ரோஹித் சர்மாவுக்குத் திருப்புமுனை அளித்த முரளி விஜய்யின் தோல்விகள்!

சச்சின் தொடக்க வீரராகக் களமிறங்கி எப்படிப் பல சாதனைகள் படைத்தாரோ அதற்கு நிகரான திறமையையும் பங்களிப்பையும்... 
ரோஹித் சர்மாவுக்குத் திருப்புமுனை அளித்த முரளி விஜய்யின் தோல்விகள்!

ரோஹித் சர்மாவின் பல சாதனைகளுக்கும் முக்கிய காரணம், தோனி; அவரால்தான் தொடக்க வீரராகக் களமிறங்கி ரோஹித் பல சாதனைகளைப் படைத்துள்ளார் என்றொரு கருத்து நிலவுகிறது. உண்மைதான். ஆனால் தோனி அப்படியொரு முடிவு எடுப்பதற்கு முக்கியக் காரணம், முரளி விஜய்!

ஆம். முக்கியமான கட்டத்தில் முரளி விஜய் உண்டாக்கிய சொதப்பல்களும் அதனைத் தொடர்ந்த தோனியின் முடிவுகளுமே ரோஹித் சர்மாவுக்குப் புதிய பாதையை அமைத்தன.

2013 சாம்பியன்ஸ் டிராபியின்போது நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களினால்தான் இந்திய அணியில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டது. அதுதான் முரளி விஜய்யை ஒருநாள் அணியிலிருந்து வெளியேற்றியது. ரோஹித் சர்மாவைத் தொடக்க வீரராகக் களமிறக்கியது. அன்று ஆரம்பித்தன ரோஹித்தின் வாணவேடிக்கைகள்.

2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இந்திய அணியின் முதல் தேர்வாக இருந்த தொடக்க வீரர்கள் - முரளி விஜய் & ஷிகர் தவன். இங்கிலாந்து கிளம்பும்முன்பு பேட்டியளித்த கேப்டன் தோனி, இவர்களிருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறக்கப்படுவார்கள் என்று கிட்டத்தட்ட நேரடியாகவே சொன்னார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதுபோல விஜய்யும் தவனும் சாம்பியன்ஸ் டிராபியிலும் பங்களிப்பார்கள் என நம்பிக்கையாக உள்ளேன். ஒருநாள் என்பது வேறுவகை கிரிக்கெட் என்றாலும் நல்ல தொடக்கம் கிடைத்தால் அதை நம்மால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். விஜய்யும் தவனும் தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடிவருகிறார்கள் என்று பேட்டியளித்தார். 

இதனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தொடக்க வீரர்களாக விஜய்யும் தவனும்தான் களமிறங்குவார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.

அணியில் இடம்பெற்ற ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் அதற்குமுன்பு தொடக்க வீரர்களாக களமிறங்கியிருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபிக்குச் சிறப்புத் தொடக்க வீரர்களாகத் தேர்வானது விஜய்யும் தவனும் மட்டுமே. போட்டி தொடங்குவதற்கு முன்பு 

இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது இந்தியா. வழக்கமான பயிற்சி ஆட்டங்கள்தானே என்றுதான் அப்போது எல்லோரும் எண்ணினார்கள். ஆனால் முரளி விஜய்யைப் பின்னுக்குத் தள்ளி ரோஹித்தை முன்னுக்குக் கொண்டுவந்ததில் அப்பயிற்சி ஆட்டங்களுக்கு முக்கியப் பங்குண்டு.

இரு பயிற்சி ஆட்டங்களிலும் விஜய்யும் தவனுமே தொடக்க வீரர்களாக அனுப்பப்பட்டார்கள். இலங்கைக்கு எதிராக 18 ரன்கள் எடுத்த விஜய், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் 1 ரன்னில் அவுட் ஆனார். தவனும் சிறப்பாக ஒன்றும் ஆடவில்லை. விஜய்க்குச் சமமாகவே குறைவான ரன்கள் எடுத்து அவரும் தடுமாறவே செய்தார். தினேஷ் கார்த்திக் இரு பயிற்சி ஆட்டங்களிலும் சதமெடுத்து தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டார்.

தோனி வசம் இருந்த திட்டங்கள் இதனால் மாற்றத்துக்கு ஆளாகின. இரு தொடக்க வீரர்களுமே பயிற்சி ஆட்டங்களில் சொதப்பியெடுத்து விட்டார்கள். இவர்களை நம்பி எப்படிப் பொறுப்பை ஒப்படைக்கமுடியும்? அதிலும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஒவ்வொரு ஆட்டமே கிட்டத்தட்ட நாக்அவுட் போலதான். ஒன்றில் தோற்றாலும் அரையிறுதி சிக்கல் ஆகிவிடும். 

