ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தார்
விரக்தியில் ஜோகோவிச்.
விரக்தியில் ஜோகோவிச்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தார் உலகின் 117-ஆம் நிலை வீரரான உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமின்.
இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 4 மணி 48 நிமிடங்களுக்கு நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 7-6(8), 5-7, 2-6, 7-6(5), 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் டெனிஸ்.
முன்னதாக, டிசம்பரில் நடைபெற்ற ஆசிய வைல்ட் கார்டு போட்டியில் வென்றதன் மூலம் முக்கியச் சுற்றுக்கு முன்னேறியுள்ள டெனிஸ், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச்சை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2008-க்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியிலிருந்து ஜோகோவிச் இவ்வாறு ஆரம்பத்திலேயே வெளியேறுவது இது முதல் முறையாகும். முன்னதாக, 2008-ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் ரஷியாவின் மராட் சஃபின், ஜோகோவிச்சை வெளியேற்றியிருந்தார்.
கடந்த 7 ஆண்டுகளில் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்கு வெளியே இருக்கும் வீரர்களிடம் ஜோகோவிச் தோல்வியை சந்திப்பது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் உலகின் 145-ஆவது நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவிடம் ஜோகோவிச் தோல்வியை தழுவியிருந்தார்.
இந்நிலையில், டெனிஸுடனான தோல்விக்குப் பிறகு ஜோகோவிச் கூறியதாவது:
டெனிஸ் தனது நிலையில் இருந்து மிகவும் மேம்பட்டு விளையாடினார். அதற்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும். இன்றைய நாளில் அவருக்கு அனைத்தும் சாதகமாக அமைந்தது. அவர் இந்த வெற்றிக்குத் தகுதியானவர் என்பதில் சந்தேகமே இல்லை. போட்டியின்போது நான் சிறப்பாக செயல்படுவதற்கு வேறு வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்று ஜோகோவிச் கூறினார்.
வெற்றி குறித்துப் பேசிய டெனிஸ், "இது எனக்கு மிகப்பெரிய வெற்றியாகும். இதன்மூலம் ஜோகோவிச் போன்ற பெரிய வீரர்களுக்கு நிகராகவும் விளையாட இயலும் என்பதை என்னால் உணர முடிகிறது.
ஜோகோவிச்சின் இந்த தோல்விக்காக வருந்துகிறேன். அவருக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக ஆடினேன். உண்மையில், எனது ஆட்டம் எனக்கே ஆச்சரியத்தை அளித்தது' என்றார்.
இஸ்டோமின் தனது 3-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் 30-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் பாப்லோ கரேனோ பஸ்டாவை சந்திக்கிறார்.

கை நழுவிய சாதனை
ஜோகோவிச் இந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றியிருந்தால், இது அவரது 7-ஆவது பட்டமாக இருந்திருக்கும். இதன்மூலம், கடந்த 1960-களில் ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன் 6 பட்டங்கள் வென்ற சாதனையை ஜோகோவிச் முறியடித்திருப்பார். ஆனால், ஜோகோவிச்சின் சாதனைக் கனவை இஸ்டோமின் தகர்த்துள்ளார்.

3-ஆவது சுற்றில் செரீனா, கரோலினா


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-ஆவது சுற்றுக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், செக். குடியரஸின் கரோலினா பிலிஸ்கோவா ஆகியோர் முன்னேறினர்.
முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆவது சுற்றில் செக். குடியரஸின் லூஸி சஃபரோவாவை எதிர்கொண்ட செரீனா, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் அன்னா பிலின்கோவாவை எதிர்கொண்ட கரோலினா 6-0, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி தனது 2-ஆவது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒஸாகாவை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

பயஸ் ஜோடி தோல்வி


ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ்/ பிரேசிலின் ஆன்ட்ரே சா ஜோடி, தனது முதல் சுற்றிலேயே 6-4, 6-7(3), 4-6 என்ற செட் கணக்கில் பிலிப்பின்ஸின் ட்ரீட் ஹுவேய்/ பெலாரஸின் மேக்ஸ் மிர்னி ஜோடியிடம் வீழ்ந்தது.
அதேபோல், இந்திய ஜோடியான பூரவ் ராஜா/திவிஜ் சரண், தங்களது முதல் சுற்றில் பிரான்ஸின் ஜோனாதன் ஐùஸரிக்/ஃபாப்ரைஸ் மார்டின் ஜோடியிடம் 6-7(9), 6-7(4) என்ற செட் கணக்கில் வீழ்ந்தனர்.

நடால் முன்னேற்றம்
ஆடவர் ஒற்றையர் பிரிவில், மற்றொரு 2-ஆவது சுற்று
ஆட்டத்தில் சைப்ரஸின் மார்கோஸ் பக்தாதிஸை எதிர்கொண்ட ஸ்பெயினின் ரஃபேல் நடால், 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com