தோனி, ஜாதவ் அதிரடி; இந்தியா 251 ரன்கள் சேர்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது.
தோனி, ஜாதவ் அதிரடி; இந்தியா 251 ரன்கள் சேர்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது.
40 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இந்திய அணி, தோனி, கேதார் ஜாதவின் அதிரடியால் கடைசி 10 ஓவர்களில் 100 ரன்கள் குவித்தது.
மேற்கிந்தியத் தீவுகளின் ஆன்டிகுவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவன் 2, கேப்டன் விராட் கோலி 11 ரன்களில் நடையைக் கட்ட, 9.3 ஓவர்களில் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்தார் யுவராஜ் சிங். நிதானமாக ஆடிய இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 100 ரன்களை எட்டியபோது, யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். அவர் 55 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து தோனி களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய ரஹானே 83 பந்துகளில் அரை சதம் கண்டார். இந்தத் தொடரில் அவர் அடித்த 3-ஆவது அரை சதம் இது. இந்திய அணி 170 ரன்களை எட்டியபோது ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 112 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து கேதார் ஜாதவ் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய தோனி 66 பந்துகளில் அரை சதம் கண்டார். இது ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 63-ஆவது அரை சதமாகும்.
இதன்பிறகு தோனியும், கேதார் ஜாதவும் அதிரடியாக ஆட, இந்தியா மோசமான நிலையில் இருந்து மீண்டதோடு, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது. தோனி 79 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 78, கேதார் ஜாதவ் 26 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கம்மின்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

செய்திகள் சில வரிகளில்...
* டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் திராவிட் விலகியுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய 'ஏ' அணியின் பயிற்சியாளர் பதவியில் தொடரவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
* தென் கொரியாவின் ஆசன் நகரில் நடைபெற்று வரும் 23-ஆவது ஆசிய ஜூனியர் மற்றும் கேடட் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
* கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்று வரும் ஆசிய 6-ரெட் ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
* பாட்மிண்டனைப் பொறுத்தவரையில் சீனாவின் அளவுக்கு நாம் ஆதிக்கம் செலுத்தவில்லை. எனவே அவர்களோடு நம்மை ஒப்பிடுவது நியாயமானதாக இருக்காது. உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக், ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் ஆகியவற்றில் முத்திரைப் பதிப்பதோடு, தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே நம்மை சீனாவுக்கு நிகராக ஒப்பிட முடியும் என இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com