ரோஹித் ஷர்மா அதிவேக சதம்: இந்தியா 260 ரன்கள் குவிப்பு

2-ஆவது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா சதம் விளாசினார்.
ரோஹித் ஷர்மா அதிவேக சதம்: இந்தியா 260 ரன்கள் குவிப்பு

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசரா பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி துவக்கத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மா, இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தார். மாபெரும் இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இதனால் 35 பந்துகளில் சதம் விளாசினார். டி20-யில் அதிவேக சதம் விளாசியவர்களில் தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லருடன் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டார்.

மொத்தம் 43 பந்துகளைச் சந்தித்து 10 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் குவித்து சமீரா பந்துவீச்சில் தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு துவக்க வீரரான ராகுல், தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். அவர், 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். மொத்தம் 49 பந்துகளைச் சந்தித்து 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசி பிரதீப் பந்துவீச்சில் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த தோனி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 28 பந்துகளில் திசரா பெரேரா பந்துவீச்சில் போல்டானார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com