333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது இந்தியா.
வெற்றிக் களிப்பில் ஆஸ்திரேலிய அணியினர்.
வெற்றிக் களிப்பில் ஆஸ்திரேலிய அணியினர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது இந்தியா.
இதன்மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ரன் அடிப்படையில் 2-ஆவது மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதுதவிர தொடர்ச்சியாக 19 டெஸ்ட் போட்டிகளில் தோற்காமல் இருந்த இந்திய அணியின் சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
441 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 33.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு சுருண்டது. இதனால் போட்டி 3 நாள்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ"கீஃப் முதல் இன்னிங்ûஸப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் 35 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். மொத்தத்தில் அவர் இந்தப் போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
புணேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 94.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ரென்ஷா 68, மிட்செல் ஸ்டார்க் 57 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு சுருண்டது. கே.எல்.ராகுல் 64 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டீவ் ஓ"கீஃப் 13.1 ஓவர்களில் 35 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலிய அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவன் ஸ்மித் 59, மிட்செல் மார்ஷ் 21 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ஸ்மித் 18-ஆவது சதம்: 3-ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் 31, மேத்யூ வேட் 20 ரன்கள் சேர்த்து வெளியேற, மிட்செல் ஸ்டார்க் களம்புகுந்தார்.
மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித், "டிரிங்க்ஸ்' இடைவேளைக்குப் பிறகு 187 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 18-ஆவது சதம் இது. இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 5-ஆவது சதத்தை விளாசியுள்ளார். அதேநேரத்தில் இந்திய மண்ணில் அவரால் எடுக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். நீண்ட நேரமாக இந்திய பெளலர்களை சோதித்த ஸ்மித் 202 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு மிட்செல் ஸ்டார்க் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30, நாதன் லயன் 13, ஓ"கீஃப் 6 ரன்களில் நடையைக் கட்ட, ஆஸ்திரேலியாவின் 2-ஆவது இன்னிங்ஸ் 87 ஓவர்களில் 285 ரன்களோடு முடிவுக்கு வந்தது.
இந்தியத் தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
441 ரன்கள் இலக்கு: இதையடுத்து 441 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இந்திய அணியில் முரளி விஜய் 2 ரன்களிலும், கே.எல்.ராகுல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் மூலம் மூன்றாவது நடுவரை அணுகியபோதும் பலன் கிடைக்கவில்லை. இதனால் இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே இரு டிஆர்எஸ் வாய்ப்புகளையும் வீணாக்கியது இந்தியா.
இதன்பிறகு வந்தவர்களில் புஜாரா மட்டுமே 31 ரன்கள் எடுத்தார். எஞ்சிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, 33.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டீவன் ஓ"கீஃப் 6 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 70 ரன்களை மட்டுமே கொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஓ"கீஃப் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 4-ஆம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.

துளிகள்...

2012

இந்திய அணி சொந்தமண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2012-இல்
இங்கிலாந்திடம் தோற்றது. அதன்பிறகு இப்போதுதான் தோல்வியை சந்தித்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, அதில் 17 வெற்றிகளையும், 3 டிராவையும் பதிவு செய்திருந்தது.

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில்
தொடர்ச்சியாக 19 டெஸ்ட் போட்டிகளில் தோற்காமல் இருந்த இந்திய அணியின்
சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஆஸ்திரேலியா.

12/70

இந்தப் போட்டியில் 70 ரன்களை மட்டுமே கொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டீவ் ஓ"கீஃப், இந்திய மண்ணில் சிறப்பான பந்துவீச்சைப் பதிவு செய்த வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 1979-80-இல் மும்பையில் நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்தின் இயான் போத்தம் 106 ரன்களை கொடுத்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இன்றளவும் வெளிநாட்டு வீரர் ஒருவரின் சிறப்பான பந்துவீச்சாக
உள்ளது.
இந்திய மண்ணில் சிறப்பான பந்துவீச்சைப் பதிவு செய்த ஆஸ்திரேலியர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ஓ"கீஃப். முன்னதாக 1959-60-இல் கான்பூரில் நடைபெற்ற டெஸ்டில் ஆலன் டேவிட்சன் 124 ரன்களைக் கொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஆஸ்திரேலியர் ஒருவரின் சிறப்பான பந்துவீச்சாக இருந்தது.

