எப்படிப் போட்டாலும் சிக்ஸர் அடித்த லீவிஸ்: புதிய சாதனைகள் நிகழ்த்தினார்!

எவின் லீவிஸுக்கும் இந்திய அணி மீது ஒரு கண். இந்திய அணிக்கும் அவர் மீது ஒரு கண்...
எப்படிப் போட்டாலும் சிக்ஸர் அடித்த லீவிஸ்: புதிய சாதனைகள் நிகழ்த்தினார்!

எவின் லீவிஸ், இதற்கு முன்னர் ஃப்ளோரிடாவில் இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடியபோது 49 பந்துகளில் சதமடித்தார். அதிலிருந்து அவருக்கு இந்திய அணி மீது ஒரு கண். இந்திய அணிக்கும் அவர் மீது ஒரு கண்.

ஆனால் ஒருநாள் தொடரில் லீவிஸ் சுமாராகக்கூட விளையாடவில்லை. 21, 2, 35, 9 என்றுதான் ரன்கள் எடுத்தார். அதனால் டி20 போட்டியிலும் சுலபமாக வீழ்ந்துவிடுவார் என்று இந்திய அணி கணக்குப் போட்டது. ஆனால் தன்னுடைய டி20 அதிரடி ஆட்டத்தை நேற்றும் நிகழ்த்திக் காட்டினார் லீவிஸ். 

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஒரேயொரு டி20 கிரிக்கெட் ஆட்டம் கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது இந்தியா. மேற்கிந்தியத் தீவுகள் அணி, 18.3 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லீவிஸ் 125, சாமுவேல்ஸ் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 12 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடித்த லீவிஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 

நேற்றைய சதத்தின் மூலம் இந்தியாவுக்கு எதிராக 2 சதங்கள் எடுத்துள்ளார் லீவிஸ். டி20 போட்டிகளில் கெய்லும் மெக்கல்லமும் மட்டும்தான் இரு சதங்கள் எடுத்துள்ளார்கள். அவர்களுடன் இணைந்துள்ளார் லீவிஸ். 

மேலும் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த மே.இ. வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கெய்ல் 117 ரன்கள் எடுத்ததே மே.இ. வீரர் எடுத்த அதிக டி20 ரன்னாக இருந்தது. அதை 125 ரன்கள் எடுத்து முறியடித்துள்ளார் லீவிஸ்.

அதேபோல டி20 சேஸிங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற இன்னொரு சாதனையையும் படைத்துள்ளார் லீவிஸ். இதற்கு முன்பு ஹாங்காங்கின் பாபர் ஹயாத் ஓமனுக்கு எதிராக 122 ரன்கள் எடுத்திருந்தார். அந்தச் சாதனையையும் லீவிஸ் தாண்டியுள்ளார். 

இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக லீவிஸ் அடித்த ரன்கள்

லீவிஸ் 125 ரன்கள் (62 பந்துகள், 12 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்)

ஜடேஜா - 13 பந்துகளில் 32 ரன்கள்
அஸ்வின் - 13 பந்துகளில் 28 ரன்கள்
சமி - 10 பந்துகளில் 24 ரன்கள்
குல்தீப் - 13 பந்துகளில் 23 ரன்கள்
புவனேஸ்வர் - 13 பந்துகளில் 18 ரன்கள் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com