கோலி சதம்: 3-1 என தொடரை வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...
கோலி சதம்: 3-1 என தொடரை வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று  3- 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இந்த இரு அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் எவின் லீவிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார். அவருடன் வந்த கைல் ஹோப் சற்று நிலைத்து ஆடி அரைசதத்தை நெருங்கினார். எனினும் அவர் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவின் பந்துவீச்சில் தவனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஷாய் ஹோப் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். முகமது சமி பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்த அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரோஸ்டன் சேஸ் எல்பிடபிள்யூ முறையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.

தொடர்ந்து வந்த ஜேசன் முகமது 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேதார் ஜாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். பின்னர் வந்த கேப்டன் ஜேசன் ஹோல்டர் 36 ரன்கள் எடுத்தார். அவர் முகமது சமி பந்துவீச்சில் தவனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஆஷ்லே நர்ஸும் டக் அவுட் ஆனார்.

இதன் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் சமி 4 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

206 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36.5 ஓவரில் இலக்கை கடந்து வெற்றி பெற்றனர்.

விராட் கோலி அபாரமாக விளையாடி சதமெடுத்தார். தினேஷ் கார்த்திக் அரை சதமெடுத்தார். கோலி 111, தினேஷ் கார்த்திக் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இதன் மூலன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3- 1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை கோலியும் தொடர் நாயகன் விருதை ரஹானேவும் பெற்றார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com