ஆஸி. அளித்த அதிர்ச்சி வைத்தியம்: விழித்துக் கொள்ளுமா இந்தியா?

புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது பலம் வாய்ந்த இந்திய அணி.
ஆஸி. அளித்த அதிர்ச்சி வைத்தியம்: விழித்துக் கொள்ளுமா இந்தியா?

புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது பலம் வாய்ந்த இந்திய அணி. 333 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது கோலி தலைமையிலான இந்திய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சிதான். ஆனால் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு நிச்சயம் இந்த வெற்றி ஆச்சர்யமானதாகவே அமைந்திருக்கிறது.

ஏனெனில், இந்திய அணி சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளில் 17 வெற்றிகளையும், 3 டிராவையும் பதிவு செய்திருந்தது. இதுதவிர உள்ளூர், வெளிநாடு என இரண்டையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 19 போட்டிகளில் தோல்வியை சந்திக்கவில்லை. வலுவான அணிகளான நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளை புரட்டியெடுத்த இந்திய அணி முறையே 3-0, 4-0 என்ற கணக்கில் "ஒயிட் வாஷ்' ஆக்கியிருந்தது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியோ, ஆசிய மண்ணில் கடைசியாக விளையாடிய 9 டெஸ்டுகளிலும் தோற்றிருந்தது. இந்திய மண்ணில் கடைசியாக 2004-இல் டெஸ்ட் போட்டியில் வென்றது ஆஸ்திரேலியா. அப்போது ஆடம் கில்கிறிஸ்ட், கிளன் மெக்ராத், ஷேன் வார்ன் போன்ற ஜாம்பவான்கள் அணியில் இருந்தார்கள்.
அதன்பிறகு இந்தியாவில் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோற்றிருந்தது. கடைசியாக 2013-இல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

1956 முதல் தற்போது வரையிலான காலத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணிகளில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அணியே மிகவும் பலவீனமானது என மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கூறியிருந்தார். கேப்டன் ஸ்மித்தையும், டேவிட் வார்னரையும் விரைவாக வீழ்த்திவிட்டால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்ப முடியாது என பரவலான எதிர்பார்ப்பு இருந்தது.

எனவே இந்தத் தொடரை இந்தியா 4-0 அல்லது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என எல்லோரும் கணித்தார்கள். தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்த உற்சாகத்தில் இருந்த இந்திய வீரர்களும், ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று நினைத்தார்கள். அந்த அதீத நம்பிக்கைதான் இந்தியாவின் தோல்விக்கு முதல் காரணமாக அமைந்தது. அதேநேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தை துல்லியமாக தெரிந்துகொண்ட ஆஸ்திரேலியா, அதற்கேற்றவாறு திட்டத்தை வகுத்து வெற்றி கண்டது.

புணே ஆடுகளம் முதல் நாளே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தபோதிலும், ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான ரென்ஷா ஆடிய விதம் அற்புதம். முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் டெஸ்ட் போட்டியில் ஆடும் ரென்ஷா, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமல்ல, வயிற்றுக் கோளாறையும் சமாளித்து முதல் இன்னிங்ஸில் 68 ரன்கள் விளாசினார். கடைசிக் கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் அதிரடியாக சேர்த்த 61 ரன்களால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்கோரை (260) எட்டியது ஆஸ்திரேலியா. அது அந்த அணிக்கு நம்பிக்கை தந்தது.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் கோலோச்ச முடியாது என்று நினைத்த இந்திய பேட்ஸ்மேன்கள், மோசமான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தனர். அதுவும் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியவரான ஸ்டீவ் ஓ"கீஃப், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கேகூட அவர் மீது பெரிய நம்பிக்கை கிடையாது என்பதுதான் உண்மை.

