ஆஸ்திரேலிய ஓபன்: 3-ஆவது சுற்றில் ஃபெடரர், கெர்பர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
கரீனா அடித்த பந்தை எதிர்கொள்ளும் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர்.
கரீனா அடித்த பந்தை எதிர்கொள்ளும் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2-ஆவது சுற்றில் 17 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனும், தரவரிசையில் 17-ஆம் இடம் வகிப்பவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அமெரிக்காவின் தகுதிச் சுற்று வீரரான நாஹ் ரூபினை எதிர்கொண்டார்.
2 மணி நேரம் 4 நிமிடம் ரசிகர்களை குதூகலப்படுத்திய இந்த ஆட்டத்தில் 7-5, 6-3, 7-6 (7/3) என்ற செட் கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்று 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அவர் தனது அடுத்த ஆட்டத்தில், நீண்ட நாள் எதிரியான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோதுகிறார்.
இப்போட்டியில் தகுதிச் சுற்று வீரருக்கு எதிராக ஃபெடரர் பெற்ற 2-ஆவது வெற்றி இதுவாகும். முன்னதாக கடந்த திங்கள்கிழமை ஆஸ்திரியாவின் ஜான் மெல்ஸரை, ஃபெடரர் தோற்கடித்திருந்தார்.
கடந்த ஆண்டில் முழங்காலில் செய்து கொண்ட அறுவைச் சிகிச்சை காரணமாக ஃபெடரரால் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இயலாமல் போனது. இதனால், கடந்த 14 ஆண்டுகளில் முதல் முறையாக உலகின் சிறந்த 10 வீரர்கள் பட்டியலில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் ஏடிபி உலகச் சுற்று இறுதிப்போட்டியிலும் ஃபெடரரால் தகுதி பெற முடியாமல் போனது.
ஃபெடரரிடம் தோல்வி கண்டு வெளியேறிய 20 வயது வீரரும், தரவரிசையில் 200-ஆவது இடம் வகிப்பவருமான நாஹ் ரூபின், 3 ஆண்டுகளுக்கு முன்னர், விம்பிள்டன்னில் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்.
தாமஸ் பெர்டிச், தனது 2-ஆவது சுற்று ஆட்டத்தில், அமெரிக்காவின் ரயான் ஹாரிஸன்னை 6-3, 7-6 (8/6), 6-2 என்ற செட் கணக்கில் விரட்டியடித்தார்.
ஆடவர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், தரவரிசையில் முதலிடம் வகிக்கும் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ரஷியாவின் தகுதிச் சுற்று வீரரான ஆன்ட்ரே ரூப்லெவ்வை 6-3, 6-0, 6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.
ஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் முர்ரே, தொடர்ந்து 9-ஆவது ஆண்டாக ஆஸ்திரேலிய ஓபனின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மேலும், ஓபன் ஏரா கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவு வரலாற்றில் 5 முறை இறுதி ஆட்டத்தில் முர்ரே தோல்விகண்டுள்ளார். 2010-இல் ரோஜர் ஃபெடரரிடமும், 2011, 2013, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடமும் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில் முர்ரே தோல்வி கண்டுள்ளார்.
எனவே, 6-ஆவது முறையாக மீண்டும் ஒரு தோல்வியை தன்னகத்தே சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதில் முர்ரே மிகவும் கவனமாக உள்ளார்.
முர்ரே தனது மூன்றாவது சுற்றில், அமெரிக்காவின் சாம் கியூரெரேயை எதிர்கொள்கிறார். கியூரெரே, தனது ஆட்டத்தில் உள்ளூர் வீரரான அலெக்ஸ் டி மினாரை 7-6 (7/5), 6-0, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது சுற்றை உறுதி செய்தார்.
ஆடவர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், இத்தாலியின் ஆன்ட்ரே செப்பியிடம் போராடி வீழ்ந்தார். 3 மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1-6, 6-7 (1/7), 6-4, 6-2, 10-8 என்ற செட் கணக்கில் செப்பி வாகை சூடினார்.
இந்த ஆட்டத்தில் பின்தங்கியபோது, கிர்ஜியோஸ் ஆவேசமாக செயல்பட்டு, நடுவரின் கண்டனத்துக்கு ஆளானார். மேலும், ராக்கெட்டை வீசியெறிந்து, தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுமுனையில் விளையாடிய 89-ஆம் நிலை வீரர் செப்பி, அமைதியாக தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்.
ஆட்டம் முடிந்து வெளியேறுகையில், கிர்ஜியோஸை ரசிகர்கள் சிலர் கேலி செய்தனர். இதனால், அவர் அதிருப்தியும், சோகமுமாக காணப்பட்டார். உள்ளூர் வீரர் நிதானம் தவறி நடந்து கொண்டது போட்டியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆன்ட்ரே செப்பி, தனது மூன்றாவது சுற்றில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டேரிக்ஸுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-ஆவது இடத்திலுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டன் வாவ்ரிங்கா, அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் காலி செய்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், சகநாட்டு வீராங்கனையான கரீனா வித்தியோஃப்ட்டை 6-2, 6-7 (3/7), 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
இந்த வெற்றி கெர்பருக்கு 29-ஆவது பிறந்தநாள் பரிசாக அமைந்தது. வெற்றி பெற்று அவர் வெளியேறும்போது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில், முழக்கங்களை எழுப்பினர்.
நடப்புச் சாம்பியனான கெர்பர், தனது மூன்றாவது சுற்றில், செக் குடியரசின் கிரிஸ்டியானா பிளிஸ்கோவா (இவர் கரோலினா பிளிஸ்கோவாவின் சகோதரி) அல்லது 27-ஆவது இடத்தில் உள்ள ருமேனியாவின் இரினா கேமிலா பேகுவுடன் மோதுவார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், சுவிட்சர்லாந்தின் ஸ்டெஃபானி வேகிலியை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதேபோல், கனடாவின் யூஜினி பௌச்சார்டு, சீனாவின் பெங் ஷூ வை 7-6 (7/5), 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச் தனது ஆட்டத்தில், ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
சானியா, போபண்ணா ஜோடிகள் முன்னேற்றம்
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - பார்போரா ஸ்டைரிகோவா (செக் குடியரசு) ஜோடி, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் பிரிட்டனின் ஜோஸ்லின் ரே, அன்னா ஸ்மித் ஜோடியை வீழ்த்தியது.
இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா - பாப்லோ கியூவாஸ் (உருகுவே) ஜோடி, போட்டித் தரவரிசையில் 15-ஆவது இடத்திலுள்ள பிரேசிலின் தாமஸ் பெலூச்சி - மேக்ஸிமோ கன்ஜாலெஸ் (ஆர்ஜென்டினா) ஜோடியை 6-4, 7-6 (4) என்ற செட் கணக்கில் தோற்கடித்தது.
போபண்ணா - பாப்லோ இணை தங்களது 2-ஆவது சுற்றில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட் - பிராட்லே மௌஸ்லே ஜோடியை எதிர்கொள்கிறது.

சீனாவின் பெங் ஷூவுக்கு பந்தை திருப்பும் கனடாவின் யூஜினி பௌச்சார்டு.
சீனாவின் பெங் ஷூவுக்கு பந்தை திருப்பும் கனடாவின் யூஜினி பௌச்சார்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com