பிசிசிஐ கூட்டங்களில் என். சீனிவாசன் பங்கேற்கத் தடை!

பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட என்.சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர்...
பிசிசிஐ கூட்டங்களில் என். சீனிவாசன் பங்கேற்கத் தடை!

பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் பிசிசிஐ கூட்டங்களில் பங்கேறகக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மாநில கிரிக்கெட் சங்கங்களின் பிரதிநிதிகளாக பிசிசிஐ கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

பிசிசிஐயில் லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து 4-ஆவது இடைக்கால அறிக்கையை பிசிசிஐ நிர்வாகக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களான என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் தங்களின் தனிப்பட்ட ஆதாயத்துக்காக பிசிசிஐயில் லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்தவிடாமல் தடையாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியாக பிசிசிஐ கூட்டங்களில் எப்படி பங்கேற்க முடியும்? இது தொடர்பாக என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். பிசிசிஐ நிர்வாகக் குழுவின் 4-ஆவது இடைக்கால அறிக்கை மீதான விசாரணை வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது என்.சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என கூறியது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பிசிசிஐ கூட்டங்களில் தடையை மீறி என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா பங்கேற்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நாளை மறுநாள் நடக்கும் பிசிசிஐ சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகிய இருவரும் பங்கேற்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com