பதற்றத்தால் தோற்றோம்: மிதாலி ராஜ்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பதற்றம் காரணமாகவே இங்கிலாந்திடம் தோற்றோம் என்று இந்திய கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
பதற்றத்தால் தோற்றோம்: மிதாலி ராஜ்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பதற்றம் காரணமாகவே இங்கிலாந்திடம் தோற்றோம் என்று இந்திய கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. கடைசி 28 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்ததால், இந்தியாவின் கோப்பை கனவு நழுவியது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மிதாலி ராஜ் கூறியதாவது:
இந்தியாவில் அடுத்த தலைமுறை வீராங்கனைகளுக்கு எங்கள் வீராங்கனைகள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஏராளமான வீராங்கனைகள் கிரிக்கெட்டை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் வீராங்கனைகளை நினைத்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
இறுதி ஆட்டத்தில் எங்கள் வீராங்கனைகள் பதற்றமடைந்ததே தோல்விக்கு காரணம். பதற்றமான தருணங்களை சமாளிக்க அனுபவம் அவசியம். ஆனால் எங்கள் வீராங்கனைகளிடம் போதுமான அனுபவம் இல்லை. அதன் காரணமாகவே வெற்றி பெற முடியாமல் போனது. எனினும் இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் எங்கள் வீராங்கனைகள் போராடியவிதம் பெருமையளிக்கிறது.
இறுதி ஆட்டத்தின் கடைசியில் நாங்கள் தோற்றிருந்தாலும், பூனம் ரெளத் துணிச்சலான ஒரு இன்னிங்ஸை ஆடினார். அதேநேரத்தில் மிடில் ஆர்டரில் பின்வரிசை வீராங்கனைகள் சிறப்பாக ஆடி ரன் குவிப்பது அவசியமாகும். ஆனால் அதுதான் இந்திய அணிக்கு நீண்ட நாள் பிரச்னையாக உள்ளது.
பொதுமக்களிடம் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களால் பிசிசிஐயும் பெருமையடைந்திருக்கும் என நம்புகிறேன். நாங்கள் குரூப் சுற்றில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றோம். அப்போது நாங்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவோம் என யாருமே நினைத்திருக்கமாட்டார்கள். மகளிர் கிரிக்கெட்டுக்கும் ஐபிஎல் போட்டி தேவை. அதை உருவாக்குவதற்கு இது சரியான நேரம் என நினைக்கிறேன் என்றார்.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை இங்கிலாந்திடம் இழந்திருந்தாலும், தங்களுடைய சிறப்பான ஆட்டத்தால் 100 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களின் இதயங்களை வென்றுவிட்டது. நாடு முழுவதும் இந்திய வீராங்கனைகளை பாராட்டி ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமானோரின் வாழ்த்து மழையில் இந்திய வீராங்கனைகள் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசம் சார்பில் ரூ.50 லட்சம்
 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய அணிக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் சுட்டுரையில் கூறியிருப்பதாவது: மகளிர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு போபாலில் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படும். அப்போது அவர்களுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஹர்மன்பிரீத் கெளருக்கு டிஎஸ்பி பதவி
 உலகக் கோப்பையில் அசத்திய பஞ்சாப் வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளருக்கு துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது பஞ்சாப் மாநில அரசு.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஹர்மன்பிரீத் கெளர் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்ததைத் தொடர்ந்து அவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு பஞ்சாப் காவல் துறையில் டிஎஸ்பி பதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ள அமரீந்தர் சிங்,மேலும் கூறியிருப்பதாவது: பஞ்சாப் காவல் துறையில் பணியாற்ற சில ஆண்டுகளுக்கு முன்பு ஹர்மன்பிரீத் கெளர் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அப்போதைய முதல்வர் பாதல் தலைமையிலான அரசு, தேசிய அணிக்காக விளையாடும் ஒருவருக்கு காவல் துறையில் பணி வழங்க முடியாது எனக் கூறி அவருடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டது. நான் அந்தத் தவறை சரி செய்ய விரும்புகிறேன். அதன் காரணமாகவே ஹர்மன்பிரீத் கெளருக்கு டிஎஸ்பி பதவி வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹர்மன்பிரீத் கெளர் போன்ற இளம் வீராங்கனைகளுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மாநில அரசுப் பணி வழங்குவது தொடர்பாக விதிமுறைகள் மாற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா!
உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகள் கூறியதாவது: இந்திய வீராங்கனைகள் இங்கிலாந்தில் இருந்து வரும் புதன்கிழமை முதல் நாடு திரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் நாடு திரும்பியதும் பாராட்டு விழா நடத்தப்படும். பாராட்டு விழா நடைபெறும் தேதி, இடம் ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பாராட்டு விழாவின்போது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி வீராங்கனைகள் அனைவருக்கும் தலா ரூ.50 லட்சமும், பயிற்சியாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூ.25 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். இதுதவிர பிரதமர் நரேந்திர மோடியை இந்திய வீராங்கனைகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவதற்கும் பிசிசிஐ முயற்சித்து வருகிறது என தெரிவித்தனர்.
ஐசிசி கனவு அணிக்கு மிதாலி ராஜ் கேப்டன்
ஐசிசி மகளிர் கனவு அணியின் கேப்டனாக இந்திய கேப்டன் மிதாலி ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது கனவு அணியை அறிவித்துள்ளது. அதன்படி மிதாலி ராஜ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் மிதாலி ராஜ் 409 ரன்கள் குவித்தார். நியூஸிலாந்துக்கு எதிரான குரூப் சுற்று ஆட்டத்தில் அவர் 109 ரன்கள் குவித்து இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு உதவினார். இங்கிலாந்துக்கு எதிரான குரூப் சுற்றில் 71, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 46, இலங்கைக்கு எதிராக 53, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 69 ரன்களை குவித்து அசத்தினார் மிதாலி ராஜ்.
ஐசிசி கனவு அணியில் மிதாலி ராஜ் தவிர, ஹர்மன்பிரீத் கெளர், தீப்தி சர்மா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணி சார்பில் டேமி பியூமான்ட், அன்யா ஷ்ரப்சோல், விக்கெட் கீப்பர் சாரா டெய்லர், இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அலெக்ஸ் ஹர்ட்லி ஆகியோர் 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து தொடக்க வீராங்கனை லாரா வால்வார்ட், மெரிஸானே காப், டேன் வான் நீகெர்க் ஆகிய மூன்று பேரும், ஆஸ்திரேலியாவின் சார்பில் எல்லிஸ் பெர்ரியும் இடம்பெற்றுள்ளனர். இந்த உலகக் கோப்பை போட்டியில் 369 ரன்கள் குவித்ததோடு, 7 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவெர் 12-ஆவது வீராங்கனையாக இடம்பெற்றுள்ளார்.
மிதாலி ராஜ், சாரா டெய்லர், ஷரப்சோல் ஆகியோர் ஐசிசி கனவு அணியில் இடம்பெறுவது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்னர் 2009-இல் ஐசிசி கனவு அணியில் இடம்பிடித்துள்ளார் மிதாலி ராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com