மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?: நியூஸிலாந்துடன் இன்று மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை சந்திக்கிறது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை சந்திக்கிறது.
டெர்பியில் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா ஆட்டமாகும். புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 8 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், நியூஸிலாந்து 7 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளன. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 4-ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும். அதனால் இந்த ஆட்டம் காலிறுதி ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரின் முதல் 4 ஆட்டங்களில் வெற்றி கண்ட இந்திய அணி, கடைசி 2 ஆட்டங்களில் தோற்றதால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் பூனம் ரெளத் சதமும், கேப்டன் மிதாலி ராஜ் அரை சதமும் அடித்தபோதிலும்கூட, இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஸ்மிருதி மந்தனா, பூனம் ரெளத், கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மான்பிரீத் கெளர், தீப்தி சர்மா ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். எனினும் இவர்கள், பலம் வாய்ந்த பந்துவீச்சைக் கொண்ட நியூஸிலாந்துக்கு எதிராக எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் ரன் குவிப்பு அமையும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து அசத்திய பூனம் ரெளத், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் ஒரு நாள் போட்டியில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் மிதாலி ராஜ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆரம்பக்கட்ட ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா அதன்பிறகு பெரிய அளவில் ரன் குவிக்காதது கவலையளிக்கிறது.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே கூட்டணியை நம்பியுள்ளது இந்திய அணி. சுழற்பந்து வீச்சாளர்களான தீப்தி சர்மா, இக்தா பிஸ்த், ஹர்மான் பிரித் கெளர், பூனம் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசுவது அவசியமாகும். அப்போதுதான் நியூஸிலாந்து அணியை பெரிய அளவில் ரன் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்த முடியும்.
இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக உள்ளது. முதல் 3 ஆட்டங்களில் மட்டும் இந்திய வீராங்கனைகள் 8 கேட்சுகளை கோட்டைவிட்டனர். அதன்பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது மோசமான பீல்டிங் காரணமாக தேவையில்லாமல் 10 ரன்களை கொடுத்தது இந்தியா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்திய வீராங்கனைகளிடம் அடிப்படைத் தவறுகளை அதிகம் காண முடிந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட நியூஸிலாந்து அணி, கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது.
முதலிடம் யாருக்கு?
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. எனினும் சனிக்கிழமை நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன. சனிக்கிழமை நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளையும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவையும் சந்திக்கின்றன. இதில் இங்கிலாந்து வெற்றி பெறும்பட்சத்தில் அந்த அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துவிடும். மாறாக இங்கிலாந்து தோற்குமானால், ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்கா முதலிடத்தைப் பிடிக்கும்.
போட்டி நேரம்: பிற்பகல் 3, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com