போட்டி தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஆட்டத்தில் டாஸில் தோற்ற தோனி இவ்வாறு சொன்னார்: அணியில் விஜய் இல்லை. (தவனுடன் இணைந்து) ரோஹித் சர்மா தொடக்க வீரராக ஆடுவார். தினேஷ் கார்த்திக்கும் அணியில் உண்டு என்றார்.

விஜய், தவன் இருவரில் யாரை நீக்கலாம் என்கிற ஒரு தருணத்தில் விஜய்யை வெளியேற்றினார் தோனி.

இந்திய ரசிகர்களுக்கு இது புதிய செய்தி. அதுவரை ரோஹித் சர்மா மீது யாருக்கும் பெரிய நம்பிக்கை கிடையாது. மறுபடியும் சொதப்புவாரோ என்றுதான் பலரும் பயந்தார்கள்.

ஆனால், ரோஹித் சர்மாவைத் தைரியமாகத் தொடக்க வீரராகக் களமிறக்கினார் தோனி. அவருடைய இந்தச் சமயோசிதமான முடிவுகள் இந்திய ஒருநாள் அணிக்கு மிகப்பெரிய மாற்றங்களையும் பலன்களையும் அளித்தன. சச்சின் தொடக்க வீரராகக் களமிறங்கி எப்படிப் பல சாதனைகள் படைத்தாரோ அதற்கு நிகரான திறமையையும் பங்களிப்பையும் அணிக்கு வழங்கி வருகிறார் ரோஹித் சர்மா. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாருமே எதிர்பார்க்காத விதத்தில் தொடக்க வீரர்களாக ரோஹித்தும் தவனும் களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் பொறுமையாக ரன்கள் சேர்த்தார்கள். முதல் 5 ஓவர்களில் 15 ரன்கள்தான். ஆனால் போகப்போக தெ.ஆ. பந்துவீச்சாளர்களைக் கடுப்பேற்றினார்கள். 21 ஓவர்கள், 127 ரன்களுக்குப் பிறகுதான் இந்த ஜோடியைப் பிரிக்கமுடிந்தது. இந்தியா 331 ரன்கள் குவித்து அந்த ஆட்டத்தில் வெற்றி பெற இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளம் முக்கியக் காரணமாக அமைந்தது. அன்றிலிருந்து விஜய்யை மறந்தது இந்திய அணி. 

அந்தப் போட்டி முழுக்க ரோஹித்தும் தவனும் நம்பவேமுடியாத அளவுக்குப் பிரமாதமாக விளையாடி இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்குப் பெரிதும் உதவினார்கள். ஷேவாக் - கம்பீருக்குப் பிறகு இந்திய அணி தேடிக்கொண்டிருந்த தொடக்க வீரர்கள் இவர்கள்தான் என்பது அப்போட்டியில் உறுதியானது. அந்தப் போட்டியில் 363 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் மற்றும் போட்டி நாயகன் என்கிற பெருமைகளைப் பெற்றார் தவன். 5 ஆட்டங்களில் 177 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, அதில் இரு அரை சதங்கள் எடுத்து அணியின் முழு நம்பிக்கையையும் பெற்றார்.

கிடைத்த வாய்ப்பை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார் ரோஹித் சர்மா. பல சாதனைகளைப் படைத்தார். சாம்பியன்ஸ் டிராபியில் கிடைத்த முடிவுகளுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணிக்கு முரளி விஜய் தேவைப்படவில்லை. ஏன் இன்னொரு தொடக்க வீரர் கூட அவசியப்படவில்லை. 2015 ஒருநாள் உலகக்கோப்பைக்கு ரோஹித்தும் தவனும்தான் சிறப்புத் தொடக்க வீரர்கள்.

 இந்தப் போட்டியிலும் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் எடுத்தார் தவன். இந்திய வீரர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ரோஹித்துக்கு இரண்டாமிடம். ஒரு சதமும் இரு அரை சதமும் எடுத்தார். இந்த வருட சாம்பியன்ஸ் டிராபியிலும் அதே கூட்டணி தொடர்ந்தது. அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முதலிரண்டு இடம் தவன் மற்றும் ரோஹித்துக்குத்தான். தவன் 338 ரன்களும் ரோஹித் 304 ரன்களும் எடுத்து ஒவ்வொரு ஐசிசி போட்டியிலும் இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி நிறைய ரன்கள் எடுத்தார்கள். இடையில் ராகுல், ரஹானே வந்தாலும் இந்த இருவரும் இன்றுவரை முதன்மையான தொடக்க வீரர்களாகத் திகழ்கிறார்கள்.

ஒருவேளை 2013 சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டங்களில் முரளி விஜய் ஒரு அரை சதம் எடுத்திருந்தாலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராகத் தேர்வாகியிருப்பார். ரோஹித்துக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால் அன்று கிடைத்த சிறிய வாய்ப்பையும் அப்படியே தன் பக்கம் திருப்பிக்கொண்டார் ரோஹித் சர்மா. 

