‘ஃபினிஷர்’ தோனியின் திறமை மங்குகிறதா? தொடரும் சொதப்பல்களுக்கு என்ன தீர்வு?

தோனியை இனியும் நம்புவது சரியா என்கிற கேள்வி அழுத்தமாக எழுந்துள்ளது. பல முக்கியமான போட்டிகளில்...
‘ஃபினிஷர்’ தோனியின் திறமை மங்குகிறதா? தொடரும் சொதப்பல்களுக்கு என்ன தீர்வு?

190 ரன்கள் கூட எடுக்கமுடியாதா என்று இந்திய ரசிகர்கள் நொந்துபோயிருக்கிறார்கள். இந்தத் தோல்வியை அவர்களால் ஏற்றுக்கொள்ளவேமுடியவில்லை. சமீபத்திய வழக்கப்படி இந்தப் போட்டியிலும் தோனியால் கடைசி ஓவர்களில் விரைவாக ரன்கள் குவிக்கமுடியவில்லை. விளைவு, இன்னொரு தோல்வி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4- ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற 4- ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 190 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியில், பேட்ஸ்மேன்கள் தடுமாற்றத்தால் 49.4 ஓவர்களில் 178 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தோனி 114 பந்துகளில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எப்படியும் எளிதான இலக்கை இந்திய அணி சுலபமாக எட்டிவிடும் என்கிற நம்பிக்கை கடைசியில் பொய்த்துப் போனது. ஒரே ஒரு பவுண்டரி மட்டும் எடுத்து தோனி விளையாடியதும், கடைசியில் இந்திய அணி தோல்வியடைந்ததும் இந்திய ரசிகர்களை மிகவும் ஏமாற்றியுள்ளது.

தோனியை இனியும் நம்புவது சரியா என்கிற கேள்வி அழுத்தமாக எழுந்துள்ளது. பல முக்கியமான போட்டிகளில் கடைசி சமயங்களில் தோனியால் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தரமுடியவில்லை.

இதனால் தோனியும் இந்திய அணியும் தங்களது உத்திகளை மாற்றவேண்டிய தருணம் இது என்று நிச்சயமாகக் கூறலாம்.

தோனியின் ஃபினிஷர் அடையாளத்துக்கு எதிராக கீழே குறிப்பிட்டுள்ள போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. தோனியால் வெற்றியைத் தொடமுடியாத சமீபத்திய போட்டிகள் இவை. 

2015 இந்தியா - தென் ஆப்பிரிக்கா - கான்பூர்

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 303 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய இந்திய அணி இலக்கை நோக்கி நன்கு நகர்ந்துகொண்டிருந்தது. 34-வது ஓவரின்போது 60 ரன்களில் ரஹானே ஆட்டமிழந்தபோது இந்திய அணி 191 ரன்கள் எடுத்திருந்தது. 40-வது ஓவரின் முடிவில் கோலி அவுட் ஆனபோது உள்ளே நுழைந்தார் தோனி. 10.1 ஓவரில் இந்திய அணிக்கு 90 ரன்கள் தேவை. 

அதுதான் தோனி இருக்கிறாரே, பட்டையைக் கிளப்புவார் என்று ரசிகர்கள் எண்ணியிருந்தபோது எதிர்பாராதது நடந்தது. 30 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்தார் தோனி. இது போதுமா? இந்திய அணி 5 ரன்களில் தோல்வியடைந்தது.  

24 பந்துகளில் 35 ரன்கள் என்கிற நிலைமையிலிருந்து கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என மாறியது. முதல் பந்திலிருந்தே தோனி தான் பேட்டிங். புதுமுகம் ரபடா பந்துவீசினார். ஒரு பவுண்டரி கூட எடுக்கமுடியாமல் அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ரபடாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் தோனி. 

ரோஹித் சர்மா அணியின் பாதி ரன்கள் எடுத்து, 150 ரன்கள் எடுத்தும் இந்திய அணியால் வெற்றி பெறமுடியாத போட்டி. தோனியால் தான் இந்திய அணி தோல்வியடைந்தது என்று ரசிகர்கள் அப்போது மிகவும் குமுறினார்கள். 

2016. இந்தியா - ஜிம்பாப்வே - ஹராரே

சரி அதுவாவது தென் ஆப்பிரிக்க அணி, அசத்தலான பந்துவீச்சால் சிக்ஸும் பவுண்டரியும் அடிக்கமுடியவில்லை. ஜிம்பாப்வே பந்துவீச்சும் தோனியை நிலைகுலையவைக்கும் என யாராவது எதிர்பார்க்கமுடியுமா? 

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்தது. எல்லாமே இளம் பந்துவீச்சாளர்கள். பலர் சர்வதேசப் போட்டிகளுக்குப் புதிது. அதனால் என்ன, பேட்டிங்கில் தோனி இருக்கிறாரே என்று ரசிகர்கள் எண்ணியிருந்தார்கள்.

தோனி விளையாடவந்தபோது 7.4 ஓவர்களில் 81 ரன்கள் தேவை என்கிற இக்கட்டான நிலைமை. சரி, ஜிம்பாப்வே அணிக்கு எதிராகக்கூட இதை அடையமுடியாதா என்ன?

