இரண்டே நாள்களில் முடிந்த நான்கு நாள் டெஸ்ட் போட்டி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது...
இரண்டே நாள்களில் முடிந்த நான்கு நாள் டெஸ்ட் போட்டி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

பாக்ஸிங் டே அன்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா, 78.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 125 ரன்கள் எடுத்தார். கேப்டன் டி வில்லியர்ஸ் 53, பவுமா 44, தொடக்க வீரர் டீன் எல்கர் 31, டி காக் 24, பிலாண்டர் 10 ரன்கள் எடுக்க எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர். பெலுக்வாயோ 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே தரப்பில் கைல் ஜார்விஸ், கிறிஸ் போஃபு தலா 3 விக்கெட்டுகளும், கிரீம் கிரீமர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. கைல் ஜார்விஸ் 23, ரையான் பர்ல் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இதர வீரர்களில் 4 பேர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். எஞ்சியவர்கள் டக் அவுட் ஆகி நடையைக் கட்டினர். ஜிம்பாப்வே 30.1 ஓவர்களில் 68 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்க தரப்பில் மோர்னே மோர்கெல் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் எடுத்தார். ககிசோ ரபாடா, பெலுக்வாயோ தலா 2 விக்கெட்டுகளும், பிலாண்டர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் பின்தங்கிய ஜிம்பாப்வே அணி 'ஃபாலோ ஆன்' பெற்றது. 2-ஆவது இன்னிங்ஸில் அந்த அணி மீண்டும் மோசமாக விளையாடி 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே அணியில் எர்வின் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் மஹாராஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

முதல் இன்னிங்ஸில் சதமெடுத்த எய்டன் மார்க்ரம் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டி, இரண்டே நாள்களில் முடிவடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com