32 வயதில் திறமையை முதல்முறையாக நிரூபித்த ஆஸி. வீரர் ஓ’கீஃப்!

ஒரு திறமைசாலி தன் முழுத் திறமையை வெளிப்படுத்த என்னென்ன தடைகளை உடைக்கவேண்டியிருக்கிறது, இல்லையா?
32 வயதில் திறமையை முதல்முறையாக நிரூபித்த ஆஸி. வீரர் ஓ’கீஃப்!

முதல் டெஸ்டில் இந்திய அணி இப்படி மண்ணைக் கவ்வும் என யார் எதிர்பார்த்திருக்கமுடியும்? ஆனால் 32 வயது ஸ்டீவ் ஓ’கீஃப் 12 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியை நிலைகுலையச் செய்து தன் திறமையை முதல்முறையாக உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

புணே டெஸ்ட் போட்டிக்கு முன்பு 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடிய ஓ’கீஃப் அணியில் இடம்பிடிக்கவே மிகவும் சிரமப்பட்டார். அவர் டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே லாயக்கானவர் என்கிற முத்திரை வேறு அவருக்குச் செல்லுமிடமெல்லாம் தடையாக இருந்தது. இருப்பினும் மிகுந்த நம்பிக்கையுடன் புணே டெஸ்டில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அட்டகாசமாகப் பயன்படுத்தி, டெஸ்ட் அரங்கில் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்க வழி ஏற்படுத்திவிட்டார்.

இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியில் இருமுறை 3 விக்கெட்டுகள் எடுத்ததே அவருடைய அதிகபட்ச சாதனையாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 14 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். ஆனால் புணே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்ததால் அதை மிகச்சரியாகப் பயன்படுத்தி இதில் மட்டுமே 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். என்ன ஒரு மாற்றம்! இதை யாராவது கணித்திருக்கமுடியுமா? 

2005-ல் முதல் தர கிரிக்கெட்டில் ஆட ஆரம்பித்தார் ஓ’கீஃப். ஆனால் அடுத்த முதல்தர போட்டிக்கான வாய்ப்பு 2009-ல் தான் அவருக்குக் கிடைத்தது. ஒரு சுழற்பந்துவீச்சாளருக்குரிய தனிப்பட்ட தகுதிகள் இல்லை என்று குறை சொல்லியே பல ஆண்டுகளாக அவருக்கு நல்ல வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்தன. ஒரு திறமைசாலி தன் முழுத் திறமையை வெளிப்படுத்த என்னென்ன தடைகளை உடைக்கவேண்டியிருக்கிறது, இல்லையா?

புணே டெஸ்ட் போட்டியில் ஓ’கீஃப்-பைத் தேர்வு செய்திருக்கக்கூடாது என்பதே கிரிக்கெட் பிரபலம் வார்னேவின் கருத்தாக இருந்தது. அந்தளவுக்கு இவரை விடவும் மற்ற பந்துவீச்சாளர்களைப் பலரும் நம்பினார்கள். ஆனால் ஆஸி. கேப்டன் ஸ்மித் ஓ’கீஃப் மீது அதிக நம்பிக்கை வைத்து அணியில் சேர்த்தார். அதன் பலன் அவருக்குக் கிடைத்துள்ளது. 

முதல்தர கிரிக்கெட்டில் 225 விக்கெட்டுகள் எடுத்தபிறகும் ஓ’கீஃப் மீது பல்வேறு காரணங்களை முன்வைத்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தன. முக்கியமாக அணியின் முதன்மை சுழற்பந்துவீச்சாளராக லயன் ஆனபிறகு ஓ’கீஃப் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். மேலும் வாய்ப்புகள் கிடைத்தபோது காயங்களால் நல்ல தருணங்களை இழந்தார். இப்படியாக டெஸ்ட் வாழ்க்கை அவருக்குக் கண்ணாமூச்சி காட்டியது.

எதற்கும் ஓர் ஆரம்பம் என்று இருக்கவேண்டும் இல்லையா! புணே டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளை எடுத்து வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார் ஓ’கீஃப். இந்திய டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளார் ஓ’கீஃப். 

ஓ’கீஃப் என்கிற பெயரைக் கேட்டாலே இந்திய ரசிகர்கள் அலறுகிறார்கள். மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் என்ன செய்யப் போகிறார்? இவருடைய அச்சுறுத்தலைத் தாண்டி இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லுமா? என்றெல்லாம் நிறைய யோசிக்கவேண்டியிருக்கிறது. இந்த ஒரு மனிதரால் நிறைய கேள்விகளுக்கு ஆளாகியுள்ளது இந்திய அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com