பாப்பம்பாடி டூ ஐபிஎல்: நடராஜனின் தலையெழுத்தை மாற்றிய சூப்பர் ஓவர்! (வீடியோ)

நேரத்துக்கு சாப்பாடுகூட எனது மகனுக்கு கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட சூழலிலும்...
பாப்பம்பாடி டூ ஐபிஎல்: நடராஜனின் தலையெழுத்தை மாற்றிய சூப்பர் ஓவர்! (வீடியோ)

நேற்றைய ஐபிஎல் ஏலத்தில் அதிக கவனத்துக்கு ஆளானவர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். இடக்கை பந்துவீச்சாளர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் - சாந்தா தம்பதிக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். தங்கராஜ்-சாந்தா தம்பதியினர் சிறிய கடை நடத்தி வருகின்றனர். இவர்களது மூத்த மகன் நடராஜன் (21). சேலம் ஏவிஎஸ் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு பயின்று வரும் நடராஜன், ஆல்ரவுண்டர் ஆவார். இந்தியா சிமென்ட்ஸ், கெம்ப்ளாஸ்ட் சன்மார் உள்ளிட்ட கிளப்புகளுக்காக விளையாடியுள்ள இவர், 2014-இல் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்காக விளையாடினார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன் அணிக்காக விளையாடினார். அதில் சிறப்பாக ஆடியதன் மூலம் 10-ஆவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. 

10-ஆவது ஐபிஎல் சீசனுக்காக நடைபெறும் இந்த ஏலத்தில் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றார்கள். இதிலிருந்து அனைத்து அணிகளும் சேர்ந்து அதிகபட்சம் 76 வீரர்களை வாங்க முடியும் என்கிற நிலைமை இருந்தது. ஐபிஎல்-லில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 27 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். அனைத்து அணிகளும் தலா 22 முதல் 24 வீரர்களை தங்கள் அணியில் வைத்துக் கொள்ளும் திட்டத்தில் இந்த ஏலத்தில் பங்கேற்றன. இந்த முறை வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டது. இஷாந்த் சர்மா, இயான் மோர்கன், மிட்செல் ஜான்சன், பட் கம்மின்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஏஞ்செலோ மேத்யூஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் முறையே ரூ.23.35 கோடிக்கும், ரூ.23.10 கோடிக்கும் ஹைதராபாத் அணி ரூ.20.9 கோடிக்கும், கொல்கத்தா அணி ரூ.19.75 கோடிக்கும், பெங்களூர் அணி ரூ.17.8 கோடிக்கும், புணே அணி ரூ.17.5 கோடிக்கும் வீரர்களை குஜராத் அணி ரூ.14.35 கோடிக்கும், மும்பை அணி ரூ.11.55 கோடிக்கும் வீரர்களை வாங்கலாம் என்கிற நிலைமை இருந்தது. மொத்தத்தில் 8 அணிகளும் சேர்ந்து அதிகபட்சமாக ரூ.148 கோடிக்கு வீரர்களை வாங்க வாய்ப்புகள் இருந்தன.

சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் பலர் நல்ல விலைக்கு ஏலம் போயினர். அவர்களில் அதிகபட்சமாக தமிழக வீரர் டி.நடராஜன் ரூ.3 கோடிக்கு ஏலம் போனார். இவர் தனது அடிப்படை விலையைவிட (ரூ.10 லட்சம்) 30 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயிருக்கிறார். அவரை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராக்கை ரூ.2.6 கோடிக்கு ஹைதராபாதும், இடது கை வேகப்பந்து வீச்சாளரான அனிகெட் செளத்ரியை ரூ.2 கோடிக்கு பெங்களூரும், ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கெளதமை ரூ.2 கோடிக்கு மும்பை அணியும், தமிழக வீரர் முருகன் அஸ்வினை ரூ.1 கோடிக்கு டெல்லி அணியும் வாங்கின.

