தொடர் வெற்றி: புதிய சாதனைகள் படைத்துள்ள இந்திய அணி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்குப் பிறகு, இந்தியா இதுவரை எந்தவொரு ஒருநாள் தொடரிலும்... 
தொடர் வெற்றி: புதிய சாதனைகள் படைத்துள்ள இந்திய அணி!

இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. 

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், ஹிமாசலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை. பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில், முதல் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இந்தியா. இப்போது மூன்றாவது ஒருநாள் போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

சொந்த மண்ணில், கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்குப் பிறகு, இந்தியா இதுவரை எந்தவொரு ஒருநாள் தொடரிலும் தோல்வியைச் சந்தித்ததில்லை. 2016-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி 3-0 என வெற்றி பெற்றதிலிருந்து வெற்றிப் பயணம் தொடர்கிறது. இதுவரை 8 தொடர் வெற்றிகளைக் கண்டு சாதனை படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன்பு தொடர்ச்சியாக நவம்பர் 2007 முதல் ஜூன் 2009 வரை 6 தொடர் வெற்றிகளைத் தொடர்ச்சியாகப் பெற்றதே சாதனையாக இருந்தது. இப்போது தொடர்ச்சியாக 8 தொடர் வெற்றிகளுடன் வெற்றி பவனியில் உள்ளது இந்திய அணி. 

1980 முதல் 1988 வரை மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ச்சியாக 14 ஒருநாள் தொடர் வெற்றிகளைப் பெற்றது. அந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இந்திய அணி அச்சாதனையை அடுத்த வருடம் தகர்க்குமா?

இந்திய அணியின் தொடர்ச்சியான ஒருநாள் தொடர் வெற்றிகள்

ஜிம்பாவுக்கு எதிராக: 3-0
நியூஸிலாந்துக்கு எதிராக: 3-2
இங்கிலாந்துக்கு எதிராக: 2-1
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக: 3-1
இலங்கைக்கு எதிராக: 5-0
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக: 4-1
நியூஸிலாந்துக்கு எதிராக: 2-1
இலங்கைக்கு எதிராக: 2-1

இந்திய அணி இந்த வருடம் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி விகிதம் முதன்மையானது. இதற்கு முன்பு 2008-ல் இந்திய அணி 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19 வெற்றிகளைப் பெற்றது. அச்சாதனையை இந்தமுறை முறியடித்துள்ளது. எனினும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி அதிக வெற்றிகள் பெற்ற வருடம் - 1998. அந்த வருடம் இந்திய அணிக்கு 24 வெற்றிகள் கிடைத்தன. ஆனால் அப்போது 40 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்றது. இதனால் அதிக வெற்றிகள் கிடைத்தாலும் வெற்றி விகிதம் இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 1998-ல் குறைவுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com