ரசிகர்களின் சாம்பியன்!

டென்னிஸின் மெக்கா என்றழைக்கப்படும் விம்பிள்டனில் 8-ஆவது பட்டம் வென்றதன் மூலம் சரித்திரம் படைத்திருக்கிறார் டென்னிஸ் வரலாற்றின் ஆகச்சிறந்த வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்.
ரசிகர்களின் சாம்பியன்!

டென்னிஸின் மெக்கா என்றழைக்கப்படும் விம்பிள்டனில் 8-ஆவது பட்டம் வென்றதன் மூலம் சரித்திரம் படைத்திருக்கிறார் டென்னிஸ் வரலாற்றின் ஆகச்சிறந்த வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்.
2003-இல் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றிய ஃபெடரர், அடுத்த 14 ஆண்டுகளில் யாரும் எளிதில் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தை எட்டியிருக்கிறார். விம்பிள்டனில் அதிக (8) பட்டம் வென்றவர், 'ஓபன் எரா'வில் விம்பிள்டனில் பட்டம் வென்ற மூத்த வீரர், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக (19) கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர், 3 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் (ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன்) தலா 5 பட்டங்கள் வென்ற ஒரே வீரர், அதிக நாள்கள் (302 வாரங்கள்) தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவர், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 29 இறுதிச் சுற்று, 42 அரையிறுதி, 50 காலிறுதிகளில் விளையாடியவர் என நீள்கிறது ஃபெடரரின் சாதனை.
6 வயதில்...
ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் பிறந்த ரோஜர் ஃபெடரர், தனது 6-ஆவது வயதில் டென்னிஸ் கோர்ட்டில் காலடி வைத்தார். ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் இளைஞர்கள், கால்பந்து விளையாட்டை தங்களின் எதிர்காலம் என நினைத்த காலம் அது. அதனால் பெரும்பாலானவர்கள் கால்பந்து விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டினர்.
ஆனால் ஃபெடரரோ டென்னிஸை நோக்கி பயணித்தார். டென்னிஸ் ஜாம்பவான்களான ஸ்டீபன் எட்பர்க், போரீஸ் பெக்கர் ஆகியோர்தான் ஃபெடரரின் ஹீரோக்கள். அவர்களைப் போன்று பெரிய டென்னிஸ் வீரராக வேண்டும் என்பதுதான் ஃபெடரரின் கனவு. ஆனால் இன்று பலருடைய ஹீரோ
ஃபெடரர்தான்.
1998-இல் விம்பிள்டன் ஜூனியர் பிரிவில் வென்ற பட்டம்தான் ஃபெடரருக்கு கிடைத்த முதல் உத்வேகம். 1999-இல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் (பிரெஞ்சு ஓபனில்) முதல்முறையாக களமிறங்கிய ஃபெடரர், தனது முதல் சுற்றில் அப்போதைய முன்னணி வீரரான பேட்ரிக் ராஃப்டரிடம் தோல்வி கண்டார். அந்தத் தோல்விக்காக அவர் வருத்தப்படவில்லை. ஏனெனில் ராஃப்டர் போன்ற ஒருவருடன் விளையாடியது அவருக்கு கிடைத்த மிகச்சிறந்த அனுபவமாகும்.
திருப்பம் தந்த விம்பிள்டன்: 2003-இல் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஃபெடரரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதில் அபாரமாக ஆடிய ஃபெடரர், இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மார்க் பிலிப்போஸிஸை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஸ்விட்சர்லாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஆனால் இந்த ஃபெடரர்தான் அடுத்த 15 ஆண்டுகள் சர்வதேச டென்னிஸில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார் என அப்போது யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். ஏன்
ஃபெடரர்கூட நான் உலக டென்னிஸில் உச்சத்தைத் தொடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை என கூறியிருக்கிறார்.
2003 முதல் 2007 வரை தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் விம்பிள்டனில் வாகை சூடிய ஃபெடரர், டென்னிஸ் உலகின் நம்பர்-1 வீரர் ஆனார். 2003 முதல் 2012 வரையிலான காலங்களில் ஆஸ்திரேலிய ஓபனில் 4, பிரெஞ்சு ஓபனில் 1, விம்பிள்டனில் 7, அமெரிக்க ஓபனில் 5 என 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஃபெடரருக்கு, அடுத்த 4 ஆண்டுகள் சோதனைக் காலமாக அமைந்தது. ஃபார்மை இழந்ததோடு, காயத்தாலும் அவதிப்பட்டார். கடந்த ஆண்டு விம்பிள்டன் அரையிறுதியில் ரயோனிச்சிடம் தோற்ற ஃபெடரர், அதோடு அந்த சீசனுக்கு முழுக்கு போட்டார். தனது முழங்காலுக்கு ஓய்வளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அப்போது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார். சர்வதேச டென்னிஸில் ஃபெடரரின் ஆதிக்கம் முடிந்தது. அவர் ஓய்வுபெற வேண்டிய தருணம் வந்துவிட்டது என விமர்சனங்கள் எழுந்தன.
