விம்பிள்டனில்: வரலாறு படைத்தார்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 8-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
விம்பிள்டனில்: வரலாறு படைத்தார்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 8-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் விம்பிள்டனில் அதிகமுறை பட்டம் வென்றவர் என்று வரலாற்று சாதனையைப் படைத்தார். முன்னதாக 7 பட்டங்களுடன் பீட் சாம்ப்ராஸ், வில்லியம் ரென்ஷா ஆகியோருடன் முதலிடத்தைப் பகிர்ந்திருந்த ஃபெடரர், இப்போது அவர்களை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார்.
ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் ஃபெடரருக்கு சற்று சவால் அளித்தார் சிலிச். எனினும் அபாரமாக ஆடிய ஃபெடரர் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டில் ஃபெடரர் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தபோது, சிலிச் தடுமாறி கீழே விழுந்தார். அப்போதே அவருடைய சாம்பியன் கனவு தகர்ந்துவிட்டது. கடுமையான வலியால் துடித்த அவர், சிகிச்சை பெற்ற பிறகு அந்த செட்டை தொடர்ந்தார்.
இதன்பிறகு 2-ஆவது செட்டை 1-6 என்ற கணக்கில் ஃபெடரரிடம் இழந்த சிலிச், மீண்டும் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு இடது காலில் கட்டுப் போட்டுக் கொண்டதோடு, வலி நிவாரணி மருந்தையும் எடுத்துக் கொண்டு 3-ஆவது செட்டில் களமிறங்கினார் சிலிச். ஆனாலும் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து அபாரமாக ஆடிய ஃபெடரர் அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் ஆனார்.

விம்பிள்டனில் வென்ற மூத்த வீரர்!

"ஓபன் எரா'வில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமை 35 வயதான ரோஜர் ஃபெடரர் வசமானது. முன்னதாக விம்பிள்டனில்
சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனை அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ் வசம் இருந்தது. அவர் 1975-இல் விம்பிள்டனில் பட்டம் வென்றபோது அவருக்கு வயது 32.

ஒரு செட்டைக்கூட இழக்காத ஃபெடரர்!

இந்த விம்பிள்டன் தொடரில் ரோஜர் ஃபெடரர்அனைத்து ஆட்டங்களிலும் நேர் செட்களிலேயே வென்றார். இதன்மூலம் கடந்த 41 ஆண்டுகளில் ஒரு செட்டைக்கூட இழக்காமல் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர் 1976-இல் ஜான் போர்க் ஒரு செட்டைக்கூட இழக்காமல் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு...

கடைசியாக 2012-இல் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஃபெடரர், அதன்பிறகு இரு முறை இறுதிச் சுற்று வரை முன்னேறியபோதிலும், அவரால் பட்டம் வெல்ல முடியவில்லை. ஜோகோவிச்சிடம் தோற்று வெளியேறினார். எனினும் நம்பிக்கையை இழக்காத ஃபெடரர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடினார். அதன்பிறகு விம்பிள்டனை கருத்தில் கொண்டு முக்கியப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், இப்போது தனது கனவு போட்டியான விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.


19 கிராண்ட்ஸ்லாம்

ரோஜர் ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபனில் 5, பிரெஞ்சு ஓபனில் 1, விம்பிள்டனில் 8, அமெரிக்க ஓபனில் 5 என மொத்தம் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர் என்ற சாதனையும் ஃபெடரர் வசமேயுள்ளது.


சிலிச் கனவு தகர்ந்தது

இந்த ஆட்டத்தில் சிலிச் வென்றிருந்தால் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற 2-ஆவது குரோஷியர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். ஆனால் அவருடைய கனவு ஏமாற்றத்தில் முடிந்தது. விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே குரோஷியர் கோரன் இவானிசெவிச்தான். அவர் 2001-இல் விம்பிள்டனில் வாகை சூடியுள்ளார்.

7-1

இதுவரை ரோஜர் ஃபெடரரும், சிலிச்சும் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் ஃபெடரர் 7 முறையும், சிலிச் ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளனர்.

விம்பிள்டனில் இதுவரை...

விம்பிள்டனில் முதல்முறையாக 2003-இல் சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர், இப்போது 8-ஆவது பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறார். ஃபெடரர் இந்த உயரத்தை எட்டுவார் என்று அவர் விம்பிள்டனில் முதல் பட்டம் வென்றபோது யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். விம்பிள்டனில் இதுவரை
ஃபெடரர் வென்ற பட்டங்களும், இறுதிச் சுற்றில் அவரிடம் தோற்றவர்களும்...

2003: மார்க் பிலிப்போஸிஸ் (ஆஸ்திரேலியா) 7-6, 6-2, 7-6
2004: ஆன்டி ரோடிக் (அமெரிக்கா) 4-6, 7-5, 7-6 , 6-4
2005: ஆன்டி ரோடிக் (அமெரிக்கா) 6-2, 7-6, 6-4
2006: ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 6-0, 7-6, 6-7, 6-3
2007: ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 7-6, 4-6, 7-6, 2-6, 6-2
2009: ஆன்டி ரோடிக் (அமெரிக்கா) 5-7, 7-6, 7-6, 3-6, 16-14
2012: ஆன்டி முர்ரே (பிரிட்டன்) 4-6, 7-5, 6-3, 6-4
2017: மரின் சிலிச் (குரோஷியா) 6-3, 6-1, 6-4

ரூ.18 கோடி பரிசு

சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரருக்கு ரூ.18 கோடியும், இறுதிச் சுற்றில் தோற்ற சிலிச்சுக்கு ரூ.9 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com