பெயர்க் குழப்பத்தால் ஐபிஎல் வாய்ப்பை இழந்த வீரர்!

இந்தச் செய்தி ஐபிஎல் ஏலம் தொடங்க இருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியானதால்...
பெயர்க் குழப்பத்தால் ஐபிஎல் வாய்ப்பை இழந்த வீரர்!

இரண்டு கிரிக்கெட் வீரர்கள். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே பெயர்கள். ஹர்ப்ரீத் சிங், ஹர்மீத் சிங்.

மத்திய பிரதேச ஆல்ரவுண்டர் ஹர்ப்ரீத் சிங், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் தன்னை நிச்சயம் தேர்வு செய்வார்கள் என்கிற கனவில் இருந்தார். ஒரே காரணம் தான். சமீபத்தில் நடந்துமுடிந்த சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் ஹர்ப்ரீத் சிங். 4 போட்டிகளில் 211 ரன்கள். 

அதே நாளில் ஹர்மீத் சிங் என்கிற முன்னாள் ஐபிஎல் வீரர், அந்தேரி ரயில் நிலையத்தின் அருகே கார் விபத்து காரணமாக கைது செய்யப்பட்டார். ஆனால் ஊடகங்களில் அவருடைய பெயர், ஹர்ப்ரீத் சிங் என்றே வெளியானது.

ஹர்ப்ரீத் சிங் தான் அந்த விபத்தை ஏற்படுத்தினார் என்கிற செய்தி ஐபிஎல் ஏலம் தொடங்க இருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியானதால் அது ஹர்ப்ரீத்தின் ஐபிஎல் வாய்ப்பைப் பாதித்துள்ளது. அன்று நடைபெற்ற ஏலத்தில் ஹர்ப்ரீத் சிங்கை எந்த ஓர் அணியும் தேர்வு செய்யவில்லை.

நான் மட்டுமல்ல, இந்த விவகாரத்தால் என் பெற்றோரும் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். ஊடகங்களில் தவறாக வெளியான செய்திகளால்தான் நான் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாமல் போனேனோ என்கிற சந்தேகமும் எனக்கு ஏற்படுகிறது. என் திறமை காரணத்தால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் பரவாயில்லை. ஆனால் தவறே செய்யாமல் அதற்குத் தண்டனை அனுபவித்திருந்தால் அது மிகவும் துரதிர்ஷ்டம். ஊடகங்கள் மீது எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. என் புகழுக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்டான விளைவுகளுக்கு யார் பொறுப்பு? மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் எனக்கு ஆதரவாக உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்கள் என்கிறார் ஹர்ப்ரீத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com