கோலியுடனான பார்ட்னர்ஷிப் சிறந்த அனுபவம்: கேதார் ஜாதவ்

இந்திய கேப்டன் விராட் கோலியுடனான பேட்டிங் பார்ட்னர்ஷிப் சிறந்த அனுபவமாக உள்ளது என இளம் வீரர் கேதார் ஜாதவ் கூறினார்.
கோலியுடனான பார்ட்னர்ஷிப் சிறந்த அனுபவம்: கேதார் ஜாதவ்

இந்திய கேப்டன் விராட் கோலியுடனான பேட்டிங் பார்ட்னர்ஷிப் சிறந்த அனுபவமாக உள்ளது என இளம் வீரர் கேதார் ஜாதவ் கூறினார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புணேவில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 351 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இமாலாய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 63 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியுடன், இளம் வீரர் கேதார் ஜாதவ் இணைந்து, அணியை சரிவிலிருந்து மீட்டார்.
கோலி - ஜாதவ் ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர். கோலி, 105 பந்துகளில் 122 ரன்களும் (8 பவுண்டரி, 5 சிக்ஸர்), ஜாதவ், 76 பந்துகளில் 120 ரன்களும் (12 பவுண்டரி, 4 சிக்ஸர்) குவித்தனர். இதன் மூலம் இந்திய அணி 356 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
ஜாதவின் பேட்டிங் திறமையை கேப்டன் விராட் கோலி வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், இமாலய இலக்கை துரத்திப் பிடித்து அணிக்கு வெற்றிதேடித் தந்த ஜாதவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புணேவில் செய்தியாளர்களிடம் கேதார் ஜாதவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்வது பயனுள்ளதாக இருக்கிறது. அவரை எப்படி ஆட்டமிழக்கச் செய்வது அல்லது கட்டுப்படுத்துவது என பந்துவீச்சாளர்களின் குறி எப்பொழுதுமே கோலியை நோக்கியே இருக்கும். எனவே, மறுமுனையில் நிற்கும் பார்ட்னர்ஷிப் வீரர், கோலியின் பேட்டிங்கை கண்டு, பயன்பெற முடியும்.
குழந்தைப் பருவத்தில் டென்னிஸ் பந்தில் தான் நான் கிரிக்கெட் விளையாடுவேன். அப்பொழுது, ஸ்ட்ரைட் திசையில் மட்டுமே சிக்ஸர் விளாச முடியும. வேறு திசைகளில் அடித்தால் அவுட் என்பது எங்களுக்கு விதியாக இருந்தது.
இந்த அனுபவம், 30 யார்டு வட்டத்துக்குள் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வதற்கு எனக்கு கைகொடுத்தது. பொதுவாக வட்டத்துக்குள்ளும், அட்டாக் திசைகளிலும் ஃபீல்டர்கள் நிற்கும்போதே பெரிய அளவில் ரன் குவிக்க முடியும் என்பது பேட்ஸ்மேன்களின் எண்ணமாக இருக்கிறது.
ஆனால், எனது விஷயத்தில், ஃபீல்டர்கள் எங்கு நின்றாலும், எனது ஷாட்களை இயல்பாக நான் அடிக்கிறேன். ஒவ்வொரு ஆட்டமும் எனது கடைசிப் போட்டியை போன்று நினைத்து விளையாடுகிறேன். நாட்டின் சார்பாக நாம் விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் கொள்ளும்போது, 100 சதவீதம் சிறப்பாக விளையாட முடிகிறது. களத்தில் நிற்கும்போது நூறு சதவீதத் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறேன்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அணியின் வெற்றிக்கு உதவியதன் மூலம் எனக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. அழைப்புகள் நிறைய வருவதால் எனது செல்லிடப்பேசியை "சைலண்ட்' மோடில் வைத்து விட்டேன். இதனால், எனது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சிலர் நினைக்கிறார்கள்.
நடந்தவற்றை பற்றி அதிகம் பேச நான் விரும்பவில்லை. நிகழ்காலத்தில் என்னை நிலை நிறுத்திக் கொள்ளவே முயல்கிறேன் என்றார் கேதார் ஜாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com