இந்திய அணியை வெறுப்பேற்றிய ஸ்டார்க்! ஆஸ்திரேலியா 256/9

முதல் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. 
இந்திய அணியை வெறுப்பேற்றிய ஸ்டார்க்! ஆஸ்திரேலியா 256/9

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புணேவில் இன்று தொடங்கியது. தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, 7-ஆவது டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பிடித்தார்.

ஆரம்பம் முதல் மிகவும் கவனமாக விளையாடினார் தொடக்க வீரர்களான வார்னரும் ரென்ஷாவும். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் பக்குவமாக விளையாடினார் வார்னர். 

15-வது ஓவரில் வார்னரை அற்புதமாக கிளின் போல்ட் செய்தார் ஜெயந்த் யாதவ். ஆனால் அது நோ பால் என்பதால் தப்பிப் பிழைத்தார் வார்னர். 

இதன்பிறகு பெரிய ஆபத்தின்றி 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி.

அடுத்த ஓவரை உமேஷ் யாதவுக்கு வழங்கினார் கேப்டன் விராட் கோலி. அப்போது திருப்பம் ஏற்பட்டது. 38 ரன்களில் வார்னரை க்ளீன் போல்ட் செய்தார் யாதவ். ஆனால் அடுத்தப் பந்திலேயே ரென்ஷா ரிரையர் ஹர்ட் முறையில் 36 ரன்களில் மைதானத்தை விட்டு வெளியேறினார். வயிற்று வலி தொடர்புடைய உடல்நலக் குறைவால் அவர் வெளியேறியதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஸ்மித், மார்ஷ் என புதிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் நிலைமை உருவானது.

முதல்நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. ஷான் மார்ஷ், ஸ்மித் ஆகிய இருவரும் தலா 1 ரன்னில் களத்தில் இருந்தார்கள். 

இதன்பிறகு ஷான் மார்ஷின் விக்கெட்டை ஜெயந்த் யாதவ் வீழ்த்தினார். அவர் 16 ரன்கள் எடுத்தார். பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ஜடேஜா பந்துவீச்சில் 22 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 95 பந்துகள் வரை தாக்குப்பிடித்த கேப்டன் ஸ்மித் 27 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

தேநீர் இடைவேளையின்போது 63 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து சற்று பாதுகாப்பான நிலைமையில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. ரென்ஷா 38, மிட்செல் மார்ஷ் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

ஆனால் நாளின் பிற்பகுதியில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸி. அணியினர் திணறினார்கள். குறிப்பாக உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகிய இருவரும் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தினார்கள்.

மார்ஷை 4 ரன்களில் வீழ்த்தினார் ஜடேஜா. இதன்பிறகு கடகடவென விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. வேட் 8 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இந்திய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட ரென்ஷாவை 68 ரன்களில் வீழ்த்தினார் அஸ்வின். இன்று இந்திய அணிக்குக் கடும் சவாலாக இருந்தவர் ரென்ஷா. அவருடைய விக்கெட்டும் வீழ்ந்தபிறகு ஆஸி. அணி மேலும் நிலைகுலைந்தது.

82-வது ஓவரை வீசவந்த உமேஷ் யாதவ் அடுத்தடுத்த பந்துகளில் ஓகீஃப் மற்றும் லயனை வீழ்த்தினார். இருவருமே ரன் எதுவும் இடுக்காமல் வெளியேறினார்கள். கடைசி விக்கெட்டுக்கு ஹேஸில்வுட்டுடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியை நன்கு வெறுப்பேற்றிய அவர், சரியான இடைவெளிகளில் சிக்ஸும் பவுண்டரிகளுமாக அடித்து ரன்களை உயர்த்தினார். 47 பந்துகளில் அரை சதமும் எடுத்தார் ஸ்டார்க். 

முதல் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 94 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. ஹேஸில்வுட் 1, ஸ்டார்க் 57 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 4, அஸ்வின் 2, ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com