இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புணேவில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
புணேவில் பயிற்சியில்  ஈடுபட்ட இந்திய கேப்டன் விராட் கோலி
புணேவில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கேப்டன் விராட் கோலி

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புணேவில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, 7-ஆவது டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளை முறையே 3-0, 4-0 என்ற கணக்கில் "ஒயிட் வாஷ்' ஆக்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவையும் "ஒயிட் வாஷ்' ஆக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஆசிய மண்ணில் கடைசியாக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்த முறை வெற்றி பெற முயற்சிக்கும். ஆனால் பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. எனவே இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
மிரட்டும் கோலி: இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் மிக வலுவாக உள்ளது.
கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, கேப்டன் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
இவர்களில் கோலி உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார். கடைசியாக விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளில் 1,457 ரன்கள் குவித்துள்ள கோலியின் சராசரி 80 ஆகும். கடந்த 4 தொடர்களிலும் இரட்டைச் சதமடித்துள்ள கோலி, ஆஸ்திரேலிய அணியையும் புரட்டியெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முரளி விஜய், புஜாரா, அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் நல்ல
ஃபார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்துக்கு எதிராக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ராகுல், இந்த முறை ரன் குவிக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்வரிசையில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
ஜெயந்துக்கு வாய்ப்பு: இந்திய அணி இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என இரு வேகப்பந்து வீச்சாளர்களுடனும், அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் என 3 சுழற்பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3-ஆவது சுழற்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டரான ஜெயந்த் யாதவ் இடம்பெறும்போது இந்திய அணியின் பேட்டிங் மேலும் வலுவடையும்.
அச்சுறுத்தும் அஸ்வின்: டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரு இடங்களில் இருக்கும் அஸ்வினும், ஜடேஜாவும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த சீசனில் அஸ்வின் 13 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளையும், ஜடேஜா 10 போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வார்னர், ஸ்மித்...: ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மட் ரென்ஷா, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.
ஆனால் இவர்களில் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருவது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாகும். எனவே வார்னரும், ஸ்மித்தும் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். ஒருவேளை அவர்கள் இருவரும் விரைவாக ஆட்டமிழக்கும்பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கடும் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.
மற்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சாளர்களை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? எப்படி ரன் குவிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் ஸ்டீவ் ஓ"கீப், நாதன் லயன் ஆகியோரை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.
இந்தியா (உத்தேச லெவன்): கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், மட் ரென்ஷா, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஓ"கீப், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட்.

போட்டி நேரம்: காலை 9.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

எங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு தொடரும் சவாலானதுதான். எந்த தொடரையும் உயர்வாகவோ அல்லது குறைவாகவோ நாங்கள் பார்ப்பதில்லை. எங்களுடன் மோதிய எல்லா அணிகளுமே தரமான அணிகள்தான். அடுத்து மோதவுள்ள ஆஸ்திரேலிய அணியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தத் தொடரை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

விராட் கோலி, இந்திய கேப்டன்.


ஹர்பஜன் சிங் போன்றவர்கள் இந்தத் தொடரில் நாங்கள் 4-0 என்ற கணக்கில் தோற்போம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்படி நினைக்கவில்லை. இந்திய அணிக்கு சவால் அளிக்க விரும்புகிறோம். இந்திய அணியில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். அதேநேரத்தில் எங்களுடைய திட்டத்தை எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்படுத்துவார்கள் என நினைக்கிறேன். இக்கட்டான நேரங்களில் எங்கள் வீரர்கள் கடுமையாகப் போராடக்கூடியவர்கள். எனவே இந்தத் தொடர் சவால் மிக்கதாக இருக்கும்.


-ஸ்டீவன் ஸ்மித், ஆஸ்திரேலிய கேப்டன்.

துளிகள்...

இந்திய அணி கடைசியாக விளையாடிய 19 போட்டிகளில் ஒன்றில்கூட தோல்வியைச் சந்திக்கவில்லை.

புணேவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதன்மூலம் இந்தியாவின் 25-ஆவது டெஸ்ட் மைதானம் என்ற பெருமையைப் பெறுகிறது புணே எம்.சி.ஏ. மைதானம்.

இந்த டெஸ்ட் போட்டியில் உலகின்டாப்-2 பேட்ஸ்மேன்கள் (ஸ்மித், கோலி), டாப்-3 பெளலர்கள் (அஸ்வின், ஜடேஜா, ஹேஸில்வுட்) விளையாடுகின்றனர்.

33 வயதான ஷான் மார்ஷ் முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-ஆவது இடத்திலும் உள்ளன. இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 3-0 அல்லது 4-0 என்ற கணக்கில் வென்றாலொழிய முதலிடத்தைப் பிடிக்க முடியாது.
இந்திய அணி சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளில் 17 வெற்றிகளையும், 3 டிராவையும் பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் கடைசியாக விளையாடிய 20 போட்டிகளில் 15 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளது. எஞ்சிய போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

கடைசியாக 2005-இல் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா. அதன்பிறகு இரு முறை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியுள்ள ஆஸ்திரேலியா 2-0 மற்றும் 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.

2013-இல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது அஸ்வின்-ஜடேஜா கூட்டணி 53 விக்கெட்டுகளை வீழ்த்தியது.

90 டெஸ்ட்...

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 40 வெற்றிகளையும், இந்தியா 24 வெற்றிகளையும் பெற்றுள்ளன. ஒரு போட்டி "டை'யில் முடிந்துள்ளது. எஞ்சிய 25 போட்டிகள் டிராவில் முடிந்தன.


மைதானம் எப்படி?

புணேவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்த ஆடுகளம் மெதுவாகவே இருக்கும் என இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். இங்கு பந்து பெரிய அளவில் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என தெரிகிறது. எனினும் முதல்முறையாக போட்டி நடைபெறுவதால் மைதானம் எப்படி இருக்கும் என்பதை மிக உறுதியாகக் கூற முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com