இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் இன்று அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மும்பையில் திங்கள்கிழமை நேர்காணல் நடைபெறுகிறது. ரவி சாஸ்திரி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மும்பையில் திங்கள்கிழமை நேர்காணல் நடைபெறுகிறது. ரவி சாஸ்திரி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பதவிக்கு 10 பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி, இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான சேவாக் உள்ளிட்ட 6 பேரிடம் மட்டுமே நேர்காணல் நடத்தப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்துகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமிப்பதில் பிசிசிஐ தீவிரம் காட்டியது. இதையடுத்து ரவி சாஸ்திரி, சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பிபாஸ், தொட்ட கணேஷ், லால்சந்த் ராஜ்புட், லான்ஸ் குளூஸ்னர், ராகேஷ் சர்மா (ஓமன் அணியின் தற்போதைய பயிற்சியாளர்), பில் சிம்மன்ஸ், உபேந்திரநாத் பிரேம்ஹசாரி (இவர் பொறியாளர். கிரிக்கெட்டுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்) ஆகிய 10 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இவர்களில் ரவி சாஸ்திரி, சேவாக், மூடி, சிம்மன்ஸ், பிபாஸ், ராஜ்புட் ஆகிய 6 பேரிடம் பிசிசிஐ ஆலோசனைக் கமிட்டி நேர்காணல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அவர், இந்திய அணியின் இயக்குநராக இருந்த காலத்தில் அவருக்கும், கோலிக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. இதுதவிர ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ஓர் ஆண்டுக்கு முன்பு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் நடத்தப்பட்டபோது கங்குலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ரவி சாஸ்திரி ஸ்கைப் மூலம் நேர்காணலில் பங்கேற்றபோது, அவரை சச்சின், லட்சுமண் மட்டுமே நேர்காணல் செய்தனர். அந்த இடத்தில் கங்குலி இல்லை. அது தொடர்பாக ரவி சாஸ்திரி குற்றம்சாட்ட, அதற்குப் பதிலடியாக ரவி சாஸ்திரி நேரில் வந்திருக்க வேண்டும் என கங்குலி சாடினார். அதனால் ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிப்பதில் கங்குலியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.
ஒருவேளை சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்படாத பட்சத்தில் சேவாக் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் பேட்டிங்கில் வரலாறு படைத்திருந்தாலும், ஒரு பயிற்சியாளராக இதுவரை எதையும் சாதிக்கவில்லை. பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். அதைத் தவிர்த்து அவருக்கு வேறு எந்த அனுபவமும் கிடையாது.
சாஸ்திரி, சேவாக் ஆகிய இருவருக்கும் பயிற்சியாளர் பதவி கிடைக்காதபட்சத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான டாம் மூடி பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. டாம் மூடி ஒரு பயிற்சியாளராக நல்ல அனுபவம் பெற்றவர். அவருடைய பயிற்சியின் கீழ் இலங்கை அணி 2011 உலகக் கோப்பை போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளது. ஹைதராபாத் அணி, ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com