தேசிய எல்லைகளை கபடி தொடும்: கமல்ஹாசன்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கபடி விளையாட்டு தேசிய எல்லைகளைத் தொடும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ் தலைவாஸ் அணியின் உடை அறிமுக விழாவில் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் கமல்ஹாசன், ராம் சரண், அல்லு அர்ஜூன், நிம்மகட பிரசாத் உள்ளிட்டோர்.
தமிழ் தலைவாஸ் அணியின் உடை அறிமுக விழாவில் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் கமல்ஹாசன், ராம் சரண், அல்லு அர்ஜூன், நிம்மகட பிரசாத் உள்ளிட்டோர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கபடி விளையாட்டு தேசிய எல்லைகளைத் தொடும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணியின் உடை அறிமுக விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அணியின் உரிமையாளர்களான சச்சின் டெண்டுல்கர், நிம்மகட பிரசாத், அல்லு அரவிந்த், அல்லு அர்ஜூன், ராம் சரண் ஆகியோரோடு இணைந்து அணியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், அணி வீரர்கள் மற்றும் தமிழ் தலைவாஸ் அணியின் 'டி - சர்ட்டை' அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கே தோன்றிய விளையாட்டு கபடி. தமிழர்களின் நீண்ட பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் கபடி விளையாட்டு திகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகில் எங்கோ ஒரு மூலையில் தோன்றிய கிரிக்கெட், பல எல்லைகளைத் தொடும் போது, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கபடி, தேசிய எல்லைகளைத் தொடும் என நம்புகிறவர்களில் நானும் ஒருவன்.
பெருமையாகக் கருதுகிறேன்: இந்த தருணத்தில் பங்கெடுக்க வைத்தவர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை பெருமையாகவும், கடமையாகவும் எடுத்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறேன்.
தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற வேண்டும். இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இங்கு வந்து சேர வேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கு பெருமையையும், பொறுப்பையும் சேர்த்தவர்களுக்கு மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
தூதரானதில் மகிழ்ச்சி: 2 வயதில் பரமக்குடியை விட்டு வந்து விட்டதால், கபடியை என்னால் ஆட முடியவில்லை. அதன் பின்னர் ஆடியிருக்கிறேன். ஸ்டண்ட் நண்பர்களோடு பின்னாளில் படப்பிடிப்புத் தளங்களில் ஆடியிருக்கிறேன். அப்படி ஒரு தருணத்தில் மூக்கு உடைந்து விட்டது. அதிலிருந்து கபடி விளையாடுவதில்லை. இப்போது அதே கபடிக்கு தூதராகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
'தமிழ் தலைவாஸ்' என்று பன்மையில் பெயர் வைத்ததில் இன்னும் மகிழ்ச்சி. இப்போதெல்லாம் ஒருமையில் பேசுவது வாடிக்கையாகி விட்டது. எலலோரும் இந்நாட்டின் மன்னரே என்பதும் காரணமாக இருக்கலாம்.
இந்தியாவின், தமிழகத்தின் கலாசாரத்தில் உள்ள வீரவிளையாட்டுகள் எல்லாமே அமைதிக் காலத்தில் போரை மறந்துவிடாமல் இருப்பதற்காக விளையாடப்பட்டது. ரத்தத்தை பார்த்ததும் பயப்படுவது குணாதிசயம் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
அலகு குத்துதல், ஏறுதழுவுதல் என எல்லா விளையாட்டுகளுமே அப்படித்தான் வந்திருக்கும். ஒலிம்பிக் வந்தது கூட அப்படித்தான்.
சச்சினை வரவேற்கிறேன்: எனக்கு என்ன பெருமை என்றால், இந்திய விளையாட்டுகளில் மூத்த அண்ணனாகத் திகழும் சச்சின் இதில் பங்கு கொண்டதுதான். அவரின் பெருந்தன்மை என்பதைவிட, இதை தமிழுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். இதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் அந்த சந்தோஷத்தில்தான். கபடி, சடுகுடு என பல பெயர்களில் இருக்கும் இந்த விளையாட்டை நாம் மறந்து போனது மாதிரியான வேதனை எதுவும் இருக்க முடியாது. அந்த விளையாட்டை இப்போது இவர்கள் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் கமல்ஹாசன்.
எல்லோரும் விளையாடுங்கள்: சச்சின்
நாம் அனைவரும் வாழ்வின் ஏதேனும் ஒரு தருணத்தில் கபடி விளையாடியிருப்போம். கபடியில் உள்ள ஆற்றல் மற்றும் விறுவிறுப்பு அபரிமிதமானது. உலகில் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. அதேவேளையில் உடல் பருமன் கொண்ட மக்கள் உள்ள நாடுகளில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. நாட்டின் இளைய சமூகம் உடல் நலம் இல்லாமல் இருப்பது நல்லதல்ல.
அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். தமிழ் தலைவாஸ் வீரர்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடி ரசிகர்களின் மனதை ஈர்க்க வேண்டும்.
கபடி போட்டியில் தற்காப்பு வீரராகச் செயல்பட எம்.எஸ். தோனி சிறந்தவராக இருப்பார். அதேவேளையில் ரைடராக செல்பவர் மூச்சை அடக்கிச் செயல்படவேண்டும். அதனால் ரைடராக பாடகர் சங்கர் மகாதேவனைத் தேர்வு செய்வேன் என்றார் சச்சின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com