மீண்டும் ஆதிக்கம்: ஆனால் விமர்சனங்களைக் கண்டு அஞ்சிவிடாமல் அமைதி காத்த ஃபெடரர், 2017 சீசனில் புதிய உத்வேகத்தோடும், நம்பிக்கையோடும் களம்புகுந்தார். அவரைப் போன்றே நடாலும் புத்துணர்வோடு களமிறங்க, இருவரும் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றில் சந்தித்தார்கள். அதில் அட்டகாசமாக ஆடி 18-ஆவது கிராண்ட்ஸ்ஸாம் பட்டத்தைக் கைப்பற்றிய ஃபெடரர், தனது ஆதிக்கம் முடியவில்லை என்பதை இந்த உலகிற்கு காட்டியதோடு, தன்னை விமர்சித்தவர்களின் வாயையும் அடைத்தார்.
அதன்பிறகு தனது வயது, உடற்தகுதி போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்ட ஃபெடரர், புல்தரை போட்டிகளில் மட்டுமே ஆர்வம் காட்டினார். விம்பிள்டனை மனதில் வைத்து, பிரெஞ்சு ஓபன் உள்பட களிமண் ஆடுகளங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்பதைத் தவிர்த்தார்.
ஃபெடரர் தான் நினைத்ததைப் போன்றே தனது கனவு போட்டியான விம்பிள்டன் இறுதிச் சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இதன்மூலம் விம்பிள்டனில் அதிக பட்டங்கள் வென்றவரான பீட் சாம்ப்ராஸ், வில்லியம்ஸ் ரென்ஷா ஆகியோரின் சாம்ராஜியத்தை தகர்த்தார். குறிப்பாக ஒரு செட்டைக்கூட இழக்காமல் இந்த விம்பிள்டன் தொடரை அவர் கைப்பற்றியிருக்கிறார். 'ஓபன் எரா'வில் ஒரு செட்டைக்கூட இழக்காமல் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற 2-ஆவது வீரர் என்ற பெருமையும் அவர் வசமாகியிருக்கிறது.
சவாலுக்கு மத்தியில்... கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வெல்வது அவ்வளவு எளிதல்ல. அதிலும் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கிறார் ஃபெடரர். ஆடவர் டென்னிஸில் எல்லா காலங்களிலும் தலைசிறந்த வீரர்களாக கருதப்படும் லெய்டன் ஹெவிட், ஆன்டி ரோடிக், ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச், ஆன்டி முர்ரே போன்றோர் கோலோச்சிய காலத்தில் ஃபெடரர் சாதித்திருக்கிறார்.
ஃபெடரரின் பரமவைரியான நடால் 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும், ஜோகோவிச் 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் வென்றிருக்கிறார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றில் 10 முறை தோற்றிருக்கும் ஃபெடரர், அதில் 9 முறை நடால் அல்லது ஜோகோவிச்சிடமே தோற்றுள்ளார். இதிலிருந்து ஃபெடரர் எவ்வளவு கடுமையான சவால்களுக்கிடையே சாதித்திருக்கிறார் என்பதை உணர முடியும். ஒருவேளை நடால், ஜோகோவிச் போன்றவர்களின் ஆதிக்கம் இல்லாமல் இருந்திருந்தால், ஃபெடரர் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 30-ஐ நெருங்கியிருக்கலாம்.
வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி 36 வயதை எட்டவுள்ள ஃபெடரர், குறிப்பிட்ட போட்டிகளை மட்டுமே தேர்வு செய்து விளையாடி வருவதால் அவர் இன்னும் சில கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல வாய்ப்புள்ளது. அப்படி வெல்வாரானால், அதை மற்ற வீரர்கள் முறியடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. சர்வதேச டென்னிஸில் 20 ஆண்டுகள் கோலோச்சிவிட்ட
ஃபெடரர் ஒலிம்பிக்கில் தங்கம் (ஒற்றையர் பிரிவில்) வெல்லாதது மட்டும் குறையாக இருக்கிறது.
ஃபெடரரின் சாதனைகளும், அவர் பெற்ற விருதுகளும் அவருடைய திறமைக்கு சான்று. மக்களால் தேர்வு செய்யப்படும் ஏடிபி பிரபலமிக்க வீரர் விருதை தொடர்ச்சியாக 14 முறை வென்றவர். களத்தில் ஆக்ரோஷமின்றி, சிரித்த முகத்துடன் அழகான 'ஃபோர்ஹேண்ட் ஷாட்'களை ஆடும் விம்பிள்டனின் ராஜாவான ஃபெடரருக்குதான் ரசிகர்கள் மனதிலும் முதலிடம். ஃபெடரர் இனி பட்டம் வெல்கிறாரோ, இல்லையோ, ஓய்வு பெறும் வரை அவர்தான் ரசிகர்களின் சாம்பியன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com