சென்னை ஓபன் இனிமேல் மகாராஷ்டிர ஓபன்! அதிர்ச்சியில் டென்னிஸ் ரசிகர்கள்

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் புணேவுக்கு மாற்றப்பட்டிருப்பது சென்னை
சென்னை ஓபன் இனிமேல் மகாராஷ்டிர ஓபன்! அதிர்ச்சியில் டென்னிஸ் ரசிகர்கள்

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் புணேவுக்கு மாற்றப்பட்டிருப்பது சென்னை ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 21 ஆண்டுகளாக திருவிழா போன்று நடத்தப்பட்டு வந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியையும், உலகின் முன்னணி வீரர்களையும் இனி நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் காண இயலாது என்பது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சென்னையின் இளம் டென்னிஸ் வீரர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றம்தான்.
பேட்ரிக் ராஃப்டர், போரீஸ் பெக்கர், கார்லஸ் மோயா, ரஃபேல் நடால், ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா போன்ற டென்னிஸ் ஜாம்பவான்களால் அலங்கரிக்கப்பட்ட பாரம்பரியம் கொண்டது சென்னை ஓபன்.
உலகின் தலைசிறந்த இரட்டையர் வீரர்களான லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பெருமை சென்னை ஓபனையே சேரும். சென்னை ஓபனில் பட்டம் வென்ற பிறகுதான் பயஸýம், பூபதியும் இரட்டையர் பிரிவில் வலுவான இணையாக உருவெடுத்தார்கள். இதேபோன்று இந்தியாவின் முன்னாள் முதல் நிலை வீரரான சோம்தேவ், தமிழகத்தின் முன்னணி வீரர்களான ராம்குமார், ஜீவன் நெடுஞ்செழியன் போன்றவர்களை டென்னிஸ் உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை சென்னை ஓபனையே சேரும்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை 2019-ஆம் ஆண்டு வரை சென்னையில் நடத்துவதற்கு தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும், போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றிருக்கும் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்திருந்தன.
2010 முதல் 2017 வரை சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த ஏர்செல் நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுவிட்டதால் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகிவிட்டது.
இதையடுத்து புதிய டைட்டில் ஸ்பான்சரை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தேடி வந்த நிலையில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துடன் செய்திருந்த ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்த ஐஎம்ஜி ரிலையன்ஸ், இப்போது மகாராஷ்டிர அரசுடன் கை கோர்த்துள்ளது. சென்னையில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் போட்டி, புணேவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு முதல் மகாராஷ்டிர ஓபன் என்ற பெயரில் நடைபெறும் என அறிவித்துள்ளது.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புணேவுக்கு மாற்றப்பட்டிருப்பதால் அதிர்ச்சியடைந்துள்ள தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், "எங்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஐஎம்ஜி ரிலையன்ஸ் திடீரென ரத்து செய்திருப்பது தொடர்பாக சட்ட நிபுணருடன் ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்' என கூறியிருக்கிறது. ஆனால் அவர்களின் கருத்தை ஆறுதலாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாமே தவிர, அதனால் பலன் கிடைக்கும் என்று நம்பிவிட முடியாது.
""மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் சென்னை ஓபன் புணேவுக்கு மாற்றப்பட்டிருக்காது. அவர் உயிரோடு இருந்திருந்தால் சென்னை ஓபனை இங்கிருந்து மாற்றும் துணிவு ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் வந்திருக்காது. 2005-இல் ஸ்பான்சர் விலகியதால் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அது அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவின் கவனத்துக்கு போகவே, உடனடியாக போட்டியை நடத்துவதற்கு தேவையான நிதியுதவியை அளித்தார். அதன்பிறகு இதுவரையில் சென்னை ஓபன் போட்டிக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு வந்திருக்கிறது. சென்னை ஓபன் போட்டி நடத்தப்பட்ட நுங்கம்பாக்கம் மைதானம்கூட ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதுதான்'' என்று சுட்டிக் காட்டுகிறார்கள் டென்னிஸ் ரசிகர்கள்.
