ஆஷஸ் டெஸ்ட்: ஸ்மித் 229*, மிட்செல் மார்ஷ் 181*; ஆஸ்திரேலியா 549/4

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் இரட்டைச் சதம் எடுத்துள்ளார்... 
ஆஷஸ் டெஸ்ட்: ஸ்மித் 229*, மிட்செல் மார்ஷ் 181*; ஆஸ்திரேலியா 549/4

ஆஸ்திரேலியா 549/4 (ஸ்மித் 229*, மார்ஷ் 181*) vs இங்கிலாந்து 403 ரன்கள். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் முன்னிலை.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். மிட்செல் மார்ஷும் பிரமாதமாக விளையாடி 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதனால் முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.

பெர்த்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 403 ரன்கள் குவித்தது. மலான் 140 ரன்களும் பேர்ஸ்டோவ் 119 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது ஆஸ்திரேலியா. நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 62 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 122 பந்துகளில் 92 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இன்று 138 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். பிறகு ஷான் மார்ஷ்ஜ் 28 ரன்களில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கிய மிட்செல் மார்ஷ் ஸ்மித்துக்கு அருமையான இணையாக விளங்கினார். இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதால் 88-வது ஓவரின்போது 300 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. மதிய உணவு இடைவேளையின்போது  4 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை ஆஸ்திரேலியா எளிதாக எட்டிவிடும் நிலை உருவானது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்மித் 150 ரன்களும் மார்ஷ் 50 ரன்களும் எட்டினார்கள். இருவரும் 133 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணி அமைத்து விரைவாக ரன்கள் எடுத்துவந்தார்கள். 108-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 400 ரன்களைத் தொட்டது. மேலும் விக்கெட் எதுவும் எடுக்கமுடியாத காரணத்தால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள். இதனால் அவர்களது பந்துவீச்சு பலவீனமாக இருந்ததால் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. 17 பவுண்டரிகளுடன் 130 பந்துகளில் மார்ஷ் சதத்தை எட்டினார். தேநீர் இடைவேளையின்போது 115 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள்
எடுத்தது ஆஸ்திரேலியா.

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதோடு இரு முக்கியமான பேட்ஸ்மேன்களும் சதத்தைத் தாண்டி விளையாடி வந்ததால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரைத் தொடவுள்ளதை எளிதாகக் கணிக்கமுடிந்தது. 

ஸ்மித் - மார்ஷ் ஆகிய இருவரும் 277 பந்துகளில் 200 ரன்கள் எடுத்து வலுவான கூட்டணி அமைத்தார்கள். இதன்பிறகு 1 சிக்ஸர் 26 பவுண்டரிகளுடன் 301 பந்துகளில் இரட்டைச் சதமெடுத்தார் ஸ்மித். இவருடைய அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து பந்துவீச்சு நிலைகுலைந்து போனது.

ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை ஸ்மித்தும் மார்ஷும் மேலும் வலுப்படுத்தினார்கள். பிறகு மார்ஷ் 150 ரன்களை எட்டினார். கடைசியில் இருவரும் 461 பந்துகளில் 300 ரன்கள் கூட்டணி அமைத்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சைத் தொடர்ந்து வெறுப்பேறினார்கள். இதனால் இன்றைய தினம் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் மோசமாக அமைந்தது.

3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 152 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 549 ரன்கள் எடுத்து வலுவான நிலையை எட்டியுள்ளது. ஸ்மித் 229, மார்ஷ் 181 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி இதுவரை 146 ரன்கள் முன்னிலை பெற்று இந்த டெஸ்ட் போட்டியையும் வெல்லும் நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com