அதிரடியாக விளையாடவேண்டிய போட்டியில் தோனி சுமாராக விளையாடினார். 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 2 ரன்களில் தோல்வியடைந்தது. 

12 பந்துகளில் 21 ரன்கள் தேவை என்கிற நிலைமையின்போது 19-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. சிக்ஸும் ஃபோரும் அடித்து அணிக்கு உதவியவர் தோனி அல்ல, அக்‌ஷர் படேல். 

கடைசி ஓவரில் எட்டே ரன்கள் தேவை. மட்ஜிவா பந்துவீசினார். கலக்கலாகப் பந்துவீசி கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவை என்கிற பரபரப்பான நிலைமையை உருவாக்கினார்.

இப்ப பாரு, சிக்ஸ் பறக்கப்போகுது என்று தெம்பாக இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் வைட் அவுட்சைட் ஆஃப்-பில் யார்க்கர் லென்த் பந்துவீசியதால் ஒரு ரன் மட்டுமே தோனியால் எடுக்கமுடிந்தது.

ரசிகர்களால் மறக்கமுடியாத தருணம் அது!

*

2016. இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் - லாடர்ஹில்

டி20 போட்டி. தோனி களமிறங்கியபோது இந்திய அணிக்கு 8.1 ஓவர்களில் 109 ரன்கள் தேவை என்கிற கடினமான நிலைமை.

ஆனால் தோனி கலக்கினார். 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்காகப் போராடினார். ஆனால் இங்கும் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலைமையில் இந்திய அணி 1 ரன்னில் தோல்வியடைந்தது. 

பிராவோ வீசிய அந்த ஓவரில் தோனியால் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடிக்கமுடியவில்லை. அந்த ஓவரில் நான்கு பந்துகளை எதிர்கொண்டார் தோனி. 

கடைசிப் பந்தில் இரண்டே ரன்கள் தேவை. அப்போதுதான் கேட்ச் கொடுத்து தோனி அவுட் ஆனார். கேஎல் ராகுல் 51 பந்துகளில் 110 ரன்களும் தோனி விரைவாக ரன்கள் குவித்தும் தோனியால் வெற்றிபெறமுடியாத போட்டி இது.

ஜீரணிக்கமுடியாத தோல்வி இது. இனி தோனியால் கடைசிக் கட்டத்தில் ரன்கள் குவித்து வெற்றியைத் தேடித்தரமுடியாது என்கிற உணர்வை அழுத்தமாகத் தந்த போட்டி இது.

*

இதற்குத் தீர்வு என்ன?

தோனி என்கிற பேட்ஸ்மேனின் சேவை நிச்சயம் தேவைதான். இவரைப் போன்ற நம்பிக்கையான விக்கெட் கீப்பர் இந்திய அணிக்குக் கிடைப்பது கடினம். ஆனால் 5,6,7-வதாகக் களமிறங்கும் வீரர்கள், தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்யவேண்டும். தோனியால் இந்த விஷயத்தில் அணியின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யமுடியவில்லை. அதனால் அவரைத் தாண்டி யோசிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. 

கெதர் ஜாதவ், பாண்டியா ஆகிய வீரர்களே 5 மற்றும் 6-வதாக விளையாடவேண்டும். அதேபோல பிறகு வருகிற ஜடேஜா மேலும் பொறுப்புடன் செயல்படவேண்டும் (அல்லது குல்தீப் யாதவ்) . இந்த மூன்று பேரும் பொறுப்பை உணர்ந்து விளையாடினால், 300-க்கும் அதிகமான இலக்கை விரட்டும்போது இந்திய அணியால் சரியாக விளையாடி வெற்றி பெறமுடியும். இதன் அடிப்படையில் தோனி 4-வதாகக் களமிறங்கலாம். ஆனால் இதற்குப் பிறகு, அதாவது 5,6.7 நிலைகளில் இனியும் அவர் களமிறங்கவேண்டாம்.  இதனால் அணியில் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும். பரவாயில்லை. இப்போது இந்த முயற்சிகளை மேற்கொண்டால் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் ஒரு தீர்வு கிடைத்துவிடும்.

இதைவிட்டுவிட்டு, இனியும் கடைசி 10 ஓவர்கள் தோனி வசம் சென்றால் அது எந்தளவுக்குத் தாக்கத்தை உண்டாக்கும் என்பது சந்தேகமாகவே உள்ளது. 2019 உலகக்கோப்பைக்குள் ஃபினிஷர் பொறுப்பு மற்ற வீரர்களுக்கு மாற்றப்படுவதே தோனிக்கும் நல்லது. அணிக்கும் நல்லது. தோனி மீது மேலும் மேலும் பொறுப்புகள் சுமத்துவது சரியல்ல. நிலைமையைப் புரிந்து அவருக்குரிய வாய்ப்புகள் மட்டும் தருவது அணியில் உள்ள பலவீனங்களைச் சரிசெய்ய உதவும். இல்லாவிட்டால் மேலே உள்ள ‘சொதப்பல்’ பட்டியல் மேலும் அதிகமாகும் ஆபத்து உள்ளது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com