சென்னை ஓபன் போட்டி அதிகாரபூர்வமாக ரத்தானது!

சென்னை ஓபன் போட்டியை நடத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மிகுந்த ஒத்துழைப்பும் உதவியும் அளித்தார்கள்...
சென்னை ஓபன் போட்டி அதிகாரபூர்வமாக ரத்தானது!

தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் கடந்த 21 வருடங்களாக நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட் சாம்பியன் பட்டம் வென்றார். 

சென்னை ஓபன் போட்டியை நடத்தும் ஐஎம்ஜிஆர் நிறுவனத்துடன் 3 வருடத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது தமிழக அரசு. ஒவ்வொரு வருடமும் போட்டி நடத்த தமிழக அரசு ரூ. 2 கோடி வழங்கிவருகிறது. 

இந்நிலையில் அடுத்த 2 வருடங்களுக்கான சென்னை ஓபன் போட்டியை ரத்து செய்துள்ளதாக ஐஎம்ஜிஆர் நிறுவனம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

ஐஎம்ஜிஆர் என்பது ஐஎம்ஜி மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஆகிய இரண்டும் இணைந்து உருவான நிறுவனமாகும். 2017 சென்னை ஓபன் போட்டி முடிந்தபிறகு, ஐஎம்ஜிஆர் நிறுவனத்திடம் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இவ்வாறு கூறியது: சென்னை ஓபன் போட்டியின் விளம்பரதாரராக இனி ஏர்செல் இருக்காது. ஏனெனில் அவர்கள் அனில் அம்பானியின் ரிலையன்ஸூடன் இணையவுள்ளதால்.  எனவே ஐஎம்ஜிஆர் நிறுவனம் புதிய விளம்பரதாரரைத் தேடிக்கொள்ளவேண்டும் என்று அவர்களிடம் கூறினோம். மீதமுள்ள தொகையை தமிழக அரசிடமிருந்தும் உள்ளூர் விளம்பர நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்வோம். எனவே 2019 வரை சென்னை ஓபன் போட்டியை ஒப்பந்தப்படி ஐஎம்ஜிஆர் நடத்தவேண்டும் என்றும் கூறினோம்.  

தற்போது ஐஎம்ஜிஆரிடம் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் நடத்துவதாக இருந்த சென்னை ஓபன் போட்டியை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்படும். 

அதேசமயம், புணேவில் நடைபெறவுள்ள ஏடிபி டென்னிஸ் போட்டிக்கு எங்கள் வாழ்த்துகளையும் கூறிக்கொள்கிறோம். சென்னை ஓபன் போட்டியை நடத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மிகுந்த ஒத்துழைப்பும் உதவியும் அளித்தார்கள். தமிழக அரசு மற்றும் விளம்பரதாரர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை ஓபன் போட்டி தற்போது புணே நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் ஐஎம்ஜிக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் இடையே நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா ஓபன் போட்டியை நடத்துவதில் பெருமை கொள்கிறோம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார். ஐஎம்ஜி நிறுவனமும் மகாராஷ்டிரா ஓபன் போட்டியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து சென்னையில் நடைபெற்று வந்த சென்னை ஓபன் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.  இது சென்னை டென்னிஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புணே இந்தப் போட்டியின் மூன்றாவது மையமாகும். 1996-ல் முதலில் தில்லியில் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு இந்த வருடம் வரை இப்போட்டி சென்னையில் நடைபெற்றது. அடுத்த வருடம் முதல், புணேவில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com