ரவி சாஸ்திரியுடன் சுமுகமாக பணியாற்ற முடியும்

தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும், எனக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால், அவருடன் இணைந்து சுமுகமாக பணியாற்ற முடியும் என எதிர்பார்க்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின்
ரவி சாஸ்திரியுடன் சுமுகமாக பணியாற்ற முடியும்

தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும், எனக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால், அவருடன் இணைந்து சுமுகமாக பணியாற்ற முடியும் என எதிர்பார்க்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
இந்தியா-இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 26-ஆம் தேதி இலங்கையின் காலே நகரில் தொடங்குகிறது. அதில் பங்கேற்க இலங்கை புறப்படுவதற்கு முன்னதாக மும்பையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த கோலி கூறியதாவது:
நானும், ரவி சாஸ்திரியும் ஏற்கெனவே 3 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அதனால் எங்கள் இருவரிடையே நல்ல புரிதல் இருக்கும். அதை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே நாங்கள் புதிதாக புரிந்துகொள்வதற்காக எதுவும் இல்லை என நினைக்கிறேன்.
நான் ஏற்கெனவே சொன்னதுபோல, இதற்கு முன்னர் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியிருப்பதால் எங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது. அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். கடந்த சில வாரங்களாக ஏராளமான ஊகங்கள் வலம் வந்தன. அதுபோன்ற விஷயங்கள் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. அணி நிர்வாகத்துடன் இணைந்து சிறந்த அணியை கட்டமைத்து கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டும். அதுதான் என்னுடைய பணி என்றார்.
கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சம்பவங்களால் (கும்ப்ளே ராஜிநாமாவும், அது தொடர்பான சர்ச்சைகளும்) உங்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டதா என கோலியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: எனக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டதாக நினைக்கவில்லை. ஏனெனில் என்ன நடக்குமோ, அது நடந்தே தீரும். வெளியுலகில் நடக்கிற விஷயங்களை பொருட்படுத்த தேவையில்லை என நான் நம்புகிறேன்.
கடந்த காலங்களில் நாங்கள் ஒவ்வொருவருமே கடினமான காலக்கட்டங்களை சந்தித்து இருக்கிறோம். எனவே விமர்சனங்களை எதிர்கொள்வது எங்களுக்கு புதிதல்ல. எனக்கென்று சில பொறுப்புகள் இருக்கின்றன. நான் கேப்டனாக இருக்கும் வரையோ அல்லது அந்த பொறுப்பில் நான் அமர்த்தப்பட்டிருக்கும் வரையோ எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்பட விரும்புகிறேன்.
தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் பேட்டிங் பற்றிய சிந்தனை இல்லாமல் போய்விடும். எனவே நம்முடைய கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வதோடு, தேவையில்லாத விஷயங்களை புறந்தள்ளிவிட்டு செல்ல வேண்டும் என்றார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த கோலி, 'புரிதலும், தகவல் பரிமாற்றமும் அனைத்து இடங்களிலும் அவசியமாகும். அது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, நமது சொந்த வாழ்க்கைக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com