ஆனால் ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்து கொண்ட ஓ"கீஃப், கே.எல்.ராகுலின் விக்கெட்டை வீழ்த்தியபோது அவருக்குள் நம்பிக்கை துளிர்விட்டது. அதே ஓவரில் ரஹானேவையும், சாஹாவையும் வீழ்த்திய ஓ"கீஃப், முதல் இன்னிங்ஸில் 35 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் பின்தங்கியபோதே வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது. அதேநேரத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலையால் நம்பிக்கை பெற்ற ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சதமடிக்க, 285 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஓ"கீஃபையும், நாதன் லயனையும்விட அஸ்வினும், ஜடேஜாவும் அபாயகரமான பந்துவீச்சாளர்கள். அவர்களுடைய பந்துவீச்சை இந்திய மண்ணில் எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் அவர்கள் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு சதமடித்தார் ஸ்மித். அவர் சதமடித்தபோது, ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமாக மாறியிருந்தது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை ஏளனமாக நினைத்து ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள், வெற்றி இலக்கு 441 ரன்கள் என்றதுமே 2-ஆவது இன்னிங்ûஸ நெருக்கடியோடு அணுகினார்கள். அதுவும் முதல் இன்னிங்ஸில் கலக்கிய ஓ"கீஃப், 5-ஆவது ஓவரில் இந்தியாவின் முதல் விக்கெட்டான முரளி விஜயை வீழ்த்தி மிரட்ட ஆரம்பித்தார். ஏற்கெனவே நெருக்கடியில் இருந்த இந்திய அணிக்கு ஓ"கீஃபின் பந்துவீச்சு மேலும் அச்சுறுத்தலாக அமைந்தது. அதற்கு கேப்டன் கோலியும் தப்பவில்லை. 2-ஆவது இன்னிங்ஸிலும் ஓ"கீஃப் 6 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்தியா 107 ரன்களில் சுருண்டது.

இந்தப் போட்டியின் இரு இன்னிங்களிலும் சேர்த்து மொத்தம் 212 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. ஆக மொத்தம் ஓர் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா எடுத்த ஸ்கோரைக்கூட இந்திய அணியால் எட்ட முடியவில்லை. இந்த படுதோல்விக்கு இந்தியாவின் பேட்டிங் மட்டுமல்ல, ஃபீல்டிங்கும் காரணமாகும். ஸ்டீவன் ஸ்மித்துக்கு 3 முறை கேட்ச்சை கோட்டைவிட்டதால்தான் அவர் சதமடித்தார்.

புணே டெஸ்டில் அனைத்து துறைகளிலும் இந்திய அணியை முழுமையாக வீழ்த்திவிட்டது ஆஸ்திரேலியா. பெங்களூரில் நடைபெறவுள்ள 2-ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் தங்களின் தவறை திருத்திக் கொண்டாலொழிய இந்திய அணி தோல்வியிலிருந்து தப்ப முடியாது. எப்போதுமே ஓர் அணி தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவிக்கும்போது அது வீரர்களிடையே அதீத நம்பிக்கையை உருவாக்கும். அதனால் அவர்களுடைய ஆட்டத்தின் வேகம் குறையும். அதுபோன்ற நிலைதான் இப்போது இந்திய அணிக்கும் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் கண்ட படுதோல்வி தலைக் கணத்தில் இருக்கும் இந்திய வீரர்களை தட்டியெழுப்பும் எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது. இந்திய அணி விழித்துக் கொள்ளுமா?

ஒரே நாளில் ஹீரோவான ஓ"கீஃப்

32 வயதான ஸ்டீவ் ஓ"கீஃப், புணே டெஸ்ட் போட்டியோடு சேர்த்து மொத்தம் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். புணே போட்டிக்கு முன்பு வரை அவர் மொத்தம் 14 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். 5 விக்கெட் வீழ்த்தியது கிடையாது. ஆனால் புணே டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

இந்தியத் தொடரில் 2-ஆவது சுழற்பந்து வீச்சாளராக இடம்பெற்ற ஓ"கீஃப், இப்போது ஆஸ்திரேலியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்திருப்பதோடு, இந்திய மண்ணில் சிறப்பான பந்துவீச்சைப் பதிவு செய்த வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். முதல் போட்டியிலேயே 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஓ"கீஃப், இந்தத் தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com