ஒலிம்பிக் பதக்க வாய்ப்புள்ளவர்கள் பட்டியல்: சிவ தாபாவை நீக்க பரிந்துரையா? மேரி கோம் மறுப்பு

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருந்து முன்னணி குத்துச்சண்டை வீரரான சிவ தாபாவை நீக்குமாறு பரிந்துரை எதுவும் செய்யவில்லை என இந்திய குத்துச்சண்டை
ஒலிம்பிக் பதக்க வாய்ப்புள்ளவர்கள் பட்டியல்: சிவ தாபாவை நீக்க பரிந்துரையா? மேரி கோம் மறுப்பு

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருந்து முன்னணி குத்துச்சண்டை வீரரான சிவ தாபாவை நீக்குமாறு பரிந்துரை எதுவும் செய்யவில்லை என இந்திய குத்துச்சண்டை வீராங்கனையும், எம்.பி.யுமான மேரி கோம் தெரிவித்துள்ளார்.

23 வயதான சிவ தாபா, 2015-இல் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவர். இதுதவிர சமீபத்தில் கிர்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி வென்றுள்ளார். அடுத்ததாக நடைபெறவுள்ள உலக குத்துச்சண்டை போட்டிக்காக பிரான்ஸில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் சிவ தாபா இடம்பெற்றுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் செய்து கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் குத்துச்சண்டைக்கான பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மேரி கோம், அகில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள இந்திய வீரர்கள் பட்டியலில் இருந்து சிவ தாபாவின் பெயரை நீக்கும்படி மேரி கோம் பரிந்துரைத்ததாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.
இதையடுத்து அதை மறுத்துள்ள மேரி கோம், அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவ தாபாவின் ஆதிக்கம் முடிந்துவிட்டதாகவும், அதனால் அவரால் 2020-இல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் எதையும் சாதிக்க முடியாது எனவும் நான் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அது முற்றிலும் தவறானதாகும். எனது நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அந்த செய்தி உள்ளது.
சிவ தாபாவின் ஆதிக்கம் முடிந்துவிட்டது என்றோ, அவரை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றோ நான் கூறவில்லை. குத்துச்சண்டை போட்டியில் சாதிப்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு வீரரை தவறாக சித்திரித்திருப்பதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மனோஜ் குமாரின் ஆதிக்கமும் முடிந்துவிட்டதாக மேரி கோம் கூறியதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அதையும் மறுத்துள்ள மேரிகோம், "மனோஜ் குமார் அதிக வயதாகிவிட்டது என நான் ஒருபோதும் சுட்டிக்காட்டவில்லை. நான் உண்மையிலேயே அதுபோன்று கூறினேனா என விசாரிக்காமல், எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com