ரஹானே, ராகுலை விடவும் இந்திய அணி ஷிகர் தவனுக்கு முக்கியத்துவம் தருவது ஏன்?

முக்கியமான போட்டிகளில், முக்கியமான கட்டங்களில் நிறைய ரன்கள் எடுத்து இந்திய அணிக்குப் பெரிதும் உதவுகிறார்...
ரஹானே, ராகுலை விடவும் இந்திய அணி ஷிகர் தவனுக்கு முக்கியத்துவம் தருவது ஏன்?

ஷிகர் தவன் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும்போதெல்லாம் அவர் மீது கடுமையான விமரிசனங்கள் வைக்கப்படும். இந்திய அணியில் தவனுக்குப் பதிலாக ரஹானே அல்லது ராகுல் ஆகிய இருவரில் ஒருவரைச் சேர்க்கலாம் என்கிற ஆலோசனைகள் அடிக்கடி தெரிவிக்கப்படும்.

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சத்தமில்லாமல் சாதித்துக்கொண்டிருக்கிறார் தவன். முக்கியமான போட்டிகளில், முக்கியமான கட்டங்களில் நிறைய ரன்கள் எடுத்து இந்திய அணிக்குப் பெரிதும் உதவுகிறார். அதனால்தான் பல விமரிசனங்களுக்கு மத்தியில் ராகுல், ரஹானேவை விடவும் தவனுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது இந்திய அணி. ரோஹித் சர்மாவுக்குச் சரியான இணை ஷிகர் தவன் தான் என்கிற நிலைப்பாட்டில் கோலி, ரவி சாஸ்திரி ஆகிய இருவரும் உறுதியாக உள்ளார்கள். இதனால் அவ்வப்போது தவன் சொதப்பும்போதெல்லாம் அதைக் கண்டு இந்திய ரசிகர்கள்தான் பதறுகிறார்கள். வழக்கம்போல அடுத்தமுறையும் தவனைத் தொடக்க வீரராகக் களமிறக்குகிறது இந்திய அணி.

இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. இந்தத் தொடரில் ஷிகர் தவன் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தவனுக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் கிடைத்துள்ள வெற்றி எனக் கூறலாம்.

முதல் ஒருநாள் போட்டியில் ரஹானேவை அணியில் சேர்க்காததற்கு இந்திய அணியைப் பலரும் விமரிசனம் செய்தார்கள். ஆனால் அது சரியான முடிவு என்பதை தவன் கடந்த இரு ஆட்டங்களிலும் நிரூபித்துள்ளார். ரோஹித், தவன் ஆகிய இருவரும் அணியில் விளையாடும்போது ராகுல், ரஹானே ஆகியோருக்கு இடமில்லை என்கிற இந்திய அணியின் தெளிவுக்கு ஏற்றாற்போல அமைகின்றன போட்டி முடிவுகளும். 

சமீபத்திய ஒருநாள் ஐசிசி போட்டிகளில் கோலி, ரோஹித் சர்மா, தோனியை விடவும் எப்போதும் அதிக ரன்கள் எடுக்கக்கூடியவராக உள்ளார் தவன். இதனால் அணியிலிருந்து நீக்கமுடியாத நிலைமையை உருவாக்கியுள்ளார். ஆனால், கடந்த வருடம் ஃபார்மை இழந்ததன் காரணமாக இந்திய அணியில் தனக்கான இடத்தையும் இழந்தார் தவன். அது குறித்து அவரிடம் கேட்டபோது, 'அதைப் பற்றி மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. நான் சிறப்பாக விளையாடாத நேரத்தில் எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டினேன். நான் சிறப்பாக ஆடுகிறபோதும், எனது ஆட்டத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்' என்றார்.

மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் ஷிகர் தவன். இலங்கைத் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் கடைசிக் கட்டத்தில் முரளி விஜய்க்கு காயம் ஏற்பட்டதால், தவன் சேர்க்கப்பட்டார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், டெஸ்ட் போட்டியில் பெரிய அளவில் ரன் குவித்ததோடு, இப்போது ஒரு நாள் கிரிக்கெட் அணியிலும் தனது இடத்தை வலுப்படுத்திக் கொண்டார்.

2013 சாம்பியன்ஸ் டிராபி

363 ரன்கள் எடுத்து போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்று போட்டி நாயகனாகவும் தேர்வானார். 5 ஆட்டங்களில் 363 ரன்கள். 2 சதங்கள், ஒரு அரை சதம். 

2015 ஒருநாள் உலகக்கோப்பை

இந்தப் போட்டியிலும் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் எடுத்தார் தவன். 8 ஆட்டங்களில் 412 ரன்கள். 2 சதங்கள், ஒரு அரை சதம். 

2017 சாம்பியன்ஸ் டிராபி

338 ரன்கள் எடுத்து போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை மீண்டும் பெற்றார். 5 ஆட்டங்களில் 338 ரன்கள். 1 சதம், இரு அரை சதங்கள். 

குறைந்த இன்னிங்ஸில் 12-வது ஒருநாள் சதமெடுத்த வீரர்கள்

நேற்றைய போட்டியில் தனது 12-வது ஒருநாள் சதத்தை எடுத்தார் தவன்.

74 - குயிண்டன் டி காக் 
81 - ஆம்லா    
83 - விராட் கோலி     
90 - டேவிட் வார்னர்      
95 - ஷிகர் தவன் 

அதிவேகமாக 4000 ஒருநாள் ரன்களை எட்டிய இந்திய வீரர்கள் 

நேற்றைய ஒருநாள் போட்டியில் குறைந்த (95) இன்னிங்ஸ்களில் 4,000 ரன்களை எட்டிய 2-ஆவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஷிகர் தவன் பெற்றார். முன்னதாக, விராட் கோலி 93 இன்னிங்ஸ்களில் அந்த இலக்கை எட்டியுள்ளார்.

93 இன்னிங்ஸ் - கோலி 
95 இன்னிங்ஸ் - தவன் 
105 இன்னிங்ஸ் - கங்குலி 
108 இன்னிங்ஸ் - சித்து 
110 இன்னிங்ஸ் - கம்பீர் 
112 இன்னிங்ஸ் - டெண்டுல்கர் 

2019 உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. சமீபத்தில் வேறு எந்த ஒரு வீரரை விடவும் அந்த மண்ணில் அதிக ரன்கள் எடுத்தவர் தவன். இதனால் அப்போட்டியில் ரோஹித்துடன் களமிறங்க தவனைத் தவிர வேறு யாரையாவது இந்திய அணி தேர்வு செய்யும் என்று நம்புகிறீர்களா? இந்த நிலையை உருவாக்குவதில் தவன் எப்போதும் வெற்றியடைகிறார். அதில்தான் அவருடைய தனித்துவம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com