பாரத் அருணை பந்துவீச்சு பயிற்சியாளராக்க ரவி சாஸ்திரி தீவிரம்

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருணை நியமிப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
பாரத் அருணை பந்துவீச்சு பயிற்சியாளராக்க ரவி சாஸ்திரி தீவிரம்

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருணை நியமிப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ஏற்கெனவே பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாரத் அருணையும் தனது பயிற்சியாளர் குழுவில் சேர்க்க ரவி சாஸ்திரி முயற்சித்து வருவது தெரியவந்துள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், பந்துவீச்சு வீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானையும், இந்திய அணி வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறபோது பேட்டிங் பயிற்சியாளராக ராகுல் திராவிடையும் சமீபத்தில் நியமித்தது கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி. முழு நேர பயிற்சியாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட அணியுடன் ஆண்டுக்கு 250 நாள்கள் செலவிட்டே ஆக வேண்டும். ஆனால் ஜாகீர்கான் 100 நாள்களுக்கு மேல் இந்திய அணியுடன் செலவிட விரும்பவில்லை என தெரிகிறது. இதுதவிர ஜாகீர்கானின் ஊதியம் குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
முன்னதாக ரவி சாஸ்திரியிடம் பந்துவீச்சு பயிற்சியாளராக யாரை நியமிக்கலாம் என கேட்டபோது, அவர் பாரத் அருணை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அதை கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி நிராகரித்துவிட்டது. அப்போது முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் கில்லெஸ்பியை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்குமாறு ரவி சாஸ்திரி கேட்டுள்ளார். கில்லெஸ்பி, பப்பூவா நியூகினியா அணியின் பயிற்சியாளராக இருப்பதால் அவரை இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வைக்க முடியாது என்பது ரவி சாஸ்திரிக்கும் தெரியும்.
இதையடுத்து வெங்கடேஷ் பிரசாத்தை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் ரவி சாஸ்திரி மறுத்துள்ளார். அதன்பிறகே ஜாகீர்கான் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிசிசிஐயின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஜாகீர்கான் மீது ரவி சாஸ்திரி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். எனினும் தனக்கு முழுநேர பந்துவீச்சு பயிற்சியாளர் வேண்டும், பந்துவீச்சாளர்களுக்கு ஜாகீர்கான் ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்தால், அதை பாரத் அருண் செயல்படுத்த வேண்டும் என ரவி சாஸ்திரி கருதுகிறார்.
இலங்கைத் தொடர் முதலே தன்னுடன் பாரத் அருண் இருக்க வேண்டும் என ரவி சாஸ்திரி விரும்புகிறார். வரும் சனிக்கிழமை பிசிசிஐ நிர்வாகக் குழுவை சந்திக்க ரவி சாஸ்திரி திட்டமிட்டுள்ளார். அதனால் தனது இங்கிலாந்து பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

பிசிசிஐ விளக்கம்

ராகுல் திராவிடைப் போன்று குறிப்பிட்ட தொடர்களுக்கு மட்டுமே ஜாகீர்கான் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் ஆலோசித்த பிறகே திராவிட், ஜாகீர்கான் ஆகியோரின் நியமனம் நடைபெற்றது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com