கியமான தருணங்கள் எடுத்த இரட்டைச் சதங்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த இரட்சைச் சதம், அந்தத் தொடரின் கடைசிப் போட்டி. ஜெயிக்கும் அணி தொடரை வெல்லும். இலங்கைக்கு எதிராக எடுத்த 264 ரன்கள், மூன்று மாத காயத்தில் உண்டான ஓய்வுக்குப் பிறகு எடுத்தது. என்னால் மீண்டும் பெரிதாக ரன்கள் எடுக்கமுடியுமா என்கிற தடுமாற்றத்தில் அப்போது நான் இருந்தேன். இப்போது, முதல் ஒருநாள் போட்டியில் தோற்ற பிறகு இந்தப் போட்டியில் ஜெயித்தாகவேண்டிய கட்டாயம். 

நானும் தவனும் மாறி மாறி ரன் எடுக்கவேண்டும் என முடிவு செய்திருந்தோம். ஒரு பேட்ஸ்மேனுக்கு ஒரு பந்துவீச்சாளர் தொடர்ந்து ஆறு பந்துகளை வீசக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால் நல்ல தொடக்கம் கிடைத்தது. 

என்னுடைய பலம், டைமிங். தோனி, கெய்ல் அளவுக்கு என்னிடம் சக்தி கிடையாது சரியான டைமிங்கில் அடித்து ரன் எடுப்பதுதான் என் பாணி. அதைத்தான் நேற்று நான் செய்தேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com