தோனி தன்னுடைய பாணியை மாற்றியாக வேண்டும்: ஆகாஷ் சோப்ரா ஆலோசனை

தோனியால் முன்பு போல வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. எனவே...
தோனி தன்னுடைய பாணியை மாற்றியாக வேண்டும்: ஆகாஷ் சோப்ரா ஆலோசனை

தோனியால் முன்பு போல வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. எனவே அவர் தன்னுடைய ஆட்ட பாணியை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4- ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற 4- ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 190 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியில், பேட்ஸ்மேன்கள் தடுமாற்றத்தால் 49.4 ஓவர்களில் 178 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தோனி 114 பந்துகளில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எப்படியும் எளிதான இலக்கை இந்திய அணி சுலபமாக எட்டிவிடும் என்கிற நம்பிக்கை கடைசியில் பொய்த்துப் போனது. ஒரே ஒரு பவுண்டரி மட்டும் எடுத்து தோனி விளையாடியதும், கடைசியில் இந்திய அணி தோல்வியடைந்ததும் இந்திய ரசிகர்களை மிகவும் ஏமாற்றியுள்ளது.

தோனியை இனியும் நம்புவது சரியா என்கிற கேள்வி அழுத்தமாக எழுந்துள்ளது. பல முக்கியமான போட்டிகளில் கடைசி சமயங்களில் தோனியால் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தரமுடியவில்லை.

இந்நிலையில் தோனி மீதான விமரிசனங்கள் குறித்து ஆகாஷ் சோப்ரா இணையத்தளத்தில் எழுதியிருப்பதாவது:

தோனி 25-வது ஓவரின்போது விளையாடினால் தவிர வழக்கம்போல் மெல்ல ஆடி பிறகு வேகமெடுப்பது இனி சாத்தியப்படாது. முன்பு விளையாடுவாரே அதேபோல இப்போதும் தன் பாணியைத் தொடர்கிறார் தோனி. முன்பு அவரால் இலக்கை எட்டமுடிந்தது. ஆனால் இப்போது அதுபோல எல்லா நேரங்களிலும் இலக்கை அடையமுடிவதில்லை.

எனவே தன் பாணியை மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது. தன்னுடைய இன்னிங்ஸைத் தொடரும் வேகத்தில் மாற்றம் கொண்டுவந்தாகவேண்டும். இலக்கைக் கடைசி ஓவரில் எட்டிவிடலாம் என்பது துணிச்சலான பாணி. இதை தோனியால் மட்டுமே செய்யமுடியும். ஆனால் சமீபகாலங்களில் இந்த உத்தியால் வெற்றி கிடைப்பதில்லை. எனவே அவர் தன்னுடைய ஆட்டத்தின் வேகத்தை முன்பே அதிகரிக்கவேண்டும்.

ஒரு வீரரின் சிறப்பை அளவிட நான்கு வழிமுறைகள் உள்ளன. நீண்ட காலம் விளையாடுவது, புள்ளிவிவரங்கள், ஆட்டத்தின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது, சூழலுக்கேற்ப மாறுதல். தோனியிடம் முதலில் குறிப்பிட்ட மூன்றும் உண்டு. கடைசி விஷயத்திலும் அவர் தன்னை நிரூபித்துள்ளார். ஆனால் இப்போது அவர் பாணியை மாற்றியாகவேண்டிய தருணத்தில் உள்ளார். அவரால் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கமுடியும் என்றால் எப்படி தன் கிரிக்கெட் வாழ்க்கையை மிகவும் வலுவாகத் தொடங்கினாரோ அதேபோல அவரால் முடிக்கவும் முடியும் என்று தோனிக்கு ஆகாஷ் சோப்ரா ஆலோசனை கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com