சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக ரசிகர்கள்: தோனி மகிழ்ச்சி

கடந்த இரண்டு வருடங்களாக சிஎஸ்கே ஐபிஎல்-லில் இல்லாவிட்டாலும் ரசிகர்கள் மிகுந்த ஆதரவு... 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக ரசிகர்கள்: தோனி மகிழ்ச்சி

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டு தடை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இது எங்களுக்கு புதிய தொடக்கம். சென்னை அணியைப் பிரபலப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் தொடங்கிவிட்டோம். 
ஏராளமான ஸ்பான்சர்கள் எங்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறார்கள். ரசிகர்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் எங்களுக்கு இருக்கிறது. கேப்டன் தோனியை மீண்டும் சென்னை அணிக்காக ஆடவைப்போம். புணே அணியுடனான தோனியின் ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதியில் முடிகிறது. அவருடன் நாங்கள் இன்னும் பேசவில்லை. தோனி மட்டுமின்றி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன்டி பிக்கேல், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்டீவ் ரிக்ஸன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொண்டு வருவது பற்றி எங்கள் அணி நிர்வாகம் சிந்தித்து வருகிறது என்றார்.

இந்நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிக்காக சென்னை வந்திருந்த தோனி, ஒரு பேட்டியில் கூறியதாவது: 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக ரசிகர்கள் உள்ளார்கள். கடந்த இரண்டு வருடங்களாக சிஎஸ்கே ஐபிஎல்-லில் இல்லாவிட்டாலும் ரசிகர்கள் மிகுந்த ஆதரவு அளித்தார்கள். சிஎஸ்கே மீண்டும் ஐபிஎல்-லில் கலந்துகொள்ளவேண்டுமென்று ஆர்வமாக இருந்தார்கள். கடந்த இரண்டு வருடங்களாக சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டிகள் நடைபெறவில்லை. டெஸ்ட் போட்டி ஒன்று நடந்தது. எனவே இங்கு சிஎஸ்கேவின் போட்டிகள் நடைபெறவேண்டுமென்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். இரண்டு வருடங்கள் கழித்து டிஎன்பிஎல் போட்டியின் அறிமுக விழாவுக்கு சேப்பாக்கம் மைதானத்துக்கு நான் வந்துள்ளேன். 

இங்குள்ள ரசிகர்கள் திறமையாளர்களை மிகவும் மதிக்கிறார்கள். இந்தியாவும் சிஎஸ்கேவும் விளையாடும்போது அவற்றின் வெற்றியை எதிர்பார்த்தாலும் நல்ல கிரிக்கெட் விளையாடப்படும்போது அதை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com