சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை நீங்கியது: ரசிகர்கள் கொண்டாட்டம்

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டு தடை வியாழக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை நீங்கியது: ரசிகர்கள் கொண்டாட்டம்

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டு தடை வியாழக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இது எங்களுக்கு புதிய தொடக்கம். எங்கள் அணி மீதான தடை விலகிவிட்டதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் இரு விஷயங்களை வெளியிட்டுள்ளோம். அதில் ஒன்று எங்கள் அணி இரு முறை பட்டம் வென்றது தொடர்பான காட்சிகள். மற்றொன்று 2011 ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதல் ஓவரிலேயே கெயிலை அஸ்வின் வீழ்த்தியது தொடர்பான காட்சியாகும். இதுதவிர சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்திருந்தால், அதை பதிவிடுமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். சென்னை அணியை பிரபலப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் தொடங்கிவிட்டோம்.
ஏராளமான ஸ்பான்சர்கள் எங்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறார்கள். ரசிகர்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் எங்களுக்கு இருக்கிறது. கேப்டன் தோனியை மீண்டும் சென்னை அணிக்காக ஆடவைப்போம். புணே அணியுடனான தோனியின் ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதியில் முடிகிறது. அவருடன் நாங்கள் இன்னும் பேசவில்லை. தோனி மட்டுமின்றி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன்டி பிக்கேல், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்டீவ் ரிக்ஸன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொண்டு வருவது பற்றி எங்கள் அணி நிர்வாகம் சிந்தித்து வருகிறது என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறபோது, தோனியின் எண் 7-ஐ முதுகில் வரைந்துகொண்டு தோனி போன்று வேடமிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சரவணன் கூறுகையில், 'சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை நீங்கியிருப்பது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. எங்க தல தோனி மீண்டும் எங்களுடன் இணையவுள்ளார். அந்த நாளுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்' என்றார்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com