ரவி சாஸ்திரியுடனும் கருத்துவேறுபாடுகள் ஏற்படுமா? விராட் கோலி பதில்!

முன்பே இணைந்து பணியாற்றியுள்ளோம். எனவே எதிர்பார்ப்பு என்ன என்று இருவருக்குமே தெரியும்...
ரவி சாஸ்திரியுடனும் கருத்துவேறுபாடுகள் ஏற்படுமா? விராட் கோலி பதில்!

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று கொழும்புக்குப் புறப்பட்டுச் செல்கிறது. இதனையொட்டி இந்திய அணி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றது.

அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

கேப்டன் - பயிற்சியாளர் இடையேயான நட்புறவு குறித்துக் கேட்கிறீர்கள்.என் கையில் பேட் மட்டுமே உள்ளது. ஆனால் நிறைய ஊகங்கள் உலவுகின்றன. என்னால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. என் திறமைக்கேற்றவாறு பணியாற்றுவதுதான் எனக்கான பணி. 

நானும் ரவி சாஸ்திரியும் இணைந்து கடந்த மூன்று வருடங்களாகப் பணியாற்றியுள்ளோம். எனவே புதிதாகப் புரிந்துகொள்ள எதுவுமில்லை. முன்பே இணைந்து பணியாற்றியுள்ளோம். எனவே எதிர்பார்ப்பு என்ன என்று இருவருக்குமே தெரியும். எனவே புரிதலில் புதிதாக எந்தவொரு முயற்சியும் தேவையில்லை. எனக்கும் ரவி சாஸ்திரிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாது

சரியான புரிதலும் தகவல் பரிமாற்றமும் எந்தவொரு உறவிலும் அவசியம். கிரிக்கெட்டில் மட்டுமல்ல. எனவே இங்கும் அதே விதிமுறைதான். 

எனக்குக் கூடுதல் அழுத்தம் கிடையாது. எது நடக்குமோ அது நிச்சயம் நடக்கும். கூடுதலாக பாரத்தை ஏற்றிக்கொள்ளமாட்டேன். எனக்கென்று ஒரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாரத் அருண், உதவிப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவிலும், 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொழும்பிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கண்டியிலும் தொடங்குகிறது.

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com