இப்போது ஒருநாள் போட்டியில் 3 இரட்டைச் சதங்கள் எடுத்து தன்னிகரற்ற வீரராக உள்ளார் ரோஹித் சர்மா.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதலில் 126 பந்துகளில் 116 ரன்கள் குவித்திருந்த ரோஹித், கடைசி 27 பந்துகளில் 92 ரன்கள் (11 சிக்ஸ், 3 பவுண்டரி) குவித்தார். இது ரோஹித் சர்மாவின் 3-வது இரட்டைச் சதம். ஒருநாள் போட்டியின் சரித்திரத்தில் இதுவரை எந்தவொரு வீரரும் 3 இரட்டைச் சதங்களை எடுத்ததில்லை.

இதற்கெல்லாம் தொடக்க அமைந்தது 2013 சாம்பியன்ஸ் டிராபி தான். இதனால் தோனிக்கு மட்டுமல்ல, முரளி விஜய்யுக்கும் சேர்த்துதான் ரோஹித் நன்றி சொல்லவேண்டும்! 

ரோஹித் சர்மாவின் பேட்டிங் சாதனைகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் எடுத்த இந்தியர்

2013 - ரோஹித் சர்மா 209 ரன்கள்
2014 - ரோஹித் சர்மா 264 ரன்கள்
2015 - ரோஹித் சர்மா 150 ரன்கள்
2016 - ரோஹித் சர்மா 171* ரன்கள்
2017 - ரோஹித் சர்மா 208* ரன்கள்

சாம்பியன்ஸ் டிராபியும் திருப்புமுனையும்

2013 சாம்பியன்ஸ் டிராபிக்கு முந்தைய பேட்டிங் சராசரி: 

30.82 (2 சதங்கள், 13 அரை சதங்கள்)

2013 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகான பேட்டிங் சராசரி:

58.81 (14 சதங்கள், 21 அரை சதங்கள்)

அதேபோல இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறபோது ரோஹித் சர்மாவின் பேட்டிங் புதிய ஆக்ரோஷம் கொள்கிறது.

இந்திய அணி முதலில் பேட்டிங்: ரோஹித் சர்மா 

2013 சாம்பியன் டிராபிக்கு முந்தைய பேட்டிங் சராசரி: 

இன்னிங்ஸ் - 34, பேட்டிங் சராசரி - 25.37; ஒரு சதங்கள், 4 அரை சதங்கள்

2013 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகான பேட்டிங் சராசரி:

இன்னிங்ஸ் - 35, பேட்டிங் சராசரி - 72.62; 9 சதங்கள், 8 அரை சதங்கள்

ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதங்கள்

ரோஹித் சர்மா - 3

இதர 2398 வீரர்களில் கிடைத்த இரட்டைச் சதங்கள் - 4

இந்திய வீரர்கள் இரட்டை சதம் (ஒரு நாள் போட்டி) 

சச்சின் டெண்டுல்கர் 200* (2010) vs தென்னாப்பிரிக்கா

விரேந்தர் சேவாக் 219 (2011) vs மே.இ. தீவுகள்

ரோஹித் சர்மா 209 (2013) vs ஆஸ்திரேலியா

ரோஹித் சர்மா 264 (2014) vs இலங்கை

ரோஹித் சர்மா 208* (2017) vs இலங்கை

சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக ஸ்கோர்

ரோஹித் சர்மா 264

மார்ட்டின் குப்தில் 237* 
விரேந்தர் சேவாக் 219 
கிறிஸ் கெயில் 215 
ரோஹித் சர்மா 209
ரோஹித்
சர்மா 208*
சச்சின் டெண்டுல்கர் 200*

எம்.எஸ்.தோனி, கிறிஸ் கெயில் ஆகிய வீரர்கள் போன்று நான் அதிக சக்திவாய்ந்தவன் கிடையாது. ஆனால், பந்து வரும் நேரத்தை கணித்து என்னால் விளையாட முடியும் என்றார் ரோஹித். தன் பலத்தை அறிந்துவைத்துக் கொண்டு திறமையைச் சரியான முறையில் வெளிப்படுத்துகிறார். இதுதான் ரோஹித்தின் தனித்தன்மை. முதலில் மெதுவாக ரன்கள் சேர்ப்பது, 100 ரன்களுக்குப் பிறகு வெளுத்து வாங்குவது என்கிற வழிமுறையைத்தான் எப்போதும் அவர் பயன்படுத்துகிறார். 

கோலி போன்ற ஓர் மகத்தான வீரர் உள்ள அணியில் அவருக்கு நிகராகப் புகழ்பெறுவதும் அவரைத் தாண்டிச் சாதிப்பதும் எளிதல்ல. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியினால் முடியாத சில சாதனைகளையும் ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு இதைவிடவும் வேறு கொடுப்பினை இருக்கமுடியுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com