மிதாலி ராஜ் 6,000 ரன்கள் குவித்து உலக சாதனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
மிதாலி ராஜ் 6,000 ரன்கள் குவித்து உலக சாதனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வரும் மிதாலி ராஜ், புதன்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் எடுத்தபோது மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனை அவர் வசமானது.
முன்னதாக அவர் 34 ரன்கள் எடுத்திருந்தபோது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவரான இங்கிலாந்தின் எட்வர்ட் சார்லோட்டே (5,992) சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை எட்டிய மிதாலி ராஜ், கிர்ஸ்டன் பீம்ஸ் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 6,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை 183 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள 35 வயதான மிதாலி ராஜ் 6,028 ரன்கள் குவித்துள்ளார்.
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய சாதûனையும் இந்தியா வசமேயுள்ளது. இந்திய வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி 160 போட்டிகளில் விளையாடி 189 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
பிசிசிஐ வாழ்த்து: பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். அவருக்கு பிசிசிஐ சார்பில் வாழ்த்துகள். 1999-இல் அறிமுகப் போட்டியில் களமிறங்கியபோதே, அதில் சதமடித்து தனது திறமையை உலகிற்கு காட்டியவர் மிதாலி ராஜ். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக அரை சதங்கள் விளாசியவர் என்ற சாதனையும் மிதாலி ராஜ் வசமேயுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
சச்சின், கோலி பாராட்டு!
புது தில்லி, ஜூலை 12: மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருக்கும் இந்திய கேப்டன் மிதாலி ராஜுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், இந்நாள் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சச்சின் தனது வாழ்த்துச் செய்தியில், 'மிதாலிக்கு வாழ்த்துகள். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இன்றைய (புதன்கிழமை) உங்கள் ஆட்டம் சிறப்புமிக்கது' என குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து மிதாலி சாதனை படைத்திருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்புமிக்க தருணமாகும்' என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் உமேஷ் யாதவ், அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் மிதாலி ராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com