ஜல்லிக்கட்டுப் போராட்டம்: கிரிக்கெட் வீரர் சேவாக் ஆதரவு!

பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
ஜல்லிக்கட்டுப் போராட்டம்: கிரிக்கெட் வீரர் சேவாக் ஆதரவு!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றம் மூலம் தடை பெற்றுள்ளது. இந்த தடையை மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்களும், சமூக நல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஜல்லிக்கட்டுக்குரிய தடையை நீக்கக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. இருப்பினும் ஜல்லிக்கட்டுக்குரிய தடை நீடித்து வருகிறது. இதனால், மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தடையை மீறிய இடங்களில் போலீஸார் தடியடி நடத்தினர். இந்நிலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே காமராஜர் சாலையின் நடைமேடையிலும், இணைப்புச் சாலையிலும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை காலை திடீரென போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டத்தில் முதலில் குறைந்தளவு இளைஞர்களே காணப்பட்டனர். ஆனால் நேரம் செல்லச்செல்ல இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நண்பகலுக்கு பின்னர் போராட்டத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும், பீட்டா அமைப்பை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் முகமது கயிஃப் நேற்று ட்வீட் செய்து தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்தார். இன்று பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: 

தமிழ்நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆர்வத்துடன் நடைபெறுகிற போராட்டத்தில் அமைதி தொடரவேண்டும். அமைதியான போராட்டம் எல்லோருக்குமான பாடமாக அமையும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com