டெஸ்ட்: இந்திய அணி உலக சாதனை படைக்குமா?

மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே இன்றுவரை உலக சாதனையாக உள்ளது.
டெஸ்ட்: இந்திய அணி உலக சாதனை படைக்குமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

புணேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 94.5 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய இந்திய அணி, 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு சுருண்டது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 87 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி. கேப்டன் ஸ்மித், 187 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அவர் 109 ரன்கள் எடுத்து அணி வெற்றியை நோக்கி நகர அடித்தளமிட்டார்.

கடைசி இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மட்டும் இந்திய அணி சாதித்துவிட்டால் அது உலக சாதனையாக இருக்கும். 2003-ல் செயிண்ட் ஜான்ஸ்-ல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே இன்றுவரை உலக சாதனையாக உள்ளது.

மற்றபடி சேஸிங்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி எடுத்ததை விட அதிக ரன்கள் பலமுறை எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 1939-ல், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 696 இலக்குடன் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி, கடைசியில் 5 விக்கெட் இழப்புக்கு 654 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது. அதுவே சேஸிங்கில் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். ஆனாலும் இங்கிலாந்து அணியால் அந்தப் போட்டியில் வெற்றி பெறமுடியவில்லை. அதேபோல 2002-ல் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து 451 ரன்கள் எடுத்தும் (இலக்கு 550 ரன்கள்) தோல்வியை தழுவியது.

இதனால் கொல்கத்தா டெஸ்டில் நடந்த அதியசம் போல புணேவிலும் அதிசயம் நிகழ்த்தப்பட்டு, இந்திய அணி 441 ரன்கள் எடுத்து உலக சாதனை படைக்குமா என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com