தோல்வி ஏன்?: கேப்டன் மிதாலி ராஜ் விளக்கம்

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது...
தோல்வி ஏன்?: கேப்டன் மிதாலி ராஜ் விளக்கம்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 4-ஆவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து. அதேநேரத்தில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி, 48.4 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.4.25 கோடியும், இரண்டாவது இடம்பிடித்த இந்திய அணிக்கு ரூ.2.12 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்தபிறகு இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறியதாவது: 

இறுதிச்சுற்று என்பதால் எல்லோரும் ஒருவிதப் பதற்றத்தில் இருந்தார்கள். அது தோல்வியாக மாறிவிட்டது. வீராங்கனைகள் மிகவும் சோகத்தில் உள்ளார்கள். மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரும்பங்கு வகித்துள்ளார்கள். எனவே அவர்களின் செயலை எண்ணி பெருமிதப்படவேண்டும்.

கடைசி நான்கைந்து வீராங்கனைகளால் அழுத்தத்தைத் தாங்கமுடியவில்லை. ஒருசமயத்தில் ஆட்டம் இருதரப்புக்கும் சாதகமாக இருந்தது. அந்தச் சமயத்தில்தான் நாங்கள் எங்கள் திறமையை வெளிப்படுத்தவில்லை. அதேபோல இங்கிலாந்து அணியின் பந்துவீச்சும் ஃபீல்டிங்கும் அற்புதமாக இருந்தன. கடைசி நேரத்தில் நாங்கள் தடுமாறிவிட்டோம். சரியான அனுபவமின்றி தோல்வியைச் சந்தித்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com