காலே டெஸ்ட்: ஷிகர் தவன் அபார சதம்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன் அபாரமாக விளையாடி சதம் எடுத்துள்ளார்.
காலே டெஸ்ட்: ஷிகர் தவன் அபார சதம்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன் அபாரமாக விளையாடி சதம் எடுத்துள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், இலங்கையின் காலே நகரில் இன்று தொடங்கியுள்ளது. இதே காலே மைதானத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் 176 ரன்கள் என்ற இலக்கை எட்டும் முயற்சியில், 112 ரன்களில் வீழ்ந்து மோசமான தோல்வியைத் தழுவியது இந்தியா. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கலாம். 2015-ஆம் ஆண்டு தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறவில்லை. ஹார்தி பாண்டியா அறிமுகமாகியுள்ளார். சமி, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் வேகப்பந்துவீச்சாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு இது 50-வது டெஸ்ட் போட்டியாகும். இதேபோல இலங்கை அணியில் குணதிலகா அறிமுகமாகியுள்ளார்.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய தவனும் முகுந்தும் கவனமாக விளையாடினார்கள். இரண்டு பவுண்டரிகள் அடித்த முகுந்த், பிரதீப்பின் பந்துவீச்சில் 12 ரன்களில் வெளியேறினார். அடுத்த டெஸ்ட் போட்டியில் ராகுல் விளையாடும் வாய்ப்புள்ளதால் இந்த டெஸ்டில் தன்னை நிரூபித்தால் மட்டுமே அடுத்த டெஸ்டில் முகுந்தால் விளையாடமுடியும். எனவே இரண்டாவது இன்னிங்ஸில் அவர் திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகுந்த் வெளியேறியபிறகு கூட்டணி சேர்ந்த தவன் - புஜாரா ஆகிய இருவரும் பொறுப்புடன் விளையாடினார்கள். வழக்கத்தை விடவும் இன்று வேகமாக ரன்கள் குவித்தார் தவன். இதனால் 62 பந்துகளில் அரை சதம் எடுத்தார் தவன். இந்திய அணி 24.4 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்தது. மறுபக்கம் புஜாரா தவனுக்கு நல்ல இணையாக விளங்கினார். அவரும் ரன்கள் குவிப்பதில் ஆர்வம் செலுத்தினார்.

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 27 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. தவன் 64, புஜாரா 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இதன்பிறகு சிறப்பாக விளையாடிய தவன், 110 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்திய அணி 36-வது ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com