இரானி கோப்பை கிரிக்கெட்: சாஹா சதம்; வெற்றிப் பாதையில் ரெஸ்ட் ஆப் இந்தியா

குஜராத் அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வெற்றிபெற இன்னும் 113 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளதால்
சதமடித்த மகிழ்ச்சியில் ரித்திமான் சாஹா.
சதமடித்த மகிழ்ச்சியில் ரித்திமான் சாஹா.

குஜராத் அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வெற்றிபெற இன்னும் 113 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளதால் அந்த அணி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
379 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் சேதேஷ்வர் புஜாரா (83*)-ரித்திமான் சாஹா (123*) ஜோடி ஆட்டமிழக்காமல் 203 ரன்கள் குவித்துள்ளது. 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்துள்ளது.
மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி தனது முதல் இன்னிங்ஸில் 102.5 ஓவர்களில் 358 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக காந்தி 169 ரன்கள் குவித்தார். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் எஸ்.கெளல் 5 விக்கெட்டுகளையும், பங்கஜ் சிங் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 75 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் புஜாரா 86 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் காஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 79 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்திருந்தது.
4-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 90.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பி.கே.பன்சால் 73, காந்தி 70 ரன்கள் குவித்தனர். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் சபேஸ் நதீம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சாஹா சதம்: இதையடுத்து 379 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் தொடக்க வீரர்களான ஹெர்வாத்கர் 20, முகுந்த் 19, கருண் நாயர் 7, திவாரி 7 ரன்களில் ஆட்டமிழக்க, 24.2 ஓவர்களில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் 5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் புஜாரா-ரித்திமான் சாஹா ஜோடி அபாரமாக ஆட, ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சரிவிலிருந்து மீண்டது. 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்துள்ளது. சாஹா 214 பந்துகளில் 3 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 123, புஜாரா 181 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com