ஐபிஎல் போட்டியில் ஆடும் வாய்ப்பைப் பெற்றிருப்பது குறித்து இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கூறியதாவது: இது கனவா அல்லது நனவா என தெரியவில்லை. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவேன். அதன்மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என ஒருபோதும் நினைத்ததில்லை.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றபோது கடுமையான நெருக்கடியில் இருந்தேன். ஆனால் அஸ்வின், முளி விஜய், தமிழ்நாடு பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி ஆகியோர் எனக்கு தன்னம்பிக்கை ஊட்டினர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற எனது கனவு நனவாகிவிட்டது. அடுத்ததாக ஐபிஎல் போட்டியில் மிகப்பெரிய வீரர்களை சந்திக்கவும், அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன்தான் எனது முன்மாதிரி. ஐபிஎல் போட்டியின்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என்றார்.

10-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கும் நடராஜனின் தாயார் சாந்தா செய்தியாளர்களிடம் கூறியது: நாங்கள் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நேரத்துக்கு சாப்பாடுகூட எனது மகனுக்கு கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட சூழலிலும் நடராஜனுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்ததால், கிரிக்கெட் மட்டை வாங்கிக் கொடுத்தோம். அவரும் சிறப்பாக விளையாடினார். அதன்மூலம் இப்போது பஞ்சாப் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எனது மகன் மேலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என்று ஆனந்தக் கண்ணீருடன் தெரிவித்தார்.

ஏலத்துக்கு முன்பு நடராஜனின் அடையாளமாகத் திகழ்ந்தது ஒரு சூப்பர் ஓவர். டிஎன்பிஎல் டி20 போட்டியில்  திண்டுக்கல் அணிக்கு எதிராக 13 ரன்கள் எடுக்கவேண்டிய தூத்துக்குடியால் 5 ரன்களே எடுக்கமுடிந்தது. 6 பால்களும் யார்க்கர் வீசி அசத்தினார்! அப்போதே 25 வயது நடராஜனின் ஜாதகம் மாற்றி எழுதப்பட்டுவிட்டது. 

சென்னையைத் தாண்டியும் கிரிக்கெட் திறமைகள் உள்ளன என்று தமிழ்நாட்டுக்கே நிருபித்துள்ளார் நடராஜன். இன்னொன்று, நடராஜன் டிஎன்பிஎல்-லில் இருந்து நேராக ஐபிஎல்-லுக்கு விளையாட வரவில்லை. இந்த வருட ரஞ்சிப் போட்டியிலும் நாலு பெரிய தலைகள் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நிறைய விக்கெட்டுகள் எடுத்து இந்திய அளவில் கவனம் பெற்றார். மேலும் சரியான வெளிச்சம், சரியான சம்பளத்துக்காகக் காத்திருந்தார். அத்தருணம் நேற்று அமைந்துவிட்டது.

இடக்கை வேகப்பந்து வீச்சாளருக்கு எப்போதும் ஒரு மவுசு இருக்கும். ஜாகீர் கானுக்குப் பிறகு நல்ல இடக்கை பந்துவீச்சாளர் இந்திய டெஸ்ட் அணிக்குக் கிடைக்கவில்லை. உனாட்கட், அரவிந்த் என்கிற முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. இந்த வாய்ப்பை நடராஜன் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மனம் விரும்பினாலும் ஐபிஎல்-லில் அதிகச் சம்பளம் பெற்று, அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தும் காணாமல் போனவர்களின் பட்டியல் வேறு பயமுறுத்துகிறது. எப்போதோ ஐபிஎல்-லில் தேர்வான இன்னொரு தமிழக இளம் வீரர் பாபா அபரஜித் இன்றுவரை ஒரு ஐபிஎல் போட்டியிலும் இடம்பெறவில்லை. எனவே அதிக ஆசை வேண்டாம். ஒரு புதிய வேகப்பந்துவீச்சாளர், கிடைத்த சம்பளத்துக்கு, திறமைக்கு உரிய பங்களிப்பு அளித்துள்ளார் என்கிற பெயரை முதலில் அவர் அடையட்டும். காலம் நிறைய உள்ளது. மெல்ல மெல்ல அடுத்த அடியை எடுத்துவைக்கட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com