444

இந்த டெஸ்டில் இந்திய அணி 444 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 20 விக்கெட்டுகளையும் இழந்தது. சொந்த மண்ணில் குறைந்த பந்துகளில் இந்திய அணி 20 விக்கெட்டுகளையும் இழந்த போட்டி இதுதான்.


333

இந்தப் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதன் மூலம் சொந்த மண்ணில் ரன் அடிப்படையில் 2-ஆவது மோசமான தோல்வியை சந்தித்துள்ளது இந்தியா. அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக இந்திய அணி சந்தித்த 4-ஆவது மோசமான தோல்வி இது. 2004-இல் நாகபுரியில் இதே ஆஸ்திரேலிய
அணியிடம் 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே இந்தியாவின் மோசமான தோல்வியாக இன்றளவும் உள்ளது.

7

இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் தோற்றிருந்த ஆஸ்திரேலிய அணி, புணே டெஸ்டில் வென்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்கு முன்னர் 2004-இல் நாகபுரியில் நடைபெற்ற டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலிய அணி, அதன்பிறகு இந்திய மண்ணில் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் 7 தோல்விகளையும், 4 டிராவையும் பதிவு செய்திருந்தது. இந்த வெற்றிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி, ஆசிய மண்ணில் 9 டெஸ்ட் போட்டிகளில் தோற்றிருந்தது.

13

இந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து விராட் கோலி 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். டெஸ்ட் போட்டியில் அவருடைய மோசமான ஆட்டம் இதுதான். இதற்கு முன்னர் 2012-13-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்டில் அவர் 26 ரன்கள் எடுத்திருந்ததே மோசமான ஆட்டமாக இருந்தது.

4

இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் 13 பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் 13 பேர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பது இது 4-ஆவது முறையாகும்.


212

இந்தப் போட்டியில் இந்திய அணி இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 212 ரன்களே (105, 107) எடுத்தது. இது, சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 20 விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் எடுத்த மோசமான ரன்கள் ஆகும். இதற்கு முன்னர் 1956-57-இல் ஈடன் கார்டனில் நடைபெற்ற இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 20 விக்கெட்டுகளையும் இழந்து 272 ரன்கள் எடுத்திருந்ததே மோசமான ரன்களாக இருந்தது.

மிக மோசமான பேட்டிங்: கோலி வேதனை

டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. அது குறித்து அவர் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்களின் மிக மோசமான பேட்டிங் இதுதான்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி எங்களை முற்றிலுமாக வீழ்த்திவிட்டது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும். 3 நாள்களுமே நாங்கள் போதுமான அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை.
நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை ஆராய்வது அவசியம்.
ஆஸ்திரேலியர்கள் எங்களைவிட மிகச்சிறப்பாக ஆடினர்.
இந்தப் போட்டி முழுவதுமே அவர்கள் எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள்.
அந்த அணியினர் வெற்றிக்கு தகுதியானவர்கள். நாங்கள் இரு செஷன்களில் மிக மோசமாக ஆடிவிட்டோம். ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிக்கு எதிராக மோசமாக ஆடியபிறகு சரிவிலிருந்து மீள்வது கடினம். எனினும் இந்தத் தோல்விக்கு எதையாவது காரணம் காட்டி தப்பிக்க முடியாது.
நாங்கள் சரிவிலிருந்து மீண்டு வருவோம் என்பது உறுதி. இந்தப் போட்டிக்கு
முன்பாக 19 போட்டிகளில் தோற்காமல் இருந்திருக்கிறோம்.

