முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்: இலங்கையிலும் சாதிக்குமா கோலி படை?

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இலங்கை காலேவில் நாளை தொடங்குகிறது... 
முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்: இலங்கையிலும் சாதிக்குமா கோலி படை?

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இலங்கை காலேவில் நாளை தொடங்குகிறது. 

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவிலும், 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொழும்பிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கண்டியிலும் தொடங்குகிறது.

கடந்தமுறை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததால் இந்தமுறை இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை களமிறங்கும் நிலையில், இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்திய அணி முயற்சி மேற்கொள்ளும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 7 இன்னிங்ஸ்களில் விளையாடி, அதில் 6 அரை சதங்களை விளாசிய கே.எல்.ராகுல் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அதனால் ஐபிஎல், சாம்பியன்ஸ் டிராபி, மேற்கிந்தியத் தீவுகள் தொடர் ஆகியவற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கும் அவர், எதிர்பாராத விதத்தில் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து வைரஸ் காய்ச்சல் காரணமாக விலகியுள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அரை சதமடித்த ராகுல், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றாக அமைந்துள்ளது. அவர், இந்திய அணியினருடன் காலேவுக்கு செல்லவில்லை. தொடர்ந்து கொழும்பிலேயே தங்கியிருக்கிறார். காலேவுக்கு செல்லவில்லை. தொடர்ந்து கொழும்பிலேயே தங்கியிருக்கிறார். கே.எல்.ராகுல் விலகியிருப்பதால், முதல் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவனும், அபிநவ் முகுந்தும் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வீரர் முரளி விஜய்யும் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் தவனும் முகுந்தும் இணைந்து சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தருவது முக்கியமானதாகும்.

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் புஜாரா, கேப்டன் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா என வலுவான பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் வலுவாக உள்ளது. 

காயத்திலிருந்து மீண்டு டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ள ரோஹித் சர்மாவுக்கு இது மிக முக்கியமான ஆட்டமாகும். கடந்த அக்டோபரில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ரோஹித் சர்மா, அதன்பிறகு தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனால் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவர் விளையாடவில்லை. காயத்திலிருந்து மீண்ட பிறகு ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா, கடந்த மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தார். எனினும் காயத்திலிருந்து மீண்ட பிறகு முதல் தர கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. 

வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணியையும் நம்பியுள்ளது இந்தியா. கடந்த ஒரு வருடமாக அசத்தலாகப் பந்துவீசி வரும் அஸ்வின், ஜடேஜா கூட்டணி, இந்தப் போட்டியிலும் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி இரு நாள்களில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய மூவரையும் களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால் குல்தீப் யாதவுக்குப் பதிலாக பாண்டியா களமிறங்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது 50-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்க காத்திருக்கிறார். காலேவில் வரும் புதன்கிழமை தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும்போது 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார். இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள காலே மைதானம் நான் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மைதானம் ஆகும். நான் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பிய நேரத்தில் 10 விக்கெட் வீழ்த்தியதால் அது எனக்கு சிறப்புமிக்க தருணமாக அமைந்தது. இப்போது மீண்டும் காலேவில் விளையாடவிருப்பது முந்தைய இனிமையான நினைவுகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது என அஸ்வின் கூறியுள்ளார். 

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சன்டிமல் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக ரங்கனா ஹெராத் கேப்டனாக செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சன்டிமலுக்குப் பதிலாக குணதிலகா அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உபுல் தரங்கா, திமுத் கருணாரத்னே, குஷல் மென்டிஸ், தனுஷ்கா குணதிலகா, ஏஞ்செலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் முதல் ஆறு பேட்ஸ்மேன்களாகக் களமிங்குவார்கள்.

டெஸ்ட் போட்டியில் விளையாடாத 30 வயது இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மலிந்தா புஷ்பகுமாரா இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் 558 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் லக்ஷன் சன்டாகனுக்குப் பதிலாக மலிந்தா இடம்பெற்றுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரே டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 388 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இலங்கை, ஆட்டத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை 114.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து வென்றது. இலங்கை அணி தற்போது எட்டியுள்ள இந்த இலக்கு, ஆசியாவிலேயே அதிகபட்சமானதும், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை எட்டப்பட்டதிலேயே 5-ஆவது பெரிய இலக்கும் ஆகும். ஆட்டநாயகன் விருதை குணரத்னேவும், தொடர் நாயகன் விருதை ரங்கனா ஹெராத்தும் பெற்றனர். அதே உற்சாகத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த்.

இலங்கை அணி விவரம்: ரங்கனா ஹெராத் (கேப்டன்), உபுல் தரங்கா, திமுத் கருணாரத்னே, குஷல் மென்டிஸ், ஏஞ்செலோ மேத்யூஸ், அசேல குணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, தில்ருவன் பெரேரா, சுரங்கா லக்மல், லஹிரு திரிமானி, விஸ்வா பெர்னாண்டோ, மலிந்தா புஷ்பகுமாரா, நுவான் பிரதீப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com