ஜெயலலிதா எடுத்தது போன்ற முயற்சியை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் எடுக்கவில்லை. டைட்டில் ஸ்பான்சர் விஷயத்தில் ஒரேயொரு நிறுவனத்தை மட்டுமே நம்பியிருந்ததும், பெரிய அளவில் ஸ்பான்சர்களை ஈர்க்காததும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் முயற்சியின்மையையே காட்டுகிறது.
சென்னை ஓபன் போட்டி நடைபெறுகிறபோது, அதை பிரபலப்படுத்துவதற்கு தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் போதிய முயற்சி எடுக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இறுதி ஆட்டம் நடைபெறுகிறபோது மட்டுமே மைதானம் நிரம்பி வழியும். எஞ்சிய நாள்களில் வெறிச்சோடியே காணப்பட்டிருக்கிறது. இது சென்னை ஓபன் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தாலும், அது வர்த்தக ரீதியாக தோல்வியடைந்துவிட்டதையே காட்டுகிறது.
இதனால் உலகின் முன்னணி வீரர்களை கவர்ந்திழுக்கும் வகையில் சென்னை ஓபன் போட்டியின் பரிசுத் தொகையை உயர்த்த முடியவில்லை. கடந்த சென்னை ஓபனில் மொத்தப் பரிசுத் தொகையே ரூ.3 கோடியே 39 லட்சம்தான். சென்னை ஓபன் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக ஏடிபி விருதைப் பெற்றிருந்தாலும், அந்தப் போட்டியை வர்த்தக ரீதியாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தால் வெற்றி பெற வைக்க முடியவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஐஎஸ்எல் கால்பந்து, புரோ கபடி போன்றவை வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. ஆனால் பணக்காரர்களின் விளையாட்டான டென்னிûஸ வர்த்தக ரீதியாக வெற்றி பெற வைக்க முடியவில்லை என்றால், அது தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஆகியவற்றின் இயலாமை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய டென்னிஸின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்த பெருமை தமிழகத்தையே சேரும். தமிழக வீரர்களான ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், அமிர்தராஜ் சகோதரர்கள் (ஆனந்த், விஜய், அசோக்) ஆகியோர் இந்திய டென்னிûஸ இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்கள். இவர்கள் அனைவருமே ஓய்வுக்குப் பிறகும் ஏதாவது ஒரு வகையில் டென்னிஸின் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் செயல்பட்ட பிரிட்டானியா-அமிர்தராஜ் டென்னிஸ் அகாதெமியால் பட்டை தீட்டப்பட்டவர்களில் இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களான லியாண்டர் பயஸýம், சோம்தேவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை தமிழகத்துக்கு கொண்டு வந்ததில் அமிர்தராஜ் சகோதரர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இப்போது சென்னை ஓபன் புணேவுக்கு மாற்றப்பட்டதால் அமிர்தராஜ் சகோதரர்கள் மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள். ஆனாலும் போட்டி சென்னையில் இருந்துதான் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு வெளியில் செல்லவில்லை என்பது மட்டுமே ஆறுதல் அளிக்கிறது.
சீசனின் முதல் போட்டியான சென்னை ஓபனில் ஐரோப்பிய வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றதற்கான காரணம், சென்னையில் நிலவும் காலநிலையும், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் நடைபெறும் மெல்போர்ன் நகரில் நிலவும் காலநிலையும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால்தான்.
ஆனால் மகாராஷ்டிர ஓபன் நடைபெறவுள்ள புணேவில் ஜனவரி முதல் வாரத்தில் கடும் குளிர் நிலவும். அதனால் ஐரோப்பிய வீரர்கள் மகாராஷ்டிர ஓபனுக்கு முன்னுரிமை கொடுப்பார்களா என்பது தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com