விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் வீனஸ், முகுருஸா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸýம், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஜோகன்னா கோன்டாவுக்கு எதிரான அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ். இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய  மகிழ்ச்சியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா.
ஜோகன்னா கோன்டாவுக்கு எதிரான அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ். இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸýம், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் ஜோகன்னா கோன்டாவை தோற்கடித்தார்.
இதன்மூலம் கடந்த 23 ஆண்டுகளில் விம்பிள்டனில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மூத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 37 வயதான வீனஸ். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுக விம்பிள்டனில் விளையாடிய வீனஸ் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இப்போது விம்பிள்டனில் 9-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் வீனஸ். அதேநேரத்தில் 2009-க்குப் பிறகு முதல்முறையாக விம்பிள்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இதுவரையில் 87 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள வீனஸ், இந்த முறை சாம்பியனாகும்பட்சத்தில் "ஓபன் எராவில்' விம்பிள்டனில் பட்டம் வென்ற மூத்த வீராங்கனையான தனது சகோதரி செரீனாவின் சாதனையை முறியடிப்பார். இதுதவிர வீனஸின் 8-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அது அமையும்.
வெற்றி குறித்துப்பேசிய வீனஸ், "இங்கு நான் ஏராளமான இறுதி ஆட்டங்களை விளையாடியிருக்கிறேன். அதனால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். இதற்கு மேல் நிறைய பட்டம் வெல்ல வேண்டும் என கேட்க முடியாது. எனினும் இந்த முறை பட்டம் வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். அப்படி வென்றால் அது அற்புதமான ஒன்றாக இருக்கும். கோன்டாவுக்கு கடுமையான நெருக்கடி இருந்தது. அதேநேரத்தில் எனது அனுபவம் எனது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது' என்றார்.
முகுருஸா வெற்றி: மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் மேக்தலீனா ரைபரிக்கோவாவை தோற்கடித்தார். இதன்மூலம் 2-ஆவது முறையாக விம்பிள்டனில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் முகுருஸா.
வெற்றி குறித்துப் பேசிய அவர், "நான் மிகச்சிறப்பாக ஆடினேன். அரையிறுதியில் களமிறங்கும்போது அதீத நம்பிக்கையுடன் களமிறங்கினேன். அதனால் எல்லாமே சிறப்பாக அமைந்தது. இறுதிச் சுற்றிலும் சிறப்பாக ஆட விரும்புகிறேன். நான் நினைத்தது போன்று எல்லாம் சிறப்பாக அமையும் என நம்புகிறேன்' என்றார்.

வாய்ப்பை நழுவவிட்ட கோன்டா!

வீனஸýக்கு எதிரான அரையிறுதியில் கோன்டா வென்றிருந்தால், கடந்த 40 ஆண்டுகளில் விம்பிள்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருப்பார். ஆனால் துரதிருஷ்டவசமாக தோற்ற அவர், அந்த வாய்ப்பை நழுவவிட்டார். இந்தத் தொடர் முழுவதும் கோன்டா சிறப்பாக ஆடியிருந்ததால், அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என பிரிட்டன் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தோற்றது பிரிட்டன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

காலிறுதியில் போபண்ணா ஜோடி

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-கனடாவின் கேப்ரில்லா டப்ரோவ்ஸ்கி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் முந்தைய சுற்றில் 7-6 (5), 6-2 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் நிக்கோலா மெக்டிக்-அனா கொஞ்ஜு ஜோடியைத் தோற்கடித்தது.
அதேநேரத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா-குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-7 (4), 4-6 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனான ஃபின்லாந்தின் ஹென்றி கான்டினென்-பிரிட்டனின் ஹெதர் வாட்சன் ஜோடியிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com