மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா?: ஆஸ்திரேலியாவுடன் இன்று

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் இங்கிலாந்தின் டெர்பி நகரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா?: ஆஸ்திரேலியாவுடன் இன்று

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் இங்கிலாந்தின் டெர்பி நகரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதுவரையில் ஆஸ்திரேலியாவுடன் 42 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி, அதில் 34-இல் தோற்றுள்ளது. ஆனாலும், நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அபார வெற்றி கண்ட மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் மிகுந்த நம்பிக்கையோடு ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் இந்தியா வெல்லுமானால், மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பெருமையைப் பெறும். முன்னதாக 2005-இல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, அதில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரையில் டெர்பி மைதானத்தில் ஆஸ்திரேலியா இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட விளையாடவில்லை. ஆனால் இந்திய அணி தனது குரூப் சுற்றில் 4 ஆட்டங்களை டெர்பி மைதானத்தில்தான் விளையாடியுள்ளது. எனவே அது இந்திய அணிக்கு சாதகமானதாகும்.
இதுதவிர குரூப் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுக்க இந்திய அணிக்கு இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பாகும். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. குரூப் சுற்றில் 7 ஆட்டங்களில் விளையாடிய ஆஸ்திரேலியா, அதில் 6-இல் வெற்றி கண்டு வலுவான அணியாக உள்ளது.
மிரட்டும் மிதாலி: இந்திய அணிபூனம் ரெளத், ஸ்மிருதி மந்தனா, கேப்டன் மிதாலி ராஜ், மன்பிரீத் கெளர், தீப்தி சர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்களில் பூனம் ரெளத் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குரூப் சுற்று ஆட்டத்தில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆட்டத்திலும் அவர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் ஸ்மிருதி மந்தனா கடந்த சில ஆட்டங்களில் பெரிய அளவில் ரன் சேர்க்காதது கவலையளிக்கிறது.அவர் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கும். மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் மிதாலி ராஜ் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குரூப் சுற்று ஆட்டத்தில் அரை சதம் விளாசிய மிதாலி ராஜ், நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார். உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியிலும் பெரிய அளவில் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூஸிலாந்துக்கு எதிராக 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்த வேதா கிருஷ்ணமூர்த்தி இந்த ஆட்டத்திலும் அதிரடியாக ஆடும்பட்சத்தில் இந்தியா வலுவான ஸ்கோரை குவிக்க வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சில் ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் ராஜேஷ்வரி கெய்க்வாட், தீப்தி சர்மா உள்ளிட்டோரையும் நம்பியுள்ளது இந்தியா. நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜேஷ்வரி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக இருந்தாலும், இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளும் கடுமையாகப் போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம்.
ஆஸ்திரேலியா வீழ்த்த முடியாத அணியல்ல
அரையிறுதி ஆட்டம் குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி கூறியதாவது: ஆஸ்திரேலியா வெற்றிகரமான அணியாகும். ஆனால் அதை வீழ்த்த முடியாத அணி என்று கூற முடியாது. இந்திய அணி தனது திட்டங்களை சரியாக செயல்படுத்தும்பட்சத்தில் நியூஸிலாந்தை வென்றதுபோல ஆஸ்திரேலியாவையும் வீழ்த்த முடியும்.
இந்தியா முதலில் பேட் செய்து வலுவான ஸ்கோரை குவிக்கும்பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். எனவே டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவின் தொடக்க வீராங்கனைகள் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதன் கேப்டன் மெக் லேனிங் அபாரமாக ஆடி வருகிறார். எனவே அவர்கள் முதலில் பேட் செய்தால், இந்தியாவிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட வாய்ப்புள்ளது என்றார்.
ஆஸி.யை வீழ்த்த முடியும்: மிதாலி நம்பிக்கை
அரையிறுதியில் மிகச்சிறப்பாக ஆடும்பட்சத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும் என இந்திய கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அரையிறுதி ஆட்டம் நடைபெறவுள்ள டெர்பியில்தான் இந்த உலகக் கோப்பையின் பெரும்பாலான குரூப் சுற்று ஆட்டங்களை நாங்கள் விளையாடியுள்ளோம். இந்த மைதானத்தைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். அது எங்களுக்கு சாதகமானதாகும். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவும் தலைசிறந்த அணியாகும். அவர்கள் நடப்பு சாம்பியனும்கூட. அந்த அணியில் அதிக நெருக்கடியான ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் கொண்ட ஏராளமான வீராங்கனைகள் உள்ளனர்.
குரூப் சுற்றில் ஆஸ்திரேலியா எங்களை வீழ்த்தியிருக்கலாம். ஆனால் அரையிறுதியைப் பொறுத்தவரையில் சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்படும் அணியே வெற்றி பெறும். நான் ஏற்கெனவே சொன்னதைப் போல டெர்பி எங்களுக்கு உள்ளூர் மைதானத்தைப் போன்றதாகும். அதனால் அரையிறுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு அபாரமாக ஆட வேண்டியது அவசியமாகும்.
எங்கள் அணியைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி மிகப்பெரிய ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் நாங்கள் வென்றுவிட்டால், அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என்றார்.
போட்டி நேரம்: பிற்பகல் 3, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com