மகளிர் உலகக் கோப்பை: மகுடம் சூடுமா இந்தியா?

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட், இந்திய கேப்டன் மிதாலி ராஜ்.
கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட், இந்திய கேப்டன் மிதாலி ராஜ்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மகளிர் உலகக் கோப்பை போட்டியில் 2-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருக்கும் இந்திய அணி, இந்த முறை கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளது. இறுதி ஆட்டத்தில் இந்தியா வெல்லுமானால் உலகக் கோப்பையை வென்ற 4-ஆவது அணி என்ற பெருமையைப் பெறும். இதற்கு முன்னர் 2005-இல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, அப்போது ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்ப இழந்தது.
ஆனால் இந்த முறை இந்திய அணி தனது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உற்சாகத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்தியிருப்பதால் மிகுந்த நம்பிக்கையோடு களமிறங்குகிறது மிதாலி ராஜ் தலைமயிலான இந்திய அணி.
அதேநேரத்தில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதிலும், குரூப் சுற்றில் இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுப்பதிலும் தீவிரமாக உள்ளது.
மிரட்டும் ஹர்மன்பிரீத்: இந்திய அணி பேட்டிங், பெüலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீராங்கனைகளான பூனம் ரெüத்-ஸ்மிருதி மந்தனா ஜோடி வலுவான தொடக்கம் ஏற்படுத்தித் தருவது முக்கியமானதாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான குரூப் சுற்றில் 90 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த ஸ்மிருதி மந்தனா, கடைசியாக விளையாடிய சில ஆட்டங்களில் ஜொலிக்கவில்லை. அது கவலையளிப்பதாக இருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர் மீண்டும் பெரிய அளவில் ரன் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் மிதாலி ராஜ், தீப்தி சர்மா, ஹர்மன்பிரீத் கெüர், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கெüர், வேதா ஆகிய மூவருமே உச்சகட்ட ஃபார்மில் இருப்பது இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
2-ஆவது இடத்தில் மிதாலி: இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் மிதாலி ராஜ் 392 ரன்களுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கெüர் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. வேதாவின் அதிரடி வழக்கம்போல் இந்த ஆட்டத்திலும் தொடரும் என நம்பலாம்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் ராஜேஷ்வரி கெய்க்வாட், தீப்தி சர்மா கூட்டணியும் பலம் சேர்க்கிறது.
வலுவான பேட்டிங்: இங்கிலாந்து அணி, முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற பிறகு விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் அபாரமாக ஆடியிருக்கிறது. அந்த அணி டேமி பியூமான்ட், கேப்டன் ஹெதர் நைட், சாரா டெய்லர், நடாலி சிவெர் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. மேற்கண்ட 4 பேரும் இந்த உலகக் கோப்பையில் 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் கேத்தரின் பிரன்ட், ஷிரப்சோல் உள்ளிட்டோரை நம்பியுள்ளது இங்கிலாந்து.
இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரையில் 62 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 26 வெற்றிகளையும், இங்கிலாந்து 34 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 2 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை. அதேநேரத்தில் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 10 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 6-லும், இந்திய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ரூ.4.25 கோடி பரிசு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.4.25 கோடியும், இரண்டாவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.2.12 கோடியும் ரொக்கப் பரிசாக
வழங்கப்படவுள்ளது.

லார்ட்ஸில் இந்தியா...

1983 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்தான் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி மகுடம் சூடியது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி. அதே லார்ட்ஸ்
மைதானத்தில்தான் மகளிர் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டமும்
நடைபெறுகிறது. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியைப் போன்று, மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணியும் உலகக் கோப்பையை
வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

2-ஆவது முறையாக இறுதி ஆட்டத்தில் களமிறங்கும் மிதாலி, கோஸ்வாமி...

இந்திய கேப்டன் மிதாலி ராஜ், வேகப்பந்து வீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி
ஆகியோர் 2-ஆவது முறையாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில்
பங்கேற்கவுள்ளனர்.
இதற்கு முன்னர் 2005-இல் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அவர்கள் இருவரும் விளையாடியுள்ளனர்.
இது குறித்து மிதாலி ராஜ் கூறுகையில், "இந்த இறுதி ஆட்டம் எனக்கும், கோஸ்வாமிக்கும் சிறப்பான ஒன்றாகும். ஏனெனில் நாங்கள் இருவரும்தான் 2005-இல் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இருந்து
இப்போது வரையில் அணியில் இருக்கிறோம். 2-ஆவது முறையாக இறுதி ஆட்டத்தில் விளையாடவிருப்பது எங்கள் இருவருக்கும் 2005 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை நினைவுபடுத்தியுள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com