புரோ கபடி: யு-மும்பா "த்ரில்' வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் யு-மும்பா அணி 29-28 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியாணா ரைடரை மடக்கிய யு-மும்பா அணியினர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியாணா ரைடரை மடக்கிய யு-மும்பா அணியினர்.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் யு-மும்பா அணி 29-28 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இரு அணிகளும் தங்கள் ரைடின் மூலம் புள்ளிகளைப் பெற்றன. இதன்பிறகு 15-ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் 8-8 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதன்பிறகு ஆட்டம் ஹரியாணா வசமானது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அந்த அணி, பின்னர் 10-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதேநேரத்தில், கேப்டன் அனுப் குமாரின் அசத்தலான ரைடால், ஆல் அவுட்டாவதிலிருந்து தப்பியது யு-மும்பா அணி. முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஹரியாணா 15-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
சரிவிலிருந்து மீண்ட யு-மும்பா: பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் முதல் 6 நிமிடங்கள் தடுமாறியது யு-மும்பா அணி. இதனால் ஒரு கட்டத்தில் அந்த அணி 12-19 என்ற கணக்கில் பின்தங்கியது. ஆனால் 27-ஆவது நிமிடத்தில் யு-மும்பா அணி சூப்பர் டேக்கிள் மூலம் இரு புள்ளிகளைப் பெற, அதுவே திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து அந்த அணியின் நட்சத்திர ரைடரான காஷிலிங் அடாகே சூப்பர் ரைடு மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். இதனால் யு-மும்பா அணி ஸ்கோரை சமன் செய்யும் வாய்ப்பை (18-19) நெருங்கியது.
30-ஆவது நிமிடத்தில் யு-மும்பா கேப்டன் அனுப் குமார் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி 22-20 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு ஹரியாணா அணி, கடுமையாகப் போராடியபோதும், யு-மும்பாவின் முன்னிலையை நெருங்க முடிந்ததே தவிர, தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இறுதியில் யு-மும்பா அணி 29-28 என்ற கணக்கில் "த்ரில்' வெற்றி கண்டது. யு-மும்பா ரைடர் காஷிலிங் அடாகே 7 புள்ளிகளைப் பெற்றார்.
பெங்களூரு வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 31-21 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.

தோல்வி ஏன்?

தோல்வி குறித்து ஹரியாணா கேப்டன் சுரேந்தர் கூறுகையில், "அனுப் குமாருடன் நான் ஏற்கெனவே விளையாடியிருக்கிறேன். அவருடைய ஆட்டம் குறித்து எனக்கு முழுமையாக தெரியும். அதனால் அவரைப் பிடிக்க சில திட்டங்களை வகுத்திருந்தோம். ஆனால் அதை புரிந்துகொண்ட அனுப் குமார், தனது ஆட்ட உத்திகளை மாற்றி விளையாடி புள்ளிகளைப் பெற்றார். அவரை எங்களால் பிடிக்க முடியவில்லை' என்றார்.
ஹரியாணாவின் மற்றொரு முன்னணி வீரரான வாஸிர் சிங் கூறுகையில், "காஷிலிங்கின் சூப்பர் ரைடுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. அதனால் நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம். எங்கள் ஆட்டத்தில் வேகம் குறைந்துவிட்டது' என்றார்.
இன்று விடுமுறை: திங்கள்கிழமை ஆட்டம் எதுவும் கிடையாது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் குஜராத்-டெல்லி அணிகளும், 2-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ்-யு.பி.யோதா அணிகளும் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் முறையே இரவு 8 மற்றும் 9 மணிக்கு தொடங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com