இந்த நேரத்தில் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

ஸ்கோர் போர்டு

ஆஸ்திரேலியா-260
(மட் ரென்ஷா 68, ஸ்டார்க் 61,)உமேஷ் யாதவ் 4வி/32,
அஸ்வின் 3வி/63)


இந்தியா-105
(கே.எல்.ராகுல் 64,
ஸ்டீவன் ஓ"கீஃப் 6வி/35,
மிட்செல் ஸ்டார்க் 2வி/38)


ஆஸ்திரேலியா

டேவிட் வார்னர் எல்பிடபிள்யூ (பி) அஸ்வின் 10 (6)

ஷான் மார்ஷ் எல்பிடபிள்யூ (பி) அஸ்வின் 0 (21)
ஸ்டீவன் ஸ்மித் எல்பிடபிள்யூ (பி) ஜடேஜா 109 (202)
ஹேண்ட்ஸ்காம்ப் (சி) விஜய் (பி) அஸ்வின் 19 (34)
மட் ரென்ஷா (சி) இஷாந்த் (பி) ஜெயந்த் 31 (50)
மிட்செல் மார்ஷ் (சி) சாஹா (பி) ஜடேஜா 31 (76)
மேத்யூ வேட் (சி) சாஹா (பி) உமேஷ் 20 (42)
மிட்செல் ஸ்டார்க் (சி) ராகுல் (பி) அஸ்வின் 30 (31)
ஸ்டீவ் ஓ"கீஃப் (சி) சாஹா (பி) ஜடேஜா 6 (42)
நாதன் லயன் எல்பிடபிள்யூ (பி) உமேஷ் 13 (13)
ஜோஷ் ஹேஸில்வுட் நாட் அவுட் 2 (6)
உதிரிகள் 14

விக்கெட் வீழ்ச்சி: 1-10 (வார்னர்), 2-23 (ஷான் மார்ஷ்),
3-61 (ஹேண்ட்ஸ்காம்ப்), 4-113 (ரென்ஷா),
5-169 (மிட்செல் மார்ஷ்), 6-204 (மேத்யூ வேட்), 7-246 (ஸ்மித்), 8-258 (ஸ்டார்க்), 9-279 (லயன்), 10-285 (ஓ"கீஃப்).


பந்துவீச்சு: அஸ்வின் 28-3-119-4, ரவீந்திர ஜடேஜா 33-10-65-3, உமேஷ் யாதவ் 13-1-39-2, ஜெயந்த் யாதவ் 10-1-43-1,
இஷாந்த் சர்மா 3-0-6-0.


இந்தியா


முரளி விஜய் எல்பிடபிள்யூ (பி) ஓ"கீஃப் 2 (23)
கே.எல்.ராகுல் எல்பிடபிள்யூ (பி) லயன் 10 (9)
புஜாரா எல்பிடபிள்யூ (பி) ஓ"கீஃப் 31 (58)
விராட் கோலி (பி) ஓ"கீஃப் 13 (37)
அஜிங்க்ய ரஹானே (சி) லயன் (பி) ஓ"கீஃப் 18 (21)
அஸ்வின் எல்பிடபிள்யூ (பி) ஓ"கீஃப் 8 (11)
ரித்திமான் சாஹா எல்பிடபிள்யூ (பி) ஓ"கீஃப் 5 (13)
ரவீந்திர ஜடேஜா (பி) லயன் 3 (11)
ஜெயந்த் யாதவ் (சி) வேட் (பி) லயன் 5 (17)
இஷாந்த் சர்மா (சி) வார்னர் (பி) லயன் 0 (2)
உமேஷ் யாதவ் நாட் அவுட் 0 (1)
உதிரிகள் 12

விக்கெட் வீழ்ச்சி: 1-10 (விஜய்), 2-16 (ராகுல்), 3-47 (கோலி), 4-77 (ரஹானே), 5-89 (அஸ்வின்), 6-99 (சாஹா), 7-100 (புஜாரா), 8-102 (ஜடேஜா), 9-102 (இஷாந்த்), 10-107 (ஜெயந்த்).

பந்துவீச்சு: மிட்செல் ஸ்டார்க் 2-2-0-0, நாதன் லயன் 14.5-2-53-4, ஸ்டீவ் ஓ"கீஃப் 15-4-35-6, ஜோஷ் ஹேஸில்வுட் 2-0-7-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com