இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு கடும் சவால்: மிதாலி ராஜ்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் காத்திருப்பதாக இந்திய கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு கடும் சவால்: மிதாலி ராஜ்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் காத்திருப்பதாக இந்திய கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மிதாலி ராஜ் கூறியதாவது:
இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பதால் எங்கள் வீராங்கனைகள் மிகுந்த உற்சாகமாக உள்ளனர். உலகக் கோப்பை போட்டி கடும் சவாலாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் பேட்ஸ்மேன்களும் சரி, பெளலர்களும் சரி சூழலுக்கு ஏற்றவாறு தேவையான நேரத்தில் சிறப்பாக ஆடி வெற்றி தேடித்தந்தனர்.
இறுதி ஆட்டம் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எளிதாக இருக்காது. எனினும் போட்டி நடைபெறும் நாளில் எந்த அணி சிறப்பாக ஆடுகிறது என்பதைப் பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். முதல் ஆட்டத்தில் எங்களிடம் தோல்வி கண்ட இங்கிலாந்து அணி, அதன்பிறகு அபாரமாக ஆடி வருகிறது. எனவே இறுதி ஆட்டத்திற்கு சரியான திட்டங்களை வகுத்து அதை சிறப்பாக செயல்படுத்துவது அவசியமாகும். இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால் சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது அந்த அணிக்கு சவாலாக இருக்கும் என்றார்.
ஹர்மன்பிரீத் கெளரின் ஆட்டம் குறித்துப் பேசிய மிதாலி ராஜ், 'அவருடைய ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஜூலான் கோஸ்வாமி தனது பழைய ஃபார்முக்கு வந்திருக்கிறார். ஷிகா பாண்டேவும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குரூப் சுற்றில் தோற்ற நிலையில், அதன்பிறகு நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆகியவற்றில் வெற்றி கண்டது மிகப்பெரிய சாதனையாகும். எங்கள் அணியில் சர்வதேச தரத்திலான வீராங்கனைகள் இருக்கிறார்கள்' என்றார்.
ஹர்மன்பிரீத் கெளர்: அரையிறுதியில் 171 ரன்கள் குவித்து ஆட்டநாயகி விருதை வென்ற ஹர்மன்பிரீத் கூறியதாவது: இந்த உலகக் கோப்பையில் பெரிய அளவில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதனால் வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பாக ஆடி எனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அரையிறுதியில் அந்த வாய்ப்பு கிடைத்தது. நான் நினைத்தபடியே சிறப்பாக ஆடி ரன் குவித்துவிட்டேன். எனது கனவு நனவாக உதவிய கடவுளுக்கு நன்றி என்றார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